தங்கம் எனும் மஞ்சள் பிசாசு
நகை தங்கம் எளிய வசதி இல்லாத மக்களின் குடும்பங்களையும் எப்படி பாதித்தது அதுவும் குறிப்பாக தங்கம் வரதட்சணை, நகை போன்ற கொடுமைகளால் இந்திய பெண்களின் வாழ்வு எப்படியெல்லாம் அல்லல் பட்டது திருமணம் மூலம் பெண்கள் கொண்டு வருகிற தங்கம் எப்படி டாஸ்மாக் கடைக்கு போய் குடும்ப வாழ்வை சீரழித்தது இதற்கு விளைவாக மாமியார் கொடுமைகள் கணவன் கொடுமைகள் மூலம் குடும்ப வாழ்க்கை சிதைவுண்டு போனது என்பதெல்லாம் ஒவ்வொரு குடும்பத்திலும் நடந்த கதை தான். அந்த தங்கம் எப்படி இந்தியாவில் கொள்ளையடிக்கப் பட்டது. தங்கம் எனும் மஞ்சள் பிசாசு எப்படி இந்தியா நாட்டை ஐரோப்பியர்களிடம் அடிமைப் பட வைத்தது என்று மார்க்கசிய பார்வையில் எழுதப் பட்ட இந்த புத்தகத்தில் மீனாட்சி சுந்தரம் குறிப்பிடுகிறார்.
குறிப்பாக வாஸ்கோடகாமா இந்திய கரையை தொட்டவுடன் தான் கொண்டு வந்த சரக்கை நான்கு பெட்டி நிறைய உல்லன் ஆடைகள், ஜாடி நிறைய தேன், ஆறு தொப்பிகள், சர்க்கரை பவளம், இரண்டு பேரல்களில் எண்ணெய் வெண்கலப் பாத்திரம் கொடுத்து தங்கம் பெறலாம் எனக் கருதி மன்னரை சந்திக்கிறார். நெடிஇருப்பு ஸ்ருபம் என்ற மன்னாரோ, தங்கம் தவிர மற்றதை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார். தங்கம் கொடுக்காமல் திரும்பிப் போக முடியாது எனவும் எச்சரிக்கிறார். சும்மா திரும்பி போக மன்னன் விட மாட்டான் என்று வாஸ்கோடாகாமா எண்ணினார். அப்படியே போனாலும் போர்ச்சுக்கல் மன்னனின் கோபத்திற்க்கு ஆளாக வேண்டும் எனக் கருதிய வாஸ்கோடகாமா, " கப்பலில் தங்கம் இருப்பதாகவும் சரக்குகளை கொடுத்தால் அதற்குக் கப்பமாக தங்கம் கொடுப்பதாக நெடிஇருப்பு மன்னனிடம் கூறி, சரக்குகளை தூக்கி வந்து நாயர்களையும் மீனவர்களையும் கப்பலில் ஏற்றி மன்னருக்குத் தெரியாமல் புறப்பட்டு விட்டான். மீனவர்களை அடிமைச் சந்தையில் விற்று தங்கத்தைத் திரட்டுகிறான். போர்ச்சுகல் மன்னனும் மகிழ்ந்து அவனை இந்தியாவின் கவர்னராக நியமிக்கிறான். இதுதான் நண்பர்களே இந்திய ஐரோப்பிய நவீன தொழில் உற்பத்தி பெருகவும் இந்திய சமூகம் அடிமைபடவும் முக்கிய காரணம். நம் நாட்டின் வளர்ச்சி முடங்கவும் ஒரே காரணம்.
பண வரலாறு பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய கட்டாயம் அனைவருக்கும் உண்டு. பொருளாதாரம் குடும்ப வளர்ச்சியின் முக்கியமான பங்கு. அதே போலவே தனி மனித வளர்ச்சிக்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் ஆதாரமாக உள்ளது. இந்தியா காலனிய நாடாக அடிமைப் படுத்தப் பட்டு இருந்த காலத்தில்தான் பணம் என்னும் வார்த்தையே உருவானது. அதற்கு முன்னர் பண்ட மாற்று முறையே மனிதர்களின் வாழ்வியல் முறையாக இருந்தது. Currency என்ற சொல்லுக்கு பண ஓட்டம் என்று பெயர். பணம் ஓரிடத்தில் இல்லாமல் ஓடிக் கொண்டே இருக்க வேண்டும். அப்பொழுதான் லாபம் சம்பாதிக்க முடியும் என்று வே. மீனாட்சி சுந்தரம் குறிப்பிடுகிறார்.
அதாவது சாமானிய மனிதர்கள் உழைத்து பெறக் கூடிய ஊதியம் டாஸ்மாக் போவது போல, மக்களின் சேமிப்பு முழுவதும் வரி என்கிற பெயரில் கொஞ்சம் கொஞ்சமாக கரைக்கப் படுவதை போல பணம் மனிதர்களிடையே ஓடிக் கொண்டே இருக்கிறது. இந்தியாவில் சுல்தான், முகாலயர்கள் ஆட்சி காலத்தில் தான் வரி வசூல், கடன், வட்டி வசூல் போன்ற முறைகள் அதிகரித்துள்ளன. இந்தியாவில் பண்ட மாற்று முறை முற்றிலும் கை விடப் பட்டு பணம் எனும் முறை வந்த போதுதான் அது மன்னராட்சி முறைக்கே ஆபத்தாக மாறியது. இன்றைக்கும் கூட பொருளாதார வளர்ச்சிக்கு பண மதிப்பு முக்கிய காரணியாகும். உலக நாடுகள் இந்தியாவை கொள்ளையடித்த பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைந்தாலும் இந்தியா நாட்டின் பண மதிப்பு ஏன் மாற வில்லை.
1800 ஆண்டுகளுக்கு முன்னால் ரோம் நாட்டில் பிளினி என்ற வரலாற்று ஆசிரியர் தனது நாட்டு புனித உலோகமான தங்கத்தை இந்தியாவில் கொட்டுவதால் குறைந்து போய் விட்டது என்று சொல்கிறார். செப்டிமிஸ் (septimius ) என்ற ரோம அரசன் செம்பு கலந்த தங்கத்தை இந்தியாவிடம் கொடுக்க இந்தியர்கள் அதை புடம் போட்டு உருக்கி சுத்த தங்கமாக உருவாக்கி உள்ளனர். இந்தியாவில் தங்கம் கோவில்களிலும் மன்னர்களின் காஜானாவிலும் கொட்டிக் கிடப்பதை ரபேல்டு மான்ஸ் எஸ்டேட் - லா - பெர்ஸ்ங்கு - என்ற தகவல் அறிக்கையில் குறிப்பிடுகிறார். இது ஐரோப்பியர்கள் இந்தியாவை நோக்கி தங்கத்தை கொள்ளை யடிக்க வர காரணமாக இருந்தது.
தங்கம் பற்றிய மோகம் எத்தனையே மனிதர்களை அடிமையாகவும், நாட்டையே கொள்ளையடிக்க காரணமாக இருந்த வரலாற்றினை தெரிந்து கொள்வது மூலம் குடும்பம் பொருளாதாரம், நகைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் பணத்தாசையும், தங்க மோகமும் குறித்து தீவிரமாக சிந்திக்க வேண்டியுள்ளது. அதற்கு வரலாற்றின் கரை படிந்த பக்கத்தை புரட்ட வேண்டியுள்ளது.
Comments
Post a Comment