காணாமல் போன பூனை..!
பெரும்பாலான நேரங்களில் நம் வீட்டிற்குள் வாழும் பிராணிகள் நம்முடன் பிரிய முடியாத உறவாகி விடுகிறது. அப்படி ஒரு நாயையோ, கிளியையோ பூனையையோ வளர்த்து விட்டு ஒரு முறை பிரிந்து விட்டால் நம்மால் அடுத்து எந்த உயிரினத்தையும் வளர்க்க முடியாது. மனமும் வராது. பள்ளி வயதில் கிளி வளர்த்த நினைவு இருக்கிறது. பத்து மாதங்கள் வரை கூடவே வைத்து சுற்றிக் கொண்டிருந்தேன். வெளியூர் சென்ற நாட்களில் கூட கிளியை கூண்டோடு தூக்கிக் கொண்டு சென்றிருக்கிறேன். ஆனால் பூனை கிளியை கொன்று தூக்கி சென்றதில் இருந்து இன்று வரை என்னால் எந்த உயிரினத்தையும் வளர்க்க மனம் வர வில்லை. பிரிவின் வலியை ஒருமுறை முழுமையாக உணர்ந்து விட்டால் போதும் இனிமேல் எந்தவித நெருக்கமான உறவையும் நம்மால் ஏற்படுத்திக் கொள்ள முடியாது. அப்படியான உறவுகள் அமைந்தாலும் மனதளவில் நாம் விலகியே இருக்கிறோம். இந்த கதையிலும் வருகிற அம்மா கதாபாத்திரம் கூட பூனைகள் மீது பாசமாக இருக்கிறாள். வீட்டிற்குள் பூனைகள் வளரும் வரை அவள் குடும்பத்தை யாராலும் பிரிக்க முடியாது என்று நம்புகிறாள். சில உயிரினங்கள் நம்மோடு வாழ பழகி நம்மைப் போலவே மாறி விடுகின்றன. மனிதர்களை போலவே க...