சுருளி நினைவுகள் பகுதி -1
Sat, 13 ஜூலை
ஜூன் 30 ஆம் தேதி சுருளி அருவிக்கு போயிருந்தேன். கோவில்பட்டியிலிருந்து மதுரை உசிலம்பட்டி வழியாக மூன்று மணி நேர பயணம். தேனி, கம்பம் வழியாக பசுமையான வயல்கள், கிராமங்கள் கடந்து சுருளிப்பட்டிக்கு போய் சேர்ந்தோம். சாலையின் இருபுறமும் தென்னந்தோப்புகள், திராட்சைத் தோட்டம். நல்ல செம்மண் பகுதியாக இருந்தது. 80, 90 களில் வெளி வந்த கிராமத்து திரைப்படங்களில் பார்த்து ரசித்த அதே காட்சிகள். எல்லா பயணங்களும் சாத்தியமாவதில்லை. அதே போல எந்த பயணத்தையும் நாம் மட்டுமே முடிவு செய்வதுமில்லை. தேனி மாவட்ட கிராமங்கள் பார்ப்பதற்கு அழகானவை. எங்கு பார்த்தாலும் மலை மற்றும் மிதந்து செல்லும் மேகங்கள். வெயில் காய்வதும் அடங்குவதுமாக இருந்தது. மேற்க்கு நோக்கினால் மேகம் இருண்டு மழை வரப் போவதைப் போலிருக்கும். ஆனால் மப்பும் மந்தாராமுமாக இருக்கும். நானும் நண்பர்களும் வழி தெரியாமல் அங்குள்ள கிராமத்து மனிதர்களிடம் விசாரித்து பயணித்துக் கொண்டே வந்தோம். உயர உயர தென்னந்தோப்புகள் நிறைந்த சுருளிப் பட்டி ஊரின் பாதை கரடு முரடாக இருந்தது. சுற்றிலும் வயலில் பாத்திக் கட்டி நெல் விளைச்சல் நடந்து கொண்டிருந்தது. காற்றில் நல்ல நெல்மணம். மைனா, மயில், குருவிகள் எத்தனையோ பறவைகள் நேரில் பார்ப்பதும் கண்களை மூடி அந்த பறவைகளின் சத்தத்தை ரசிப்பதுமாக வந்தேன். எத்தனையோ பிரிவுகள், அவமானங்கள், தோல்விகள் சறுக்கல்கள் நிறைந்த இந்த வலி நிறைந்த வாழ்க்கையின் பிடியில் இருந்து தப்பித்து வந்து கிராமத்தில் சுற்றி அலைவது மனதிற்கு இதமாக ஆறுதலாக இருந்தது. நல்ல பசி மதியம் சாப்பிடாமல் கொள்ளிடம் ஆற்றின் அணைக்கு வந்து சேர்ந்தோம். நாலைந்து சிறுவர்கள் நீச்சலடித்துக் குளித்து ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தார்கள். அருகில் நல்ல வெண்ணிற காளை மாட்டை வைக்கோல் வைத்து தேய்த்து ஒருவர் குளிப்பாட்டிக் கொண்டிருந்தார். காரினை சாலையோரம் நிறுத்தி வைத்து விட்டு இறங்கினோம். மலையடிவார கிராமத்தை போல மேற்கே பெரிய மலை மேகங்கள் சூழ்ந்து காற்று இறங்கி விவசாய நிலங்களுக்குள் வந்து இறங்கி என் சட்டைக்குள் புகுந்து சென்றது. ஐந்து வயது சிறுவனை போலவே மனதிற்குள் குதுகலமாக இருந்தது. எப்போதெல்லாம் இயற்கையோடு ஒன்றிணைந்து போகிறோமோ அப்போதெல்லாம் நாம் ஆதி வயதிற்கு திரும்பி விடுகிறோம். வயதற்று அடையாளங்கள் அற்று நினைவுகள் கடந்து குழந்தையாக மாறி விடுகிறோம். பயணங்கள் மனதை அமைதியடையச் செய்கின்றன. உடலுக்குள் ஒரு குளிரை உணர வைக்கின்றன.
சுருளிப் பட்டி சனீஸ்வரன் கோவில் பரிகாரம் செய்வதற்கு பிரசித்து பெற்றதென நினைக்கிறேன். ஊருக்குள் தள்ளி சுருளி மலையடிவாரத்தின் வழியாக கட்டப் பட்ட சின்ன கோவிலாக இருந்தது. கோவில் முன்பு சின்ன சிற்றோடை ஓடிக் கொண்டிருந்தது. தொலைவியில் மலை உச்சியில் இருந்து அருவி வெண்கூந்தலைப் போல விழுந்து ஆறாக சுருளிப்பட்டி ஊருக்குள் வந்து போய்க் கொண்டிருந்தது. பரிகாரம் செய்ய விரும்பும் ராசிக்காரர்கள் கோவில் முன்புள்ள ஓடையில் குளித்து விட்டு அந்த ஆடையயை அங்கேயே போட்டுவிட்டு கோவிலுக்குள் சென்று வழிபடுகிறார்கள். அந்த ஆடைகளை துவைத்து எடுத்து மூட்டையாக கட்டிக் கொண்டு சிலர் புதிதாக்கி விற்கும் மனிதர்களையும் காண முடிந்தது. இங்கே ஒவ்வொரு ராசிக்கும் ஏற்றவாறு சனிப்பெயர்ச்சி நாளில் வழிபாடு நடக்கிறது. அங்குள்ள கணேஷ் பவனில் மதிய உணவு சாப்பிட்டோம். நல்ல தக்காளி போட்டு ருசியான சாம்பார், சுரைக்காய் கூட்டு, அப்பளம், நார்த்தங்காய் ஊறுகாய், புழங்கலரிசி சாதம். எவ்வளவு கேட்டாலும் முக சுழிக்காமல் அன்போடு பரிமாறினார்கள். 80ரூபாய்க்கு நல்ல திருப்தியான சாப்பாடு. கோவில் பிரார்த்தனை முடிந்து கம்பம் வழியாக சுருளி அருவிக்கு போனோம்.
அருவிக்கு செல்லும் பாதையில் வெயில் எடையற்றதாக இருந்தது. பூக்களை தொடுவதை போல. குழந்தையின் மென்கரங்களால் நமது தோலை வருடுவதைப் போலிருந்தது. அருவிக்கு போகும் பாதைக்கு முன்பு பெரிய கேட் போட்டு பூட்டிஇருந்தார்கள். நுழைவு வாயிலில் கண்காணிப்பு அதிகாரிகள் நுழைவு கட்டணம் வாங்கி பரிசோதனை செய்த பிறகே அருவிப் பாதையில் நடக்க முடியும். கருடு முரடான பாதை. செருப்பு இல்லாமல் நடக்க முடியாது. வன விலங்குகள் நடமாடும் என்பதால் சாலை போட முடியாது என்று சொன்னார்கள். நாவல் பழங்கள், மாங்காய், அருவியில் குளிக்க துண்டு சோப்பு என கடைகள் இருந்தன. அருவிப் பாதையில் நடக்க நடக்க அருவியின் சப்தத்தைக் கேட்க முடிந்தது. இடதுபுறம். அருவியின் நீரோட்டத்தில் இருந்து பிரிந்து சிற்றோடை ஓடிக் கொண்டிருந்ததையும் அதன் சப்தத்தையும் கேட்க முடிந்தது. அருவியில் குளித்து விட்டு ஈர உடையுடன் மனிதர்கள் நடந்து வந்து கொண்டிருந்தனர். உயர்ந்து நிற்கும் மரங்கள். பெயர் தெரியாத பூச்சிகளின் ரீங்காரம், பறவைகளின் கீச்சல் குரல்களை கேட்டுக் கொண்டே நடந்தோம். காட்டுக்குள் மனிதன் தன்னை மறக்க ஆரம்பிக்கிறான். எந்நேரமும் நம்மை சுமந்து கொண்டு நம்மால் அலைய முடியாது. கொஞ்சம் எதிலாவது குறைந்த பட்சம் இயற்கையுடனாவது நம்மை அர்ப்பணிக்க வேண்டும். அது நம் சுயத்தை இழப்பதல்ல அதுவொரு மாபெரும் சமர்ப்பணம். பேரன்பின் தருணங்கள்.
இருபது நிமிடம் நடந்து அருவியின் படிக்கட்டுகளில் ஏறிக் கொண்டிருக்கும் போது மனம் குதுகலிக்க ஆரம்பித்து விட்டது . வாழ்வேன்பது இப்படியான அதிசய தருணங்கள் கொண்டதுதான்.
அழகான சிறு அருவி தான். ஆனால் வேகமெடுத்து விழுந்து கொண்டிருந்தது. அருவிக்குள் நிற்கும் போது மனிதர்கள் சிறுவர்களை போல துள்ள ஆரம்பித்து விடுகிறார்கள். அருவி அனைத்து வலிகளையும் நீக்கி நம்மை சுத்தபடுத்தி விடுகிறது. பிரமாண்டத்தில் நம்மை கரைக்கும் அற்புதம். நண்பர்கள் ஒவ்வொருவராக குளிக்க ஆரம்பித்தோம். விரும்பியபடியெல்லாம் போட்டோக்கள் எடுத்துக் கொண்டோம். அருவியின் சாரல் முகத்தில் முட்களைபபோல குத்தி குளிரவித்துக் கொண்டிருந்தது. திமுதிமுவென விழும் அருவிக்குள் என்னை ஒப்படைத்துக் கொண்டு நின்றேன். தலை கண்கள் காது, சட்டை உடல் முழுவதும் அருவி விழுந்து அமுக்கி ஓடியது. கடும் குளிரான நீர். மூச்சை பிடித்துக் கொண்டு அருவிக்குள் என்னை ஒப்புக் கொடுத்துக் கொண்டு நின்றேன். இனி நான் இல்லை. அருவியாக விழுந்து மலை முழுவதும் போய்கொண்டிருந்தேன். நானே இந்த மலை, மேகம், அருவி மற்றும் காட்டின் அனைத்து உயிர்களாகி விட்டேன். அருவியில் பெண்கள் அதிகம் ரசித்துக் குளித்து கொண்டிருந்தார்கள். அருவிக்கும் பெண்களுக்கும் ஆதிகாலம் முதல் தொடர்பு இருக்கிறது. அது பெண்கள் மட்டுமே அறிந்து கொண்ட ரகசியம் என்று புத்தகத்தில் வாசித்த வரி நினைவுக்கு வருகிறது. எப்போதோ எஸ். ராவின் புத்தகத்தில் அருவிக்கு குளிக்க செல்லும் அம்மாவின் கதையை படித்தது நினைவுக்கு வந்த படியே இருந்தது. இயற்கை மட்டுமே மனிதனை ஆறுதல் படுத்தும் கருணையாக இருப்பது உண்மைதான்.
நெடுநேரம் அருவியின் நீரோட்டத்தில் நின்று குளித்துக் கொண்டிருந்த நண்பனை தேடினேன். அவன் அருவிக்குள் தன்னை தொலைத்து தேடிக் கொண்டிருந்தான். வாட்டர்கேனில் அந்த நீரை தீர்த்தமாக எடுத்துக் கொண்டு கிளம்பினோம். ஆனால் எவராலும் அருவியை வீட்டிற்கு எடுத்துச் செல்ல முடியாது. நினைவுகள் மட்டுமே பயணம் தருகிற இனிய பரிசு.
நண்பர்கள் அருவியின் முன்னதாக நின்று போட்டோ எடுத்துக் கொண்டோம். மறக்க முடியாது நினைவு என்பதால் .
-- நினைவுகள் தொடரும்....
Comments
Post a Comment