காணாமல் போன பூனை..!

பெரும்பாலான நேரங்களில் நம் வீட்டிற்குள் வாழும் பிராணிகள் நம்முடன் பிரிய முடியாத உறவாகி விடுகிறது. அப்படி ஒரு நாயையோ, கிளியையோ பூனையையோ வளர்த்து விட்டு ஒரு முறை பிரிந்து விட்டால் நம்மால் அடுத்து எந்த உயிரினத்தையும் வளர்க்க முடியாது. மனமும் வராது. பள்ளி வயதில் கிளி வளர்த்த நினைவு இருக்கிறது. பத்து மாதங்கள் வரை கூடவே வைத்து சுற்றிக் கொண்டிருந்தேன். வெளியூர் சென்ற நாட்களில் கூட கிளியை கூண்டோடு தூக்கிக் கொண்டு சென்றிருக்கிறேன். ஆனால் பூனை கிளியை கொன்று தூக்கி சென்றதில் இருந்து இன்று வரை என்னால் எந்த உயிரினத்தையும் வளர்க்க மனம் வர வில்லை. பிரிவின் வலியை ஒருமுறை முழுமையாக உணர்ந்து விட்டால் போதும் இனிமேல் எந்தவித நெருக்கமான உறவையும் நம்மால் ஏற்படுத்திக் கொள்ள முடியாது. அப்படியான உறவுகள் அமைந்தாலும் மனதளவில் நாம் விலகியே இருக்கிறோம். இந்த கதையிலும் வருகிற அம்மா கதாபாத்திரம் கூட பூனைகள் மீது பாசமாக இருக்கிறாள். வீட்டிற்குள் பூனைகள் வளரும் வரை அவள் குடும்பத்தை யாராலும் பிரிக்க முடியாது என்று நம்புகிறாள். சில உயிரினங்கள் நம்மோடு வாழ பழகி நம்மைப் போலவே மாறி விடுகின்றன. மனிதர்களை போலவே குணங்கள் அவைகளுக்கும் வந்து விடுகின்றன. ஆனால் அதே சமயம் விலங்குகள் எப்போதும் வேண்டுமானாலும் விலங்காக மாறிவிடும். லைப் ஆப் பை படத்தில் கடலில் புலியோடு மாட்டிக்கொண்ட பை உயிருக்கு போராடுகிறான். அவனோடு புலியும் வருகிறது. புலியோடு ஓரே படகில் மாட்டிக் கொண்டு தப்பிக்க போராடுகிறான். புலி அவனை தின்பதற்கு காத்துக் கொண்டிருக்கிறது. எந்த விலங்கின் கண்களிலும் நம்முடைய உணர்வைதான் பிம்பமாக பார்க்கிறோம் என்று தந்தை கூறிய வார்த்தைகளை நினைவு கூர்கிறான். புலியோடு வாழ பழகுகிறான். ஒரு கட்டத்தில் சகோதரணை போலவே ஆகி விடுகிறார்கள் அவனும் புலியும். ஆனால் கரை சேர்ந்ததும் புலி அவனை தூண்டித்து சென்று விடுகிறது. எல்லா மிருகங்களையும் மனிதர்கள் அன்பால் வென்று விட முடியாது. இந்த கதையில் வருகிற பூனையும் அப்படித்தான். அம்மா பூனையை தான் சொந்த பிள்ளையை போலவே நடந்துகிறாள். 


அம்மாவை போலவே அப்பாவும் ஒரு அழியாத கதா பாத்திரம் ஆகிறார். அப்பாவின் பாசமே கிடைக்காத மனிதர்களுக்கு இப்படி கறாரான அப்பா இருந்தால் கூட போதும் என்றுதான் தோன்றுகிறது. நினைவுகளில் வாழும் அம்மா அப்பாக்கள் மறக்க முடியாத குழந்தைகளாக மாறி விடுகிறார்கள். ஒரு கட்டத்தில் குடும்ப உறவுகளின் தொடர்பு நினைவுகளின் வழியே தான் என்பதுதான் நிஜம். ஆனால் அந்த நினைவுகள் அவ்வளவு துல்லியமாக இருப்பதில்லை. நினைவுகளில் வாழும் மனிதர்கள் தண்ணீரில் நனையும் காகிதம் போலவே பிரிந்து கொண்டே போகிறார்கள்.இந்த கதையில் வருகிற மனிதர்களின் முகம் நினைவில் இல்லை. நடத்தையும் விசித்திரமான நினைவுகளுமே நினைவிருக்கிறது. 
சந்திராவின் இந்த சிறுகதை வீட்டை பற்றிய நினைவுகளை ஆழமாக சொல்கிறது. ஏன் நினைவுகள் மட்டுமே வாழ்வில் எஞ்சி நிற்கிறது? ஏன் நம்மால் மறுபடியும் அப்படியான நாட்களுக்கு திரும்பி செல்ல முடிவதில்லை? என்பது வாழ்வின் புரியாத அர்த்தங்களில் ஒன்று. வீட்டிற்குள் வந்து செல்லும் பூனை என்பது அவர்களின் சந்தோசத்தின் அடையாளம். அந்த பூனை காணாமல் போகிற போது அந்த மனிதர்கள் வாழ்வில் தொலைந்து போகிறார்கள். 
ரயில் பயணத்தில் செல்போனில் வாசித்த சிறுகதை என்றாலும் மறக்க முடியாத அந்த பூனையும் அம்மாவும் நமக்கு தனிமையும் புரிந்து கொள்ளப் படாமல் போகும் வலியையும் உணர்த்துகிறது. 

சிறுகதை : பூனைகள் இல்லாத வீடு 
எழுத்தாளர் : சந்திரா 

Comments

Popular posts from this blog

செகண்ட் ஷோ நினைவுகள்

சுருளி நினைவுகள் பகுதி -1

சுருளி நினைவுகள் பகுதி -2 : ( கடவுள் எனும் நண்பன் )