பாலிதீன் மனிதர்கள்...

 போனா போகட்டும்

பிச்சை உசுருதானே
திருந்த முடியாத
தருதலதான் நாமே
போனா போகட்டும்
பிச்சை உசுருதானே
திருந்த ஆசை உள்ள
தருதலதான் நாமே

மாஸ்டர் திரைப்படம் பார்த்ததிலிருந்து இந்த பாட்டு மனதில் ஓடிக் கொண்டே இருக்கிறது. ஒரு மனிதன் திருந்துவதற்காக முயன்று முடியாமல் போவதுதான் எவ்வளவு பெரிய வலி. சில பேரை இந்த சமூகம் புறக்கணித்து பாலிதீன் பைகளை போல வெறுத்து ஒதுக்கி விடுகிறது. தவறே செய்யாமல் தண்டனை அனுபவித்து வரும் வலியை விட தெரியாமல் தவறு செய்து விட்டு ஒரு நாள் புரிந்து கொண்டு திருந்த முடியாமல் அல்லாடும் மனது அலைந்து கொண்டே இருக்கிறது. யாரோ ஒருவரை அன்பின் பொருட்டு எதிர்பார்த்து காத்திருக்கிறது. குற்றத்திற்கு மிக சிறந்த தண்டனை மனிதனை அவன் செய்த தவறை புரிந்து கொள்ளச் செய்வதுதான். தண்டனைக்கு மிகச் சிறந்த மருந்து திருந்திய மனிதனை நம்புவதில்தான் உள்ளது . சைக்கோ திரைப்படத்தில் தாகினி அங்குலிமாலிக் என்கிற கொலை காரனை மன்னிக்கிறாள். அவன் எத்தனையோ பேரை கொலை செய்த போதும் அவனை ஒரு தாயைப் போல, சகோதரியைப் போல மன்னித்து அன்பு காட்டுவதாக சொல்கிறாள். அங்குலிமாலிக்கை திருந்தவிடாமல் அவன் பள்ளி நிராகரித்து வன் கொடுமை செய்ததன் விளைவு தான் சைக்கோவாக அவன் மாறியது. மாஸ்டர் படத்தில் JD குறிப்பிடுவதும் போதையினால் குற்றம் செய்யும் இளைஞர்கள். போதை நம்முடைய தெளிவை கரைத்துக் குடித்து ஏப்பம் விட்டுவிட்டு நம்மை கறைப் பிடித்த நோயாளியாக மாற்றி விடும். ஆனால் பவானி அவர்களை போதைக்கு அடிமையாக்கி குற்றம் புரிய வைக்கிறான் . பவானி கூட சிறு வயதில் வன்கொடுமைக்கு ஆளாகிறான். அவனும் தன்னை யாரும் திருத்த மாட்டார்களா என ஏங்குகிறான். எல்லாக் கால கட்டத்திலும் அதிகாரத்தாலும் மோசமான கொள்கைக்கு அடிமையாகி அல்லது எதோ அமைப்பின் பொருட்டு மனிதர்களை ஒதுக்குவதும், அடக்குவதும் தண்டிப்பதும்தான் மாபெரும் குற்றத்திற்கு வழிவகுக்கிறது. கட்டுப் படுத்தப் படுகிற மனிதன் தான் வெடித்து சிதறுகிறான். சார்லஸ் டிக்கென்ஸ் எழுதிய " டேவிட் காப்பர் பீல்டு" புத்தகத்திலும் புறக்கணிக்கப் பட்டு , அடக்கி தனித்து விடப் படுகிற சிறுவனின் அலறல்களை நம்மால் கேட்க முடியும். ஏன் அதிகாரத்தை பயன்படுத்தி மனிதர்கள் பிற மனிதர்களை அடக்கி ஆள விருப்பம் கொண்டவர்களாக இருக்கிறார்கள்? இன்னொரு மனிதன் துன்புறுவதை ஒரு கூட்டம் ஏன் இவ்வளவு மூர்க்கமாக இன்புற்று மகிழ்கிறார்கள்.

உளவியல் ரீதியாக அடக்கி கட்டுப் படுத்த நினைப்பது என்பது மிகப் பெரிய அளவில் வெடித்து சிதற நாம்
 வழி கோலுவதை போன்றதுதான். புத்தர் கூறியதை போல நம்மை தேடி வருபவர்களின் தேவையை பூர்த்தி செய்வதுதான் அன்பு . அந்த புரிதலில் நேசம் உள்ளது . நாம் ஜன்னலை திறந்து வைத்திருந்தால் காற்று தானாக வருவதைப் போல. மனதையும் அறிவையும் திறந்து வைத்தால் புரிதல் தானாக வரும்.
திருந்திய மனிதனை மன்னிப்பதில் தான் மாற்றமே இருக்கிறது. அதை விட முக்கியம் அவனை நம்புவது. அதற்கு அந்த மனிதன் உண்மையாகவே திருந்தி விட்டானா என்று அறிவை கொண்டு சிந்திப்பதும் அவசியம். சில நேரங்களில் திருந்துவதை போல் நாடகமாடி மேலும் மேலும் குற்றம் புரிபவர்களை நாம் பார்த்திருக்கிறோம். வரலாற்றில் அனைத்து யுத்தங்களிலுமே பொய் சொல்லி துரோகம் செய்து நேர்மையான போர் வீரர்களை கொன்று குவிக்கப் பட்டிருக்கிறார்கள்.
ஜென் தத்துவமே அன்பும் அறிவும் கலந்த மௌனமான வார்த்தைகளைத்தான் விவரிக்கிறது . உண்மையில் அன்பைக் கொண்டு அனைவரையும் மாற்ற முடிந்து விட்டால் அவர்களை விட சிறந்த மனிதர் இந்த உலகில் எவரும் இல்லை. நிலவின் ஈர்ப்பு விசையால்தான் கடலில் அலைகள் உருவாகின்றன. ஆனால் அழிப் பேரலைகளை உருவாக்குக் கின்றன. மனதின் அழுத்தமும் ஆழி பேரலைகளை போல நம்மையும் சுற்றியுள்ளவர்களும் நிச்சயம் பாதிக்கும். மோசமான வழிக் காட்டுதல்களும், தண்டனைகளும், குற்றம் புரிந்தவர்களை நடத்தும் விதமும் மேலும் மேலும் பயங்கர குற்றத்தைத்தான் வளர்க்கும். சுயநலத்தால் உலகத்தை தான் மட்டுமே அனுபவிக்க அதிகாரம் செலுத்த வேண்டும் என நினைப்பவர்கள் சக மனிதர்களை கட்டுப் படுத்த நினைக்கிறார்கள். அவர்கள் மனிதர்களின் தெளிவை உடைத்து போதையை கொடுத்து கைப் பொம்மையாக மாற்றி விடுகிறார்கள். 

Comments

Popular posts from this blog

செகண்ட் ஷோ நினைவுகள்

சுருளி நினைவுகள் பகுதி -1

சுருளி நினைவுகள் பகுதி -2 : ( கடவுள் எனும் நண்பன் )