எழுதி மகிழ்ந்த நாட்கள்
கல்லூரி படிக்கும் போது சிறுகதை போட்டிகளில் கலந்து கொள்வது நண்பர்களுடன் சேர்ந்து இலக்கியக் கூட்டம் நடத்துவது, இலக்கியம் சார்ந்து சிந்திப்பது என்று ஆரம்ப நிலை வாசகனாக இருந்தேன். அதன் அடிப்படையில் எழுத வேண்டும் என்ற பேராசையில் தான் இந்த புத்தகங்களை எழுதினேன். மூன்றாண்டுகள் எழுதியதை லேப்டாப்பில் தட்டச்சு செய்துதான் நானே புத்தகங்களை உருவாக்கினேன் . சில நாட்கள் லேப்டாப் பழுதடைந்த போது மொபைல் போனில் நோட்பேடில் டைப் செய்தேன். எப்படியாவது எழுத வேண்டும் புத்தகங்கள் வெளியிட வேண்டும் என்பதே இலக்காக இருந்தது. கரோனா பொது முடக்கம், உடலில் கட்டி வந்து மனைர் சர்ஜரி என்று மனதளவில் சோர்ந்து போய் இருந்த நாட்களில் எழுதுவதுதான் என்னை நானே மீட்டேடுத்துக் கொள்ள உதவியாக இருந்தது. எழுத விரும்புகிறவனாக இது என்னுடைய முதல் முயற்சிதான். நண்பர்கள் வாசித்து விட்டு விமர்சனங்கள், குறிப்புகளை புத்தகம் பற்றிய கருத்துக்களை வாட்ஸாப்ப், மின்னஞ்சல், குறுஞ்செய்தி வழியாக தெரிய படுத்தினால் அடுத்து நான் எழுதுவதற்கு நிறைய கற்றுக்கொள்ள முடியும். எதாவது ஒரு வகையில் இந்த புத்தகம் உங்களுக்கு உதவியாகவும் உற்சாகபடுத்தினால் அதுவே எனக்கு பெரிய சந்தோசமாக இருக்கும். எழுத்தின் வழியாக மனித ஒற்றுமையை அன்பின் தேசத்தை ஏற்படுத்துவதே எனது கடமை.
என்னை நிரூபிக்க எந்த வகையிலும் இயலாத வாழ்வின் கொடும் பிடியில் இருந்து விடுபடவே எழுத விரும்பினேன். வாழ்வதற்க்காக நாம் செய்யும் முயற்சிகளும் உழைப்பும் காலத்தின் சாட்சிகளாக நினைவுகளே எஞ்சி நிற்கும் வாழ்வில் கனவுகளும் சூழ்நிலையை வெல்ல முடியாதா என்கிற தவிப்பும் எழுத தூண்டுகிறது. உண்மையில் எனது மன நிறைவிற்கே எழுதிக் கொண்டிருக்கிறேன் என்பது உண்மை. உணர்வுகள், நம்பிக்கைகள், ஆசைகள் போன்ற பல பாதைகளை கண் முன்னே விரித்து வைத்திருக்கிறது வாழ்க்கை. முக்கியமாக எந்த வகையிலும் வாழ இயலாதவர்களின் வாழ்வில் ஒரு துளி நிமிடத்தை அழகாக்கும் முயற்சிதான் இந்த புத்தகம்.எழுத்தின் மீது தீராத காதலை ஏற்படுத்திய எனது ஆதர்ச எழுத்தாளர்கள் ஜெயகாந்தன், எஸ்.ராமகிருஷ்ணன் போன்றோருக்கு அன்பும் நன்றியும். என்றென்றும் என் நினைவில் வாழும் எழுத்தாளர் தஸ்தாயேவ்ஸ்கி அவர்களுக்கு இந்த முயற்சியை சமர்ப்பிக்கிறேன். என்னையும் எனது கனவுகளையும் ஊக்கப்படுத்திய குடும்பத்திற்கும் நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.
புத்தகங்கள் வாங்க
Comments
Post a Comment