விவசாயியின் ரத்தம்


 அந்த ஆசிரியர் வந்து நின்றதும் அந்த வகுப்பே அமைதியானது. அந்த நிமிட சமயத்தில் ஒரு குண்டூசி விழுந்தால் கூட சத்தம் கேட்கும் அவ்வளவு அமைதி. அனைவரது கண்களும் ஆசிரியரின் கோபத்தை எதிர்பார்த்தன.. அறை முழுவதும் ஆழ்நிலை மௌனத்தில் திளைத்தது. வழக்கத்திற்கு மாறாக ஆசிரியர் ஒன்றும் செய்யாமல் அமர்ந்து விட்டார் என்று நகைத்தனர்.

ஆசிரியர் வருகை பதிவேட்டினை எடுத்து வாசிக்க ஆரம்பித்தார். ஒவ்வொருவரது வருகையையும் குறித்துக் கொண்டே வந்தார்.
"சுந்தரம், சுந்தரம் " என்று இருமுறை அழைத்தும் ஒன்றும் பதில் இல்லை.

" என்ன சுந்தரம் இன்னைக்கு வரலியா " என்று எரிச்சல் அடைந்தார். "

அவன் வரல சார் என்று வினோத் சொன்னான். சுந்தரம் வராத சோகமும் யாரையோ பிரிந்த விட்ட வலியோடு இருந்தான் வினோத்.

என்ன ஆச்சுடா அவனுக்கு இன்னைக்கும் வரல ஒரு வாரமா தொடர்ந்து ஆப்சென்ட் ஆகிருக்கான் " என்று கேட்டார். வினோத்தை அவன் அருகில் அழைத்துக் கேட்டார்.
வினோத் என்ன சொல்வதென்று தெரியாமல் நின்று கொண்டிருந்தான். மனதில் வேதனை பொங்க ஆரம்பித்தது. அவனையும் அறியாமல் கண்ணீர் விட்டான். ஆசிரியர் அதை கவனித்திருக்க கூடும்.

ஏன்டா அழற, அவன் உன் நண்பன் தான, உன் தெரு தான அதான் கேட்டேன் " என்று ஆறுதலாக கேட்டார்.
அவனையும் அறியாமல் ஏங்கி ஏங்கி அழ ஆரம்பித்தான். சார் அவனை எழுந்து ஆறுதல் படுத்தினார்.  எவ்வளவோ ஆறுதல் சொல்லியும் அவனுடைய அழுகையை கட்டுபடுத்த முடியவில்லை. அவனால் பேச முடியவில்லை. தலையைக் குனிந்து அழுவதும், சட்டையில் துடைப்பதுமாக இருந்தான். அந்த நேரம் பார்த்து தலைமை ஆசிரியர் வந்து நின்றார். வகுப்பில் அனைவரும் எழுந்து வணக்கம் சொன்னார்கள். ஆசிரியர் எழுந்து வெளியே போய் வணக்கம் சொன்னார்.

"எதுக்கு அவனை விசாரிக்கிறீங்க என்ன ஆச்சு, எல்லாரும் உக்காருங்க "
என்றார். வகுப்பில் அனைவரையும் உட்கார வைத்து வினோத்தையும் உள்ளே போக சொல்லி விட்டு அவரை மட்டும் தனியே கூப்பிட்டு பேசினார்.

" இல்ல சார் சுந்தரம்னு ஒரு பையன் நல்ல படிப்பான் ஒரு வாரமா வரல அதான் விசாரிக்கிறேன் "

"Oh sure, போன வருடம் கட்டுரை போட்டியில் பைர்ஸ்ட் praize வாங்குன பையன் தான "

ஆமா சார் நல்ல talented ஸ்டுடென்ட் சார்

"சரி ஓகே நா அவங்க parents காண்டாக்ட் பண்ணி பேசுறேன் நீங்க வகுப்பு எடுக்க ஆரம்பிங்க பாஸ்ட் " என்று சொல்லி விட்டு அடுத்த வகுப்பை நோக்கி செல்ல ஆரம்பித்தார்.
வகுப்பில் வினோத் யாரிடமும் பேச வில்லை. அன்றைக்கு முழுவதும் அழுது கொண்டே இருந்தான். மாலையில் பள்ளி முடிந்துதும் ஹெட் மாஸ்டர் சுந்தரத்தின் பெற்றோர் போனை எடுக்க வில்லை எனவும் யாரையாவது நேரில் சென்று பார்த்து வருமாறும் சொன்னார். உடனே அந்த ஆசிரியரே கிளம்பினார்.  அவர் வீட்டிலிருந்து இரண்டு தெரு தள்ளி தான் சுந்தரத்தின் வீடு இருந்தது. பல முறை சைக்கிளில் எதாவது உர மூட்டைக் கொண்டு வயலுக்கு சுந்தரம் போவதை அவர் பல முறை பார்த்திருக்கிறார். அப்போது கேட்டுக் கொள்ளலாம் என்று விட்டு விட்டார். ஆனால் அன்றைக்கு சாயங்காலமும் சுந்தரம் வர வில்லை. இரண்டு நாட்கள் ஆனது. அவன் வருவதாக தெரிய வில்லை. பள்ளியிலிருந்து பெற்றோர்களுக்கு கண்டனம் செய்து கடிதம் எழுதியும் குறுஞ்செய்தி அனுப்பியும் ஒரு பதிலும் இல்லை.
மறுநாள் காலையில் அந்த ஆசிரியரே  சுந்தரம் வீட்டிற்கு போய் பார்த்தார். அப்படியே வினோத் வீட்டிற்கு போனார்.
வினோத் கடைக்கு போயிருந்தான். அவன் அப்பா செய்தி தாள் வாசித்துக் கொண்டிருந்தார்.
" வாங்க வெங்கட் சார் உட்காருங்க " என்று மரியாதையோடு வரவேற்று உட்கார வைத்தார். பிரிட்ஜ்ஜை திறந்து ஐஸ் வாட்டர் எடுத்து கொடுத்தார்.

என்ன சார் வினோத் கடைக்கு போயிருக்கான் என்ன விஷயம்

இல்ல சார் உங்க பையன் நல்ல படிக்கிறான் நா சுந்தரம் பத்தி விசாரிக்கலாம்னு வந்தேன். அவங்க வீட்டுக்கு போனேன் வீடு பூட்டி இருக்கு என்றார்.
அப்படியா அந்த பையன் ஒரு வராம நானும் பாக்கல வினோத்தும் எது கேட்டாலும் சொல்ல மாட்டேங்கிறான் என்றார் வெங்கட் சார்.

" பாவம் சார் சுந்தரம் அவங்க அப்பாவிற்கு உடம்பு சரியில்லை. ஆஸ்பித்திரியில் சேர்த்து பார்த்தாங்க ஆனா குணமடையறது கஷ்ட்டம்னு சொல்லிட்டாங்க என்றார் வினோத் அப்பா. அவர் குரல் உடைந்து இருந்தது.
நல்ல படிக்கிற பையன் அவன் குடும்பத்துல இப்படிய நடக்கணும் பாவம் சார். எல்லாம் நேரம் சார், உங்களால் எதாது உதவி பண்ண முடிஞ்சா பண்ணுங்க சார் எனக்கு கடன் நிறைய இருக்கு இல்லனா என்னால முடிஞ்சதை செய்வேன் என்று அவரே ஆதங்க பட்டார். வெங்கட் சாருக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. சரி எதாவது தகவல் தெரிந்தால் வினோத்திடம் சொல்லி அனுப்புமாறு சொல்லி விட்டு கிளம்பி விட்டார்.  எல்லாரும் எல்லாருக்கும் உதவி செய்ய வேண்டும் என்றுதான் நினைக்கிறோம் ஆனால் வசதிதான் இல்லை. பணம்தான் இல்லை. சுந்தரம் போன்ற திறமையுள்ள மாணவனை இழந்து விடக் கூடாது. வீட்டு கஷ்டம் பிற காரணங்களால் அவன் படிப்பு தடை பட கூடாது என்று அவனுக்கு உதவி செய்ய வேண்டும் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டார். அவரும் இது போன்ற கஷ்ட்டப்பட்ட சூழ்நிலையில் படித்து வளர்ந்தவர்தான். பள்ளி படிக்கும் போதே விடுமுறைக்கு வயலில் களை எடுக்க போய் அதில் கிடைக்கிற பணத்தை சேமித்து வைத்துதான் கல்லூரி கட்டணம் கட்டினார். ஒரு காலத்தில் 100 ஏக்கர் நிலம் இருந்து மிகுந்த செல்வாக்கு பெற்று வாழ்ந்த குடும்பம். ஆனால் விவசாயம் நொடித்து போய் வாங்கிய கடனை அடைக்க முடியாமல் அவர் அப்பா தற்கொலை செய்து கொண்டு இறந்து போனார். கடன் வட்டி ஒரு மனிதனை குடிக்கு ஆளாக்குவதோடு குடும்பத்தையே சிதைத்து விடுகிறது. அந்த வடு எத்தனை தலைமுறை ஆனாலும் மறைவதே இல்லை.

மூன்று நாட்கள் கழித்து சுந்தரம் குடும்பமே காணாமல் போனதாக ஊரில் பேசிக் கொண்டார்கள். வகுப்பில் கூட வினோத்திடம் அனைவரும் விசாரித்தார்கள். ஹெட் மாஸ்டர், வெங்கட் சார், பிஇடி சார் என்று விசாரித்த படி இருந்தார்கள். சுந்தரம் படத்தை போட்டோ எடுத்து பேனர் வைத்து தகவல் தெரிந்தால் உடனே தெரிய படுத்த வேண்டும் என்று ஊர் முழுவதும் ஓட்டினார்கள். அதை வெங்கட் சாரே முன்னின்று செய்தார். சுந்தரத்தின் வீட்டில் பூட்டை உடைத்து பார்த்தார்கள். வீட்டில் அனைத்து பொருட்களும் அப்படியே இருந்தது ஆனால் அவர்களை மட்டும் காணவில்லை. வினோத் தெரு தெருவாக அலைந்து சுந்தரம் உறவினர்கள் அனைவரிடமும் விசாரித்தான். ஆனால் எந்த தகவலும் இல்லை. அந்த வருடம் நடக்கிற விவசாயம் குறித்த விழிப்புணர்வு முகாமில் மாநில அளவில் கட்டுரை போட்டி நடக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது. வெங்கட் சாருக்கு வருத்தமாக இருந்தது சுந்தரம் இருந்திருந்தால் அவன் கலந்து கொண்டு பரிசு பெறுவான். என்று நினைத்துக் கொண்டார்.

ஆனால் எப்படி ஒரு குடும்பமே காணாமல் போனது என்று ஆச்சரியமாக பேசிக் கொண்டார்கள். ஆனால் இரவில் அவர்கள் வந்து வீட்டில் சமைத்து சாப்பிட்டு புழங்கி விட்டு போகிறார்கள் என்று செய்தி பரவியது. ஆனால் அவர்களை நேரில் பார்க்க முடியவில்லை. பகலில் அவர்களை நேரில் பார்க்க முடியவில்லை. இரவில் யாருக்கும் தெரியாமல் வந்து விட்டு போகிறார்கள் என்று பேசிக் கொண்டார்கள் . வெங்கட் சாரும் வினோத்தும் கூட இரவில் வீட்டில் அருகே மறைந்து இருந்து பார்த்தார்கள். ஆனால் சுந்தரத்தின் குடும்பம் எப்போது வருகிறார்கள் போகிறார்கள் என்று யாருக்கும் தெரியவில்லை. எப்படியாவது கண்டு பிடித்து விடலாம் என்று வெங்கட் சார் நம்பிக்கையோடு தேடினார். ஆனால் அவர்கள் இரவில் வந்து யார் கண்ணிலும் படாமல் போய்விடுவார்கள்.
இரண்டு மாதங்கள் கழித்து ஊரில் நான்கு வழி சாலை போடுவதாகவும் சாலையை அகல படுத்த போவதாகவும் சொல்லி ஊரில் உள்ள பழைய மரங்களை வெட்டினார்கள் . இதற்கு ஊரில் நிறைய போராட்டங்கள் நடைபெற்றது. தாலுகா ஆபீஸ் கலெக்டர் ஆபீஸ் போய் மனு கொடுப்பதெல்லாம் நடந்தேறியது . ஆனால் வழக்கம் போல அனைத்தும் மூடி மறைக்கபட்டு சாலை தயாரானது. நிறைய மரங்கள் வெட்டப்பட்டு தரையில் விழுந்தன . மரங்கள் வெட்டப்படுவதை பார்த்து அந்த கிராமத்து விவசாயி ஒருவர் நெஞ்சு வலி வந்து மாண்டு போனார்.  தினசரி நாளிதழ் ஒன்றில் அவருடைய படத்தை பெரிதாக போட்டிருந்தார்கள்.  அந்த செய்தி படித்ததும்  வெங்கட் சார் சுந்தரத்தை நினைத்துக் கொண்டார்.

சாலை போடும் பணியின் போது சுந்தரம் வீட்டின் அருகே உள்ளே மரத்தை வெட்டும் போது அந்த மரத்திலிருந்து எலும்பு தோலுமாக இருந்த சுந்தரத்தின் அப்பா விழுந்தார். அனைவரும் அதிர்ந்து போய் பார்த்தார்கள் ஜேசிபி ஓட்டுபவனுக்கு திகைப்பாக இருந்தது. இன்னொரு கிளை ஓடிந்து சுந்தரம் விழுந்தான். அதை தொடர்ந்து அவன் அம்மா இரண்டு தம்பிகள் ஒரு தங்கை அனைவரும் விழுந்தார்கள். இவர்கள் ஏன் மரத்திலிருந்து விழுகிறார்கள் என்று ஊரில் அனைவரும் பேசினார்கள். வினோத் அப்பா உடனே போய் சுந்தரத்தின் அப்பாவை தூக்கினார். வினோத் வெங்கட் சாரை கூப்பிட்டு வர ஓடினான். ஊரே ஒன்று கூடியது  . சாலை போட வந்த அதிகாரிகள் விசாரித்து பார்த்தார்கள். ஆனால் சுந்தரத்தின் குடும்பத்தில் ஒருவர் கூட பேசவே இல்லை. அனைவரும் அதிசயத்தை பார்ப்பதை போல பார்த்து பேசிக் கொண்டார்கள்.

மேலவீதியில் கடை வைத்திருந்த நாச்சியப்பன் வந்து சுந்தரத்தின் அப்பாவை செவுளோடு அறைந்தான்.

தாயோலி மவனே வாங்குன கடனே குடுக்கமால் ஏமாத்தி ஊரை விட்டு ஓடுனா விடுர்வனே எனக்கு பணம் வரல இன்னைக்கு உன்ன என்ன பண்ற பாரு என்று அவர் கட்டியிருந்த வேஷ்டியை உருவினான்.

சுந்தரம் அவன் மீது பாய்ந்து மிதித்தான். இருவரும் கட்டி புரண்டனர். சுந்தரத்தின் அப்பா பெருங்குரலெடுத்து அழுதார் . கடன் வாங்கி விட்டு அவமானம் தாங்க முடியாமல் இப்படி குடும்பமே சேர்ந்து மரத்தின் மீது ஏறி ஒளிந்து இருந்த கதை ஊர் முழுவதும் பரவியது. சுந்தரத்தின் அப்பா செத்த பிணத்தை போல நின்றார்.
வெங்கட் சார் வந்து சுந்தரத்தை பார்த்தார். பல நாட்கள் பட்டினி கிடந்த சுந்தரம் பசியில் வாடி போயிருந்தான்.  வெங்கட் சாரும் வினோத்தின் அப்பாவும் சேர்ந்து பணம் திரட்டி கடனை கொடுத்தார்கள். மீதி பணம் சுந்தரம் படித்து வேலைக்கு போனதும் தருவதாக முடிவானது. அவர்களுக்கு ஆளுக்கொரு வீட்டில் இருந்து சாப்பாடு வந்தது. வெங்கட் சார் இரவு வரை கூடவே இருந்து ஆறுதல் சொல்லி விட்டு போனார்.

ஆனால் மறுபடியும் மறுநாள் சுந்தரம் வரவில்லை . சாயங்காலம் அவமானம் தாங்க முடியாமல் சுந்தரதின் அப்பா கிணற்றில் விழுந்து இறந்து போனார் .
வெங்கட் சார் அவன் வீட்டுக்கு போன போது ஊரே ஒன்று கூடி இருந்தார்கள்.  நனைந்த காகிதத்தை போல சுந்தரத்தின் அப்பா கிடந்தார்.
ஒவ்வொருவராக வரத் தொடங்கினார். கடன் கொடுத்த நாச்சியப்பன் வந்து கடன் யார் தருவார்கள் என்று குடித்து விட்டு தகராறு செய்தான். ஊர் மக்கள் திட்டி அனுப்பினார்கள். நீர் மாலை எடுத்து இடுகாட்டிற்கு கூட்டி போவது வரை வெங்கட் சார் கூடவே இருந்தார். வினோத் மூன்று நாட்களாக பள்ளிக்கு போகாமல் சுந்தரத்தின் அருகிலேயே இருந்தான் .
ஆசிரியர் இதை நினைத்து நெஞ்சடைத்தது போன்று உணர்வார். ஒவ்வொருமுறை சுந்தரம் வீட்டிற்கு போவது வேதனையும் துக்கமும் பீறிட்டுக் கொண்டிருக்கும். அவனை என்ன ஆறுதல் சொல்லி தேற்றுவது என்று தெரியாமல் இருக்கும். இறுதி சடங்கு அன்று அடித்த மொட்டை தலையோடு வெளியே கருவேல மரத்தினடியில் கட்டிலை போட்டு படுத்திருப்பான். அவனால் தான் என்ன செய்ய முடியும். நாட்டில் எத்தனையோ தப்பெல்லாம் பண்ணி விட்டு எவன் எவனோ சந்தோசமாக இருக்கும் போது சுந்தரம் போன்ற நல்லா படிக்கிற பையனுக்கு இந்த நிலைமையா? அந்த கடவுளுக்கு கொஞ்சம் கூட இரக்கமே இல்லையா என்றெல்லாம் நினைப்பு அவரை ஆதங்க பட வைக்கும். அவனை எப்படியாவது படிக்க வைக்க வேண்டும். என்று மட்டும் மனதில் நினைத்துக் கொள்வார்.

இப்படியே ஒரு மாதம் சென்றிருக்கும். சுந்தரதின் இருக்கை இன்றும் காலியாகவே இருந்தது. அவன் பள்ளிக்கு வருவதில்லை. அந்தாண்டு இறுதித் தேர்வு நெருங்குகிற சமயத்தில் சுந்தரம் வராமிலிருப்பது அவருக்கு வருத்தமாக இருந்தது. வினோத்திடம் கேட்டார். அவன் இரண்டு நாட்களாக அவனை பார்க்க வில்லை என்று சொன்னான். பாவம் இன்னும் அப்பா இறந்த துக்கத்தில் இருந்து விடுபட முடியவில்லை போலும் . சிறு வயதில் விழுந்த மரணத்தின் வடு வாழ்நாள் முழுவதும் மறைவதே இல்லை. மாலை அவன் வீட்டிற்கு போய் அவன் படிப்பை செலவை தான் ஏற்பதாக சொல்லிவிட்டு தேற்ற வேண்டும் என்று நினைத்துக் கொண்டார்.

அன்றைக்கு முழுவதும் அவன் நினைப்பே ஓடிக் கொண்டிருந்தது. தான் சிறு வயதில் கஷ்ட பட்டத்தை போல அவனும் கஷ்டபடக் கூடாது என்று நினைத்தார்.  அவன் வீட்டிற்கு செல்லும் ஒற்றை யடி பாதையில் போய்க் கொண்டிருந்த போது தொலைவில் சுந்தரம் வயலில் வேலை செய்து கொண்டிருந்தான். அவருக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவன் வீட்டில் இருப்பான் என்று பார்த்தால் வயலில் வேலை பார்த்து கொண்டிருக்கிறான். ஒரு வேலை வீட்டு கஷ்டம் காரணமாக அவன் அம்மா படிப்பை நிறுத்தி விட்டார்களோ என்று பதட்டமாக இருந்தது. தூரத்தில் அவன் அம்மா தம்பிகளும் களை பிடுங்கி கொண்டிருந்தனர்.

சுந்தரத்தை கூப்பிட்டார். அவன் மும்முரமாக வேலை செய்து கொண்டிருந்தான். நான்கு முறை சப்தமாக கூப்பிட்டதும் அவனே வந்தான்.

என்னடா ஸ்கூல்க் கு வரல பரீட்சை வேற வர போகுது என்று கேட்டார்.
அவன் என்ன சொல்வதென்று தெரியாமல் தலை குனிந்து நின்றான்.

தயங்கி தயங்கி இனிமே ஸ்கூலுக்கு வரல சார் என்று சொன்னான். அவரை பார்த்து அவனால் பேச முடியவில்லை. நிராசையின் வடு ஏக்கமாக அவன்முகத்தில் வெளிப்பட்டது .

சுந்தரம் உன் நிலைமை எனக்கு புரியுது நீ படிச்சதான் முன்னேற முடியும் உன் குடும்பத்தையும் முன்னேற்ற முடியும் என்று அவன் தோளில் கை வைத்த படி சொன்னார்.

அவனுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. காரணமே இல்லாமல் யாரோ தன் குடும்பத்தை இப்படி படு குழியில் தள்ளி விட்டதை போல உணர்ந்தான்.

நாளைக்கு நீ ஸ்கூலுக்கு வர்ற சரியா உன் படிப்பு செலவ நா பாத்துக்குறேன் என்றார்.

அவனால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

இல்ல சார் வேண்டாம் நா வேலைக்கு போய் தம்பி தங்கச்சிய படிக்க வசிக்கிறேன் சார் குடும்பத்துல எல்லாரும் படிக்கணும்னு அவசியம் இல்லல என்றான்.

ஏன்டா இப்படி யோசிக்கிற ஒவ்வொரு மனிதனுக்கு கல்வி அவசியம். அவன் வாழ்க்கையை ஒழுக்கமாக வாழ்வதோடு இந்த உலகத்தை சரியாக புரிந்து கொள்ளவும் கல்விஅறிவு தான் தேவை முக்கியம் என்றான்.

ஆனால் அதை விட பசி ஒன்னு இருக்குல்ல சார் நா படிக்கிறதுக்காக என் குடும்பம் ஏன் சார் பட்டினி கிடக்கணும் என்றான்.

அவர் அவன் தோள் மேல் கை போட்டு நடத்தி கூட்டிக் கொண்டு போனார்.
வேப்ப மரத்தடியில் இருவரும் உட்கார்ந்தார்கள் பழுத்த வேம்பின் இலைகள் சிதறிக் கிடந்தன. அவர்கள் அமர்ந்ததும் ஒரு வேப்பழம் ஒன்று சுந்தரத்தின் தலை மீது விழுந்தது.

" நா உனக்கு பார்ட் டைம் ஜாப்க்கு ஏற்பாடு பண்றேன் நீ ஸ்கூல் லீவ் அன்னைக்கு வேலைக்கு போ அட்டாண்டென்ஸ் நான் ஹெட் மாஸ்டர்ட பேசி உனக்காக ஹெல்ப் கேக்குறேன் நீ எத்தனை நாள் வென லீவ் எடுத்து வேலைக்கு போய்டே படி எக்ஸாம் மட்டும் வந்து எழுதிடு என்றார்.

அவர் சொல்வதெல்லாம் நடக்குமா என்று திகைப்பாக இருந்தது. அவன் எதுவும் சொல்லாமல் காய்ந்த வேப்பம் பழம் ஒன்றை கையில் வைத்த படி இருந்தான்.

" அப்பா சாகும் போது விவசாயத்தை தொடவே கூடாது படிச்சு வேற வேலைக்கு போகணும் நா பட்ட கஷ்டத்தை நீயும் படக் கூடாது என்று சொன்னாரு ஆனால் அதுக்காக எங்க அப்பா தோற்று போன விவசாயத்தை நான் செஞ்சு அதுல ஜெயிக்க போறேன் சார் அவர் மகனா நா அவருக்கு செய்கிற மரியாதை சார் நான் விவசாயி மகன் சார் என்று சுந்தரம் சொன்னான். "

வெரி குட் சுந்தரம் நல்ல முடிவு. ஆனால் படிப்பு அவசியம். நீ படித்து உன் அறிவை வளர்த்துக் கொண்டு விவசாயத்திலும் வேளாண்மையிலும் நிறைய மாறுதல்களை கொண்டு வரணும் உலகம் முழுவதும் நம் விவசாயத்தின் தேவையை தெரிய படுத்தனும் அது உன் கையில் தான் உள்ளது நீ படிக்கணும் நல்லா என்றார்.

அதெல்லாம் நடக்குமா சார் இந்த நிலைமையில நா எப்படி அதை பண்றது சார் என்று ஏக்கதோடு கேட்டான் சுந்தரம்.

சுந்தரம் இன்றைக்கு தொழில்நுட்பம் வளர்ந்து விட்டது. மக்கள் இயந்திரங்களை கொண்டு வாழ ஆரம்பித்து விட்டார்கள். ஆனால் என்றைக்கும் அழியாத ஒன்று விவசாயம்தான் அதனால் சொல்றேன் உனக்கு கல்வி முக்கியம் என்றார் வெங்கட் சார்.

ஆனால் எங்க அப்பாக்கு ஏன் சார் இந்த நிலைமை அவரும் விவசாயம் செஞ்சு இந்த ஊருக்கு நல்லது தான செஞ்சாரு என்று உடைந்து குரலில் கேட்டான். மனம் முழுவதும் பாரம்.

சரிதான் உன் நிலைமை புரியுது. அது அரசியல் மனித வாழ்க்கையில் அரசியல் முக்கியம். புத்திசாலித் தானமா வாழணும்னா பொருளாதார அறிவு நடைமுறை வாழ்க்கை அறிவு எல்லாம் தேவை அதுக்கு படிக்கணும் திறமையை வளத்துக்கணும் என்றார்.

இன்றைக்கு படிப்பறிவு இல்லாமல் இல்லாமல்தான் நிறைய விவசாயிகள் தங்கள் உரிமையை இழக்கிறார்கள். உங்க அப்பா ஆசைபட்ட மாதிரி நீ விவசாயத்துக்கே ஒரு முன்னோடியா வரணும். ஒரு படித்த விவசாயிதான் இந்த பூமியின் உண்மையான மனிதன் நீயும் இந்த மாதிரி நிறைய மாறுதல் களை கொண்டு வரணும் என்று உணர்ச்சி வசப்பட்டு வெங்கட் சார் பேசிக் கொண்டே போனார்.

அவன் அடி வானத்தை பார்க்க ஆரம்ப்பி
த்தான். எதுவும் சொல்ல வில்லை. ஆனால் மனதில் ஏனோ ஒரு புத்துணர்ச்சி ஏற்பட்டவனாகஇருந்தான்.
அந்தியின் இருட்டில் இருவரும் அமர்ந்திருந்தார்கள். வேலை முடிந்து சுந்தரத்தின் அம்மா அவனை கூப்பிடுவது கேட்டது . அவன் அவரிடம் அவனை பார்க்க வந்ததுக்கு நன்றி சொல்லிவிட்டு எழுந்து சென்றான்.
அவன் போவதை வெங்கட் சார் நெடு நேரமாக பார்த்துக் கொண்டிருந்தார். களத்து மேட்டில் ஏறி இறங்கி அவன் உருவம் மறைந்தது.

அன்று பள்ளியில் மதுவை ஒழிக்கவும் விவசாயத்தை மற்றும் சுற்று சூழல் பாதுகாப்பு குறித்தும் விழிப்புணர்வு பேரணி நடக்க ஏற்பாடு நடைபெற்றுக் கொண்டிருந்தது.
மறுநாள் காலையில் வழக்கம் போலவே வெங்கட் சார் வகுப்புக்கு வந்தார். அவராக மனதிற்குள் முடிவெடுத்துக் கொண்டு வருகை பதிவேடு எடுக்க ஆரம்பித்தார். தலை குனிந்த வாறு ஒவ்வொரு பெயராக வாசிக்க ஆர்சம்பித்தார். சுந்தரத்தின் பெயர் வந்ததும் வாசிக்காமல் கடந்து போனார். ஆனால் வாசலில் சுந்தரம் வந்து நின்றான். கூடவே அவன் அம்மாவும் வந்திருந்தார்கள்.
எல்லோரும் அவன் வந்ததை நினைத்து சந்தோச பட்டார்கள். வெங்கட் சாருக்கு ஆச்சர்யமாகவும் பெருமையாகவும் இருந்தது .

என் மகனை நா படிக்க வைப்பேன் சார் இத்தன நாள் அவன் லீவு போட்டதுக்கு முறைப்படி மன்னிப்பு கடிதம் கொடுக்க வந்தேன் சார் என்று சுந்தரத்தின் அம்மா சொன்னார் . வெங்கட் சார் அவனை உட்கார சொன்னார். வகுப்பு ஆரம்பமாகியது. அன்றைக்கு ஆசிரியர் சொன்ன பாடத்தில் இறுதியில் விவசாயம் வருங்காலத்தில் எப்படி இருக்கும் என்பது பற்றியதாக இருந்தது. சுந்தரம் ஜன்னல் வழியாக அவன் அம்மா நடந்து போனதையே பார்த்துக் கொண்டிருந்தான். உறுதியோடு வேகமாக அவன் அம்மா நடக்கையில் அவனுக்கே தைரியமும் நம்பிக்கையும் வர ஆரம்பித்தது. 

என்ன சுந்தரம் இப்போதிலிருந்தே லட்சியித்தை ஆரம்பித்து விடலாமா என்று வெங்கட் சார் அவனிடம் கேட்டார். அவனும் உற்சாகமாக சரி என்றான். மாணவர்கள் எழுந்து ஊர்வலம் போக வரிசையாக நிற்க ஆரம்பித்திருந்தார்கள். அவர்களோடு ஒருவனாக சுந்தரமும் நின்றிருந்தான்.
அமைதி ஊர்வலம் வெற்றிகரமாக நடந்து முடிந்தது.

Comments

Popular posts from this blog

செகண்ட் ஷோ நினைவுகள்

சுருளி நினைவுகள் பகுதி -1

சுருளி நினைவுகள் பகுதி -2 : ( கடவுள் எனும் நண்பன் )