சுருளி நினைவுகள் பகுதி -2 : ( கடவுள் எனும் நண்பன் )

கோடிலிங்கத்தின் பிரமாண்டமான சிலையின் மீது நின்று கொண்டிருந்தோம். மனம் அனைத்து கழிவுகளையும் துறந்து மேலெழும்பி நிற்கும் தூய நிலையது. மனிதனை அவனது அத்தனை கசப்புகளையும் வேதனைகளிலிருந்தும் எதோவொரு நம்பிக்கையே மீட்டேடுக்கிறது. இந்த கோவில் ஆசியாவிலேயே மிகப் பெரிய 72 அடி நீளமுள்ள சிவலிங்கம் உருவிலான கோவில். சுருளி அருவியில் குளித்துவிட்டு உடை மாற்றிக் கொண்டு பூஜைக்கான பொருட்களை வாங்கிவிட்டு நடந்தோம். கொஞ்சம் உயர்ந்த மேட்டில் இடதுபுறம் முழுவதும் திராட்சைத் தோட்டம் கொண்ட ஒற்றையடிப் பாதையில் நடந்தோம். சுற்றிலும் தென்னந்தோப்பும் உயர்ந்து வளர்ந்த மரங்களும் கொண்ட மலைப்பாதை ஏறிச் சென்றது. வேளாண் பயற்சி முகாம் ஒன்றும் மௌன சித்தர் கோவில் மடமும் இருந்தன. திராட்சை பழங்களை அறுவடை செய்து கொண்டிருந்தார்கள். அதில் முதல் கொத்து பழங்களை கடவுளுக்கு படையல் போடும்படியாக சின்ன டப்பாவில் போட்டு வெளியே காட்சிக்கு வைத்திருந்தனர். ஒரு பழத்தை எடுத்துத் தின்றேன். நல்ல புளிப்பும் இனிப்புமாக சுவை தலைக் கேறியது. 

கோடிலிங்கம் கோவில் சுருளியருவிக் கரையில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது. அந்த கோவினுள் ஆயிரக் கணக்கான சின்ன சின்ன லிங்கங்களை காட்சிக்கு வைத்திருந்தனர். பல கற்சிற்பங்களுக்கு இடையே பதினேட்டு சித்தர்களின் சிலைகள். போகர், நாதமுனி, அகத்தியர், விவேகானந்தர், வள்ளலார், என்று ஒவ்வொரு சிலையாக எண்ணிக் கொண்டே வந்தேன். நட்சத்திரங்களைப் போல எண்ண முடியாத அதிசயம். 
நடந்து வந்த களைப்பு நீங்க அங்குள்ள நடராஜர் கோவில் மண்டபத்தில் அமர்ந்து தியானம் செய்தோம். 

மணி பன்னிரெண்டு கடந்து விட்டிருந்தது. மேகம் மூடக்ககாகயிருந்து மெல்லிய மழைச் சாரல் விழுந்து கொண்டிருந்தது. ஒவ்வொரு படிக்கட்டுக்களாக கோவில் உயர்ந்து கொண்டே சென்றது. கோடிலிங்கக் கோவினுள் செல்ல நுழைவுக் கட்டணமாக 50ரூபாய் கேட்டார்கள். செல்போன், கேமிரா எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. நுழைவுக் கட்டணம் வாங்கி உள்ளே சென்றதும் லிங்கக் கோவிலின் அடிப்பகுதி நுழைவு வாயிலில் நின்ற கோலத்தில் மாபெரும் விநாயகர் சிலை காட்சியளித்தது. அதைத் தொடர்ந்து இட மற்றும் வலது புறமாக படிக்கட்டுக்கள் அமைக்கப் படிருந்தது. இடது புறம் ஏறி வலது புறம் இறங்க வேண்டும். 

கிழிருந்து மேலாக மூன்று நிலையில் அதன் உட்புறம் வடிவமைக்கப் பட்டிருந்தது. சிவலிங்கத்தின் அடிபகுதியில் விநாயகர் சிலை. அதன் நடுபகுதியில் பாற்கடலில் பள்ளி கொண்ட பெருமாள் சயனக் கோலத்தில் இருந்தார். அந்த பகுதி முழுவதும் சுற்றி விஷ்ணுவின் அவதாரங்களை காட்சிக்கு வைத்திருந்தனர். இடையே ஒவ்வொரு மூலையிலும் பெரிய பெரிய பித்தளை விளக்குகள். மேல்பகுதியான மூன்றாம் பகுதியில்தான் கைலாயம் உள்ளது. படிக்கட்டுகளில் ஏறி மேலே சென்றோம். சிவன் பார்வதியோடு சிவ-சக்தி ரூபமாக திருமணக் கோலத்தில் காட்சியளித்தார். சுற்றிலும் தேவர்களின் தேவ கான இசை கச்சேரியை விளக்கும் அற்புத சிலைகள். உண்மையில் சிவ - சக்தி திருமணத்தில் கலந்து கொண்டதைப் போலவே உணர்ந்தோம். கோவிலின் உட்புறம் அவ்வளவு சுத்தமாக அருகில் இருக்கும் நண்பனின் மூச்சுக் காற்று செவியில் கேட்கும் அளவிற்கு அமைதி. எங்கும் அமைதி. பெரிய ஆச்சர்யம் என்னவெனில் சிவ பார்வதியின் சிலைகள் சமஅளவில் அமைக்கப்பட்டிருந்தது. 

அனைவரது வாழ்விலும் ஆண் - பெண் சமத்துவம் எத்தனை முக்கியம் என்பதை நாம் வழிபடும் அனைத்து கடவுள்களும் வலியுறுத்தியே வந்திருகிறார்கள். மனிதனின் கற்பிதம் செய்து கொண்ட சில மதக் கருத்துக்களும் கொள்கைகளுமே சமூகத்தை சீர்குலைக்கின்றன. சாதி, மதம், பாகுபாடு, பேதம், ஆதிக்க அரசியல் காரணங்களால் ஒரு மனிதன் இன்னொரு மனிதனை,  உயிரை அடிமையாக பார்ப்பதை விடுத்து தன்னைப் போலவே பிறரையும் நினைத்து வாழ முற்பட வேண்டும். அதற்கு கடவுள்களும் ஆன்மீகத்தை வாழ்வாக கொண்டு வாழ்ந்து மறைந்த வள்ளலார், ரமணர், விவேகானந்தர் போன்ற புனிதத் துறவிகள் 
லட்சியமாக ஏற்று வாழ்ந்து சமத்துவத்தை பரிவையும் அன்பையும் அறத்தையும் நீதியையும் உணர்த்தி விட்டு சென்றுள்ளனர். மதம் தேவையா இல்லையா என்பதை விட சமய உணர்வும் ஆன்மிக உணர்வும் மனிதனுக்கு தேவை என்று ஓஷோ குறிப்பிடுகிறார். அதாவது மதம் என்பது ஒரு நிறுவனம். அது செயற்கையானது. உண்மையான கடவுளை வரலாறு சொல்லும் உண்மையைக் கொண்டு பகுத்தறிந்து தெரிந்து கொண்டு வாழ்வை புரிந்து கொண்டு வாழ்வது நமது கடமை. எழுத்தாளர் தஸ்தாயேவ்ஸ்கி குறிப்பிட்டதை போல கடவுள் இந்தவுலகில் இரண்டு வகையாக இருக்கிறார். ஒன்று கடவுளாக இன்னொன்று கவிஞராக. சில கவிதைகள் மற்றும் அதை எழுதிய கவிஞர்களின் வார்த்தைகள் நம்மை கடவுளின் புனித இருப்பிற்கு இணையான அனுபவத்தை தருகின்றன என்பது நிஜம். கடவுள் என்பது ஒரு அனுபவம். பரிசுத்த இருப்பின் மேன்மை பொருந்திய நிலை. அதை அடைய புரிதல் முயற்சி அவசியம்.
கோடி லிங்கம் கோவில் வருகிறவர்களுக்கு ருத்ராட்சம், பச்சைக் கயிறு, ஆன்மிக புத்தகங்கள் விற்பனைக்கு வைத்திருந்தனர். லிங்க வடிவக் கோயிலின் மேற்புறம் சென்று மனம் லயித்துப் போய் உட்கார்ந்திருந்தேன். நாங்களே மாபெரும் லிங்கத்திற்குள் இருக்கிறோம் என்ற பிரக்ஞனை தோன்றியது. இயற்கையின் ஒரு பகுதியாக மரத்தின் ஒரு இலையாக மழை நீர் கடலில் அங்கமாவதைப் போல. ஆழ்ந்த மனதின் அமைதியோடு எதைஎதையோ பிரார்த்தனை செய்து கொண்டு எனக்குள் மௌனமாக இருந்தேன். இறைமையில் இருப்பதை விடவும் ஒரு மோன நிலையும் நிம்மதியும் வேறெதிலும் இல்லை. மனதின் அனைத்து கசடுகளையும் குழப்பங்களையும் நீக்கி புதிதாக குளித்து விட்டு வந்த பரிசுத்த நிலையில் இருப்பதை போல உணர்ந்தேன். நானே சிவனுக்குள் எனைக் கரைத்துக் கொண்டிருந்தேன். உயர்ந்த லிங்கக் கோவிலின் மேல் மழை பெய்யத் தொடங்கியது. பிரமாண்ட சிவலிங்கத்தின் மீது பட்டு என் மீது தெரித்தது. அது சிவனின் ஆசீர்வாதமா இயற்கையின் பெருங்கருணையா என்ற பிரமிப்பு அகலவில்லை. நண்பன் ஒருவன் அது சிவனின் அபிஷேகம் என்றும் இயற்கை கடவுளை அபிஷேகம் செய்கிறது என்று ஆனந்தத்தோடு சொன்னான். இயற்கையும் கடவுளும் அனைத்திற்கும் சாட்சியாக நிற்கும் இந்த நிகழ்காலமும் ஒன்றாக சங்கமிக்கும் அற்புத தருணம் அமைந்ததற்கு நன்றி சொல்லிக் கொண்டேன். 
மழை விட்டதும் சில பக்தர்களோடு நாங்களும் கிழிறங்கினோம். நான் என்னை சட்டையை கழற்றி வீசுவதைப் போல அங்கேயே வீசிவிட்டு வந்தேன். நானே இயற்கையாக மாறிவிட்டதாக தோன்றியது. 


மதியம் கிளம்பி கோவிலை விட்டு நடக்க ஆரம்பித்தோம் . ஒன்றிரண்டு பக்தர்களாக வருவதும் போவதுமாக இருந்தனர். இரண்டு மணி ஆகியிருந்தது. அருவியில் குளித்ததும் நெடுந்தொலைவு நடந்ததும் நல்ல பசியெடுத்தது. வரும் வழியில் மௌன சித்தர் ஆசிரமத்தில் மதியம் அன்னதானம் நடந்து கொண்டிருந்தது. மௌன சித்தரை வழிபடும் பக்தர்கள் அவருக்கு காணிக்கையாக பீடி, சிகரெட் வாங்கி செலுத்துகிறார்கள். சடை முடி போட்டு நீண்ட தாடியுடன் சாதாரண காவி வேஷ்டி ஏதோவொரு கலர் சட்டையோடு காட்சியளித்தார். அவரைப் பார்க்க எதோ டீக் கடை டீ மாஸ்டர்ப் போன்ற தோற்றம். ஆனால் அவர் பிரசித்தி பெற்றிருந்தார். அவர் யாரிடமும் பேசுவதில்லை. மௌனமாக சிகரெட் பிடிப்பது காற்றில் சில சைகைகளை செய்வதுமாக அவர் பீடத்தில் அமர்த்திருந்தார். பக்தர்கள் தொடர்ந்து வந்து போய்க் கொண்டிருந்தார்கள். எழுந்து காவி வேஷ்டியை சரி செய்து கொண்டார். அவர் உடைக் குள்ளிருந்து சிகரெட் பாக்கெட்டுகள் பீடி கட்டு தீபெட்டி கட்டு கட்டாக விழுந்தது. சுருளி மலையடிவாரத்தில் அமைதியான கோவிலாக இருந்தாலும் சுத்தமாகவே பராமரிப்போடு வைத்திருந்தனர்.ஆனால் சிகரெட் பீடி போன்றவற்றை அவருக்கு காணிக்கை செலுத்துவது ஏற்றுக் கொள்ள முடியாததாக இருந்தது. இதுவரை சித்தர், சாமியார்கள், துறவிகள் ஆகியோருக்கு பூ பழம், வேஷ்டி - சட்டை, சாப்பாடு வாங்கி கொடுத்து காணிக்கை செலுத்துவதை பார்த்திருக்கிறேன். இது முற்றிலும் வேறு விதமான நம்பிக்கையாக இருந்தது. ஆனால் மௌன சித்தர் பேச்சற்று ஆழ்ந்த அமைதியில் தலை கவிழ்ந்து போய் மௌனித்திருந்தார். பசிக்கு சாப்பாடு போட்டார்கள். நல்ல ருசியான உணவு. எத்தனை பேர் வந்தாலும் முகம் சுழிக்காமல் இன்முகத்தோடு பரிமாறினார்கள். புழுங்கலரிசி சாதம், சாம்பார், ரசம், புடலங்காய் கூட்டு, பெரிய அப்பளம். இவ்வளவு எளிய ருசியான உணவை நான் இதுநாள் வரை சாப்பிட்டதே இல்லை. வயதானவர்கள் கூட சாப்பிடும்படியான எளிய சைவ உணவு. சாப்பிட்ட திருப்தியோடு மௌன சித்தர் கோவிலை விட்டுக் கிளம்பினோம். கோவில் அமைந்துள்ள நிலப்பகுதி தவிர மற்ற அனைத்து நிலத்திலும் இயற்கை விவசாயம் நடந்து கொண்டிருக்கிறது. விவசாயம் மற்றும் வேளாண் துறையில் ஆர்வமுள்ள மாணவர்கள் அங்கே விவசாய பயிற்சி செய்வதற்காக அமைக்கப்பட்டிருந்தது. 
அருவிக் கரை விட்டு கிளம்பும் போது மாலை ஆரம்பித்திருந்தது. நல்ல இளம் மாலை வெயில் இளநீர் குடித்ததைப் போல மென்மையாக இருந்தது வெயில். கோடி லிங்கத்தை மனதார நினைத்துக் கொண்டேன். இந்த பயணம் அமைதியான இறை அனுபவத்தையும் மறக்க முடியாத நினைவுகளையும் கொண்டதாக அமைந்தது மகிழ்ச்சிதான். பயணம் சாத்தியமாக காரணமாக இருந்த நண்பர்களுக்கும் நன்றி சொல்லிக் கொண்டேன். பயணங்கள் வாழ்வை அர்த்தமுள்ளதாக அனைத்து துயரங்களையும் மறக்கச் செய்வதாக இருக்கின்றன. உலகில் அனைத்து சாதனையாளர்கள் அனைவரும் பயணம் செய்ய விரும்பியவர்களாக இருந்துள்ளனர். புத்தர் உலகம் முழுவதும் பயணம் செய்தார். பல்லாயிரக்கணக்கான மைல் நடந்துள்ளார். ஏன்? சாமானிய மனிதன் வாழ்வில் துன்பத்திலிருந்து விடுபட வேண்டும் என்ற காரணம்தான். இந்த பயணம் அப்படியாக அமைந்தது இயற்கை கொடுத்த நல்ல பரிசு. அன்பும் நன்றியும்!

G. கோபி 
சனிக்கிழமை, 27, 2024

Comments

Popular posts from this blog

செகண்ட் ஷோ நினைவுகள்

சுருளி நினைவுகள் பகுதி -1