அன்னாவெனும் பெரும் நினைவு
அன்னா கரினீனா ஏன் தற்கொலை செய்து கொண்டாள்? இந்த கேள்வி டால்ஸ்டாய் எழுதிய இந்த நாவலை வாசிக்கும் போது கண்டிப்பாக எழும்? இதனால் டால்ஸ்டாய் மீது கோபம் கூட வருகிறது. அன்னா ஏன் தற்கொலை செய்து கொண்டாள்? திருமண ஆன பெண் தனது கணவரிடம் இருந்து காதல் அன்பு கிடைக்கவில்லை என்று திருமணத்திற்கு பிறகு தன்னை காதலிக்கும் இன்னொருவருவரை ஏற்றுக் கொண்டு வாழ்வது அவள் செய்த தவறா? உண்மையில் அன்னாவை கொன்றது கரீனினா அல்லது விரான்சிகியா? இல்லை அன்னாவெ முட்டாள்தனமாக முடிவெடுத்துக் கொண்டுவிட்டாளா? இல்லை டால்ஸ்டாயின் தனிப்பட்ட நிலைப்பாடா அனைத்திற்கும் மேலாக இந்த சமூகமா யார் அவளை கொன்றார்கள்?
சரி தவறு போன்ற நிர்ணயங்களை ஏற்படுத்தி மனித வாழ்க்கையை வரையறை செய்யும் அதிகாரம் மதத்திற்கு எவ்வாறு வழங்கப்பட்டது. யார் அந்த மதிப்பீடுகளை உருவாக்கியது. மனிதர்களின் தனிப்பட்ட விருப்பங்கள், சுய தேர்வுகளை கட்டுப்படுத்தும் மதம், அரசியல் சட்டங்கள் ஏன் உருவாக்கப் பட்டிருக்கின்றன.
சமூகத்தில் ஒரு பெண் செய்தது சரியா? தவறா என்று நீங்கள் தீர்மானிக்காதீர்கள் அதை அவளிடமே விட்டு விடுங்கள். என்று டால்ஸ்டோய் நாவலின் வழியாக சுட்டிகாட்டுகிறார்.
இந்த நாவலை வாசித்ததும் பெண்களின் அக உலகை பற்றிய புதிய பார்வையை உணர முடிந்தது. காதலிக்கிற அதிக பாசம் காட்டுகிற பெண்களை பார்க்கும் போது பரிவு உண்டாவதை தடுக்க முடியவில்லை.
மரப்பார்ந்த வாழ்வின் கொடும் பிடியில் இருந்து ஒரு பெண் விரும்பி வெளியேறி வாழ்வது ஏன் சமூகத்தால் தவறாக புரிந்து கொள்ளப் படுகிறது.
அவரவர் வாழ்வினை சுயமாக அமைத்துக் கொள்வதில் அனைவர்க்கும் உரிமை உள்ளது. ஏன் திருமணத்திற்கு பிறகு வேறொரு நபருடன் காதல் வயபட்டு கணவரையாவும் குடும்பத்தையும் பிரிந்து செல்லும் அன்னா தன்னை கணவரோ, மகனோ குடும்பமோ புரிந்து கொள்ளவில்லை என்று மரபின் வழி வந்த வாழ்க்கையை துண்டித்து விட்டாள். அதே போலவே அவளை உயிருக்கு உயிராக காதலிக்கும் விரான்ஸ்கி கூட அவளை புரிந்து கொள்ளாமல் புறக்கணிப்பது, ஒட்டு மொத்த சமூகத்தின் மீது வெறுப்பாக மாறி அவள் தான் வாழ்க்கையையே துண்டித்துக் கொண்டுவிட்டாள்.
அன்னாவின் கதையை வாசிக்கும் அதே நேரத்தில் விரான்ஸ்கியின் வாழ்வு, குடும்ப பின்னணி, அவன் ஏன் அன்னா திருமணமான பெண் என்று தெரிந்தும் அவளை காதலிக்க துணிந்தான்? அன்னாவும் கூட விரான்ஸ்கியின் மனதை புரிந்து கொள்ளாமல் பயத்தாலும் அதீத பாசத்தாலும் அவனை வற்புறுத்துகிறாள். மனதளவில் அவனை துன்பறுத்தி இன்பமடைகிறாள். எந்த கட்டுப்பாடுகளும் ஒழுங்கும் எதுவும் இன்றி விரும்பிய பெண்களோடு உறவு வைத்துக் கொண்டு சுதந்திர போக்கு கொண்டவன் விரான்ஸ்கி என்று தெரிந்தும் அன்னா ஏன் அவனை விரும்பினாள். காதலின் பேரில் அன்னாவும் அவனும் அடையும் துயரம் அளப்பரியது.
நாவலில் மகனோடு குடும்ப உறவுகளோடு பிரிந்து சென்ற அன்னாவால் தான் சொந்த மகனை உரிமை கொண்டாட முடியவில்லை. ஆனால் அதை விட அவளுடைய உணர்வுகளை குடும்பமும் சமூகமும் புரிந்து கொள்ளவில்லை என்றுதான் அனைத்தின் மீதும் வெறுப்பு வருகிறது அவளுக்கு. உரிமை இல்லாத வீட்டிற்கு தான் மகனை சந்திக்க ரகசியமாக வருகிற அவல நிலைக்கு தள்ளப் படுகிறாள். அந்த காட்சியையும் அதில் அவள் மகன் செர்ஜி தாயின் அன்பு கிடைக்காமல் எப்படி ஏங்கிப் போயிருப்பான் என்று டால்ஸ்டோய் சொல்லியிருப்பார். வேதனையான அத்தியாயம் அது.
அன்னா கரீனீனா நாவல் ஆழமான கேள்விகளை எழுப்புவத்தோடு இன்று வரை ஆண் - பெண் உறவுகளின் பிரச்சனையை அடையாளம் காட்டுகிறது.
அன்னாவின் தற்கொலை வழியாக டால்ஸ்டோய் பெண்களின் மனநிலையை காட்சிபடுத்துகிறார். சிதைந்த குடும்ப வாழ்வின் கதையை சொல்லும் டால்ஸ்டாய் லெவின் - கிட்டியின் இனிமையான காதல் வாழ்க்கையை உதாரணம் காட்டுகிறார். மனிதர்களை புரிந்து கொள்ளும் போது உறவுகளையும் புரிந்து கொள்கிறோம். நிறைவான மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கைக்கு உறவுகள் மீதான புரிதல் மிக அவசியமானது. அந்த புரிதலையும் அனுபவத்தையும் நாம் முனைந்து அடைய முயற்சி செய்யும் போது வாழ்க்கை இனிமையாக மாறும் என்பதே நிஜம்.
#annakarenina
Comments
Post a Comment