மென்னடை தொடும் நேரம்
இன்ஸ்டாகிராமில் Lukepk எனும் page உள்ளது அதில் கை இசைக் கருவிகள் கொண்டு ( Instrumental music ) இசைக்கப்படும் இசை எனை வெகுவாக கவர்ந்தது. Adagietto என்ற மென்னடை இசை கேட்பதற்கு இதமாக உள்ளது. உறக்கம் வராத பின்னிரவில் அதைக் கேட்டுக்கொண்டிருந்தேன் காற்று உடலை தொடுவது போல மென்மையாக இருந்தது. இசை மனதை தொடுவதை போல வேறெந்த தொடுதலும் மனதை ஆறுதல் படுத்தாது. இந்த இசை ஜென் எனப்படும் பௌத்த அமைதி நிலைக்கு ஒப்பானது. மெல்ல மெல்ல கவலைகள் மறந்து மனம் அந்த இசையின் சப்தத்தோடு ஒன்றாக ஆரம்பிக்கும் போது ஒரு அனைத்தையும் கடந்த சாட்சி நிலை உருவாகும். அது மனமற்ற நிலை.
மனமின்றி நினை சிறகுகள் இன்றி பற என்று ஓஷோ சொல்வது மிக மிக பொருத்தமாக இருக்கும். The shawshank redemption திரைப்படத்தில் ஒரு காட்சியில் ஆண்டி சிறைச் சாலைக்குள் திடீரென்று இசையை மீட்டு விடுகிறான். ஒட்டு மொத்த சிறைக் கைதிகளும் ஒரு நிமிடம் பிரமித்து போய் நின்று அந்த இசையை ரசிப்பார்கள் அந்த குற்றத்திற்காக அவனை இருட்டறையில் அடைத்து விடுவார்கள். மற்றொரு காட்சியில் ஆண்டி நண்பர்களிடம் அந்த சில நிமிட இசை இருட்டறையில் தான் அடைப்பட்டு கிடக்கும் போது மனதில் கேட்டுக் கொண்டே இருந்தது. என்று சொல்கிறான். வாழ்க்கையில் நிறைய விஷயங்கள் நம்மை விட்டு சென்று விடும். ஆனால் சில விஷயம் மட்டும் நமக்கு மட்டுமே சொந்தம். இசை அற்புத மான நம்பிக்கையை ஏற்படுத்தும் என்று சொல்கிற ஆண்டி அதை ரசிப்பது தவறில்லை என்று சொல்கிறான்.
இசை பல நேரங்களில் நல்ல நண்பனாக மனதிற்கு அமைதியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தக் கூடியது.இந்த இசையும் அதற்கு ஒப்பானது தான்.
Comments
Post a Comment