நிமித்தம் நாவல் பற்றிய பார்வை
நிமித்தம் நாவல் பற்றிய பார்வை
கிராமத்தின் வாழ்வியலைப் பற்றி பேசுவதும் எழுதுவதுமே உற்சாகம் தருவதாகயிருக்கிறது. நகர வாழ்கைக்கு
பொருந்திப் போய்விட்ட பலருக்கும் கடந்துபோன கிராம வாழ்வென்ற ஒன்று இருக்கிறது. கடந்து
செல்லும் மேகங்களைப் போல கண்முன்னே வாழ்வு கடந்து போய்விடுவது துயரமாகத்தானிருக்கிறது.
Life of Pi என்கிற திரைப்படத்தில் பையினுடைய குடும்பம் புலம்பெயர்ந்து செல்கிறார்கள்.
கப்பற்பயணத்தின் போது பை கடந்து வந்த பாதையினை திரும்பிப் பார்க்கும் காட்சி மனதினை
நெகிழச் செய்வதாக எடுக்கப்பட்டிருக்கும். எஸ். ராவின் புத்தகத்தினுள் கணக்கிலடங்காத
மனிதர்களும் ஊர்களும் கிராமங்களும் புதையுண்டு கிடக்கின்றன. பழைய டிரங்க்ப் பெட்டியினை
து◌ாசி தட்டி பொருட்களை ஆராய்வதைப் போல அவருடைய கதைகள் மனித வாழ்வியலை ஆராய்கின்றன.
அதன் சுவடுகளே எஸ். ராவின் புத்தகங்கள் உறுபசி, யாமம், உபபாண்டவம், நிமித்தம் , இடக்கைப்
போன்ற புத்தகங்கள் மிக முக்கியமானவை.
நிமித்தம் நாவலைப் பற்றி பேசுவதும், எழுதுவதும்
பிரிந்து போன நண்பனைப் பற்றி வேதனையுறுவதற்கு சமமானது.
காது கேளாதவனுடைய வாழ்வு புறம் சார்ந்த மனிதர்களால்
எவ்விதம் வஞ்சிக்கப்படுகிறதென்பதை விசித்திரங்களுடனான மனதையும் சொல்லியிருப்பது குறிப்பிடவேண்டிய
விஷயம். ஒரு மனிதனை வெளியுலகம் புறக்கணிப்பதினை விடவும் அவனுடைய வீடே பரிகசிப்பது மிகவும்
வேதனையானவொன்று. நிமித்தம் நாவல் காதுகேளாத மனிதன் எப்படியெல்லாம் வாழ முயற்சிக்கிறான்
என்பதன் சாட்சியினைப் போலவேயிருக்கிறது. ஒரு மனிதன் வாழ்வதற்கு பள்ளியும் சமூகமும்
எப்படி பங்கு வகிக்கிறதோ அதனைப் போலவே வீடும் முக்கியப் பங்காற்றுகிறது. குடும்பம்தான்
ஐம்பது சதவிகித வாழ்வை அவனுக்குக் கற்றுக் கொடுக்கிறது. பள்ளி அவனுக்கு ஒழுக்கத்தையும்
புறவுலகம் சார்ந்த சமூகம் சார்ந்த அனுபவத்தையும் சொல்லிக்கொடுக்கிறது.
சிறுவயதில் சரியான முறையான ஊக்குவிப்பும் அன்பினையும்
பெறாத மனிதனை வாழ்வு படாதபாடு படுத்தி அல்லல்படுத்துகிறது. நிமித்தம் நாவலில் வருகிற
தேவராஜிம் குடும்பத்தாலும், பள்ளியாலும், சமூகத்தாலும், புறக்கணிப்பிற்கும் அவமானத்திற்கும்
உள்ளாகிறான். காது கேளாத உடல் குறை கொண்ட மனிதனை அவனுடைய பெற்றோர்கள் புறக்கணிப்பதும்
வெறுப்பதையும் போன்ற அபத்தம் உலகில் வெறெதுவுமில்லை. இளம் வயதிலேயே அவமானம், கல்வியின்மை,
பராமரிப்பு, ஒழுக்கம் சார்ந்த விழிப்புணர்வு இல்லாமையால் பீடிக்கப்பட்ட தேவராஜ் பரிகசிப்பின்,
அவமானத்தின் நிராசையின் உச்சத்திற்கே போகிறான். மழை வெள்ளத்தின் போது சேற்றுத் தண்ணீரில்
அலைக்கழிக்கப்பட்ட குப்பையினை போலவே வாழ்வு அவனை நிந்திக்கவே செய்கிறது. இது போன்ற அனைத்திற்குமே கொஞ்சும்கூட அன்பும் அரவணைப்பும்
இல்லாத அப்பாவே காரணம். முறையான கல்வியும், தந்தையின் அன்பும் கண்டிப்பும் இல்லாத குழந்தைகள்
பிற்காலத்தில் சமூகத்திற்கே தீங்கு விளைவிப்பவர்களாக மாறிவிடுகிறார்கள். நிமித்தம்
கூறும் கதைமொழியானது நிலைகொள்ளாமையின் ஆற்றாமைதான் . தேவராஜ் ஒவ்வொரு ஊராக அலைகிறான்.
இருபதுக்கும் மேற்பட்ட வேலைகள் செய்கிறான். எந்த வேலையிலும் விருப்பமற்றுப் போனவனாக
தற்கொலை செய்கிற முயல்கிறான். காதல் மறுப்பு விருப்பமான நண்பர்கள் மனிதர்களின் பிரிவென
நிலையில்லாத பெருத்த துயரத்தோடு கடந்து போகிறது அவனது வாழ்கை.
சமூகத்தில்
குற்றவாளிகளாக மாறிப்போயிருக்கும் அத்தனைபேர்களுக்கும், முறையான குடும்பமும் பள்ளியும்
ஆசிரியர்களும் அமைய பெறாததும் மிகமுக்கியமான காரணம். வாழ்வின் மீது படியும் கரிய வெறுப்பானது
அவர்களுடைய வாழ்கையே சீர்குலைந்துவிடுகிறது. ஏராளமான குற்றச்செயல்கள் புரிபவர்களின்
வாழ்வினை ஆராய்ந்து பார்த்தால் சமூகத்தினால் அவர்கள் புறக்கணிப்பிற்கும் பரிகசிப்பிற்கும்
உட்பட்ட உண்மை புலப்படும். நிமித்தம் போன்ற புத்தகம் அப்படியான உண்மையினை இரத்தக் கறைபடிந்த
காகிதத்தைப் போலவே எடுத்துக் காட்சிபடுத்துகிறது. சமூகத்தில் வாழும் ஒட்டுமொத்த ஊனமுற்றவர்களின்
வாழ்வும் பெருத்த அவமானத்திற்குட்பட்டதாகவேயிருக்கிறது. அத்தகைய உடற்குறை உள்ளவர்களையும்
காது கேளாதவர்களையும் பேணிக் காப்பதும் தனிப்பட்ட மனிதனின் கடமை. நாவலில் பெரும்துயரத்திற்கு
உள்ளாக்கப்பட்ட தேவராஜ்ஜிற்கு அவனுடைய நண்பன்தான் உதவுகிறான். அவனுக்கு ஆறுதல் கூறி
வேலை வாங்கிக் கொடுத்து கடைசியில் பொறுப்பாக கவனித்துக் கொள்கிறான். நட்பென்பது ஊர்சுற்றுவதற்கும்,
போதைப்பழக்கத்திற்குமாக மாறிப்போன இன்றை சூழலில் ராமசுப்பு போன்ற நண்பன் நட்பிற்கு
சிறந்த எடுத்துக்காட்டு.
அன்றாடம்
வேலை கிடைக்காமல் திண்டாடும் எத்தனையோபேர் வாழ்வில் திண்டாடுகிறார்கள். இவர்களுக்கு
மத்தியில் தேவராஜ் போன்ற உடற் குறைபாடு கொண்ட மனிதர்களின் வாழ்வு கிடைத்த வேலையை தக்க
வைத்துக் கொள்ளாமல் முன்னேறாத தாழ்ச்சி மனப்பான்மை கொண்டாதாகயிருப்பது நிதர்சனமான யதார்த்தம்.
உழைப்பை நம்பி வாழ்வர்களுக்கு உடற்குறையும், தாழ்வு மனப்பான்மையும் பெரும் தடைகள்தான்.
அதனைப்போலவே திருமணமும்தான். நாவலில் அவனுக்கு திருமணம் நடைபெறாமல் தள்ளிப்போகிறது.
இந்த நாவல் நட்ஹாம்சனின் பசி என்கிற புத்தகத்தையே
நினைத்துப் பார்க்கத் தோன்றுகிறது. அப்படியான சிறந்த படைப்பாகவே விளங்குகிறது. தோற்றுப்போன
மனிதர்களின் கதையையும் துயரத்தையும் பேசினாலும் அதைவிட முக்கியம் அந்த வாழ்வினை வெற்றி
அடைய முடியும்மென்றும் அத்தயை மனிதர்கள் வாழ முயற்சிப்பதும் வாழ்வு மீதான் பற்றுதான்
என்பது நம்பிக் கை தருவதாகயிருந்தது.
நு◌ாறு
வெண்கலயங்கள் கேட்ட ஆவிகள் , வண்டிப் பேட்டை உலகம், ராஜாமணி உணவகம், சுதர்சனம் ஆசிரியருக்கும்
தேவராஜ்ஜிற்கும் இடையேயுள்ள உறவு என நாவல் பலதரப்பட்ட அடுக்குகளில் கதைகள் எழுதப்பட்டுள்ளன.
அச்சு இயந்திரம் தொடர்பான தொழிற்படிப்பு பற்றிய கதை விவரிக்கப்பட்டிருக்கிறது. புத்தகம்
அச்சிடுவது, அதைப்பார்ப்பது, புதிய புத்தகங்களை முகர்ந்து பார்ப்பது வித்தியாசமான ரசனை.
பள்ளிபடிக்கும் நாட்களில் ஒவ்வொரு ஆண்டும் ஆண்டு விடுமுறை திறந்ததும் புதிய வகுப்புகள்
ஆரம்பிகையில் புதிய வகுப்புக்கான பாடப் புத்தகங்கள் கொடுக்கப்படும். அதை ஆசையாக வாங்கி
ஒவியங்களையும் கதைகளையும் தேடி தேடி வாசித்திருக்கிறேன். அதை சில மாணவர்கள் ரகசியமாக
முகர்ந்து பார்ப்பார்கள். அதில் தனி வாசனையிருக்கும். ஆனால் அந்த புத்தகங்கள் அச்சாகிற
இயந்திரங்கள் குறித்தும் பதிப்பக வேலை பார்க்கும் பணியாளர்கள் குறித்தும் வாசிப்பது
புதிய அனுபவமாகயிருந்தது.
உடற்குறை
உள்ளவர்களுக் கென்று தாழ்வு மனப்பான்மை ஏற்படுவது இயற்கைதான். அதற்கான காரணங்களை ஆராயும்
போதுதான் அந்த மனிதர்களின் உளவியலையும் வாழ்கையையும் புரிந்து கொள்ளமுடியும். மனித
வளர்ச்சிக்கு பள்ளிகல்வி, சமூகம், அவனுடைய அகவுலகம் எத்தனை பெரும்பங்கு வகிக்கிறதோ
அதைப்போல குடும்பமும் முக்கிய காரணமாகிறது. வீட்டிலுள்ள உறவுகள் அவனை நிராகரிப்பதும்
, துரத்துவதும், கைவிடுவதும்தான் பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. பொது இடங்களில்
, சாலையில் வேலை பார்க்கும் அலுவலகங்களில், கோவில், பொழுதுபோக்கு இடங்களில் நாம் பார்க்கிற
உடல்குறைபாடு உடைய மனிதர்களை நாம் எப்படி நடத்துகிறோம்? அவர்களுக்கும் நமக்கும் இடையேயான
நட்பும் புரிதலும் எத்தகையது என்றும் சிந்திப்பதும் அவசியமானது. ஆனால் உலகளவில் விளையாட்டுத்துறையிலும்,
தொழில்நுட்பத் துறையிலும், சினிமா போன்ற அனைத்து துறையிலும் மாற்றுத்திறனாளிகள், உடல்
குறைபாடு உடைய மனிதர்கள் தங்களுடைய ஆதிக்கத்தை செலுத்தவும், திறமையை நிரூபிக்கவும்
சாதிக்கித் தொடங்கிவிட்டனர். LIFE WITHOUT LIMITS என்னும் புத்தகம் நிக் உஜிசிக்
(Nick Vujicic) எனும் மனிதரின் வாழ்கையை விவரிக்ககூடியது. ஃபோகோமெலியா எனும் நோயால்
பாதிக்கபட்ட நிக் இரண்டு கைகள், கால்கள் இல்லாமல் பிறந்தவர். ஆனால் இன்றைக்கு உலகில்
அவரை அறியாதவர் யாருமில்லை. மிகச்சிறந்த பேச்சாளாராக உலகளவில் தம் திறமையால் உயர்ந்துள்ளார்.
அவரைப்பற்றிய புத்தகங்களும், அவருடைய நம்பிக்கையூட்டும் யுடுயுப் (Youtube) உரைகளும்
மிக முக்கயமான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. இரண்டு கைகளும் கால்களும் இல்லாதபோதும்
நிக் தன் நம்பிகையையும் உயர்ந்த மனப்பான்மையையும் விடவில்லை. இந்த உலகில் அனைத்தும்
நம்மை கைவிட்ட பின்னர் கடவுள் நமக்கான உலகத்தையும் பொறுப்பையும் கொடுத்திருக்கிறார்.
அதை நம்பிக்கையுடனும், உற்சாகத்துடனும் கடமையாக செய்ய வேண்டுமென நிக் சொல்கிறார்.
நிமித்தம்
நாவலில் முக்கியமாக குறிப்பிட வேண்டியது தேவராஜ்ஜின் தாழ்வு மனப்பான்மையும் அதை ஏற்படுத்திய
சமூகம் மற்றும் குடும்பமும். அன்பும், முறையான கல்வியும், வேலைவாய்ப்பும் இல்லாததால்
வாழ்கை முழுவதும் நிலையில்லாத பரிதவிப்பைத்தான் தேவராஜ் வாழ நேரிடுகிறது. முதல் அத்தியாயத்தில்
காது கேளாத மனிதனை நம்மைச் சுற்றியுள்ள மனிதர்கள் எப்படியெல்லாம் சிரமத்திற்குள்ளாக்கிறார்கள்
என்று தேவராஜ் சிந்தனை வழியாக எழுத்தாளர் எழுப்பும் கேள்வியும் யதார்த்தமான பிரச்சனையை
துல்லியமாக அணுகும் முறை.
நாள்
: 17-04-2022
Comments
Post a Comment