நாவலிசை.. ✍️
எழுத்தாளர் ஜானகி ராமன் எழுதிய மோகமுள் நாவல் வாசித்தேன். சங்கீதம், இசை மனித வாழ்வில் எத்தனை ஆழமாக பின்னி பிணைந்துள்ளது என்று அவரை வாசிக்கும் போது தோன்றும். கும்பகோணம் பகுதி மக்களின் வாழ்க்கையும் ரங்கண்ணா போன்ற இசை கலைஞரின் வாழ்வும் இசை மீது அவர் கொண்டுள்ள ஆழமான அன்பும் மறக்கவே முடியாத கதை. நாவல் வாசித்து முடித்தும் ரங்கண்ணா மனதில் நிலையாக நின்று கொண்டிருக்கிறார். ஆண் - பெண் உறவுகளை பற்றியும் அவர்களின் உணர்ச்சிகளை அழகாக ஜானகி ராமனை போலவே யாராவது எழுதிஇருப்பார்களா என்று வியக்கும் அளவிற்கு இந்த நாவல் முக்கியமானது.
இசை என்பது வெறும் சப்தம் இல்லை. அதுவொரு வாழ்வியல் முறை. நெறியான அன்பை மட்டுமே வெளிபடுத்திகிற நாதவெளி. காகம் கரைவது, சமையலுக்கு தாழிசம் செய்வது, சேவல் கூவுவது போன்ற அன்றாட வாழ்வின் ஒவ்வொரு தருணத்திலும் இசை கலந்திருக்கிறது. அதை ரங்கண்ணா போன்றோர்களே எடுத்து சொல்கிறார்கள். இந்த மொத்தம் நாவலிலும் பாபுவும் ரங்கண்ணாவும் இசையை பற்றியும் அதன் மகத்துவத்தை பற்றியும் சங்கீத வகுப்பில் போது உரையாடும் அத்தியாயம் மறக்க முடியாத ஒன்று. மௌனத்தில் சங்கீதத்தை வாசிப்பதாகவும் அதை கேட்டு இன்புறுவதாகவும் ரங்கண்ணா ஓரிடத்தில் சொல்கிறார் . அதை எளிதில் கடந்து போக முடியாது.
பெண்கள் மீது ஆண் கொள்ளும் பேரன்பும் பக்தியும் இதில் எழுதப் பட்டுள்ளது. இளம் வயது ஆணுக்கு பெண்கள் மீது ஏற்படும் காதலும் உடல் மீதான கிளர்ச்சியும், அதனால் ஏற்படும் மனப் போராட்டமும் யாவரும் கடந்து வந்த விஷயம்தான். இதில் பாபுவின் மூலம் அந்த அனுபவத்தை நம் நினைவு கொள்வது அந்த உணர்ச்சிகளை புரிந்து கொள்ள உதவி செய்கிறது. ஆணாதிக்க மனோபாவத்தில் துன்ப பட்டு அடக்கப்பட்ட உணர்ச்சியின் வெளிப்பாடு சிதறி உடைந்து போவதை போலத்தான் தங்கம்மாள் கதாபாத்திரம். யாருமே இல்லாத கைதியை போலத்தான் அடைப்பட்டு கிடக்கிறாள். ஆனால் அவள் கணவரால் அவளை திருப்திபடுத்த முடியவில்லை. திருப்தி என்பதை விட அடிப்படையான வாழ்வின் பாசத்தை கூட அவரால் தான் மனைவிக்கு கொடுக்க முடியவில்லை. பாபுவின் அன்பு அவளுக்கு கிடைத்த வுடன் அவளால் அந்த கட்டுப்பாடுகளை மீறித்தான் போக வேண்டியிருக்கிறது. அடக்கப் பட்ட உடல் தேவை தான் பாபு மீது தீராத காதலாக மாறுகிறது. ஆனால் அதை அவளால் அர்த்த படுத்திக் கொண்டு தைரியமாக வாழ முடியவில்லை. அது அந்த கால காட்டத்து சமூக நிலை. பெண்களை அந்த கட்டுப்பாட்டிற்குள்தான் வைத்திருந்தது. தங்கம்மாள் செய்தது சரி தவறு என்று வாதிப்பதை விட அவள் நிலைமைக்கு என்ன காரணம் என்று யோசிப்பதுதான் சரியான அணுகுமுறை. அதன் இன்னொரு வடிவமாகத்தான் பார்வதி கதாபாத்திரம். யமுனா போன்றோர்கள். இதில் யமுனா மட்டுமே என்ன நடந்தாலும் பரவாயில்லை என்று சமூக கட்டுப்பாடுகளை மீறி வாழ முயல்கிறாள் .
உடல் தேவை என்ற ஒன்றின் மீது ஏற்பட்டுள்ள விவாதம் மற்றும் அடிப்படை அம்சங்களை நாவல் பேசுகிறது. ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான உடல் சார்ந்த தேவைகள் தவிர்க்க முடியாதவைதான். இதை ஆணோ பெண்ணோ புரிந்து கொள்ளும் போதுதான் உறவுகள் வலுவடையும். அனையத்தையும் தாண்டி நமது மரபார்ந்த கட்டுப்பாடுகள் மனித உறவுகளின் படிநிலைகளை தீர்மானிப்பதும் அதன் கருத்தியலும் சுதந்திரமான வாழ்க்கைக்கு சரிவருமா என்ற கேள்வி எழுகிறது.
இந்த கால கட்டத்தில் ஆண் பெண் உறவுகள் எப்படி இருக்கிறது. சமூக வலை தளங்களிலும் வீடியோ சாட்டிங் ஆப்களும் பெருகி விட்ட சூழலில் இயற்கையான உடல் சார்ந்த தேவைகள் புணர்ச்சியும் புரிந்து கொள்ள பட்டுள்ளதா என்று சிந்திக்க வேண்டியுள்ளது . போன் வந்ததில் இருந்து காட்சி வழி புலன் இன்பம் அதிகரித்து விட்டது. ஏகப் பட்ட ott இணைய தொடர்கள், உடல் உறவு கிளர்ச்சி வீடியோக்கள் போன்றவை பெருகி விட்டன. இணைய வழி விபச்சாரம் நடக்கிறது. Bliss என்கிற ஆப் அதில் பெண்களின் நிர்வாண வீடியோக்கள் வெளியிட படுகின்றன. அதற்கு பணம் செலுத்த வேண்டும். தனிமையில் உடல் தேவையை பூர்த்தி செய்து கொள்ளும் அளவிற்கு உடல் உறவு என்ற ஆணுக்கு பெண்ணுக்குமான அழகான ஆரோக்கியமான உறவு மலிவாகிவிட்டது. இது பற்றி எந்த ஆணும் பெண்ணும் குற்ற உணர்வு கொள்வதில்லை. குறிப்பாக இளம் வயதில் உடல் சார்ந்த பிரச்சனை அனைவருக்கும் இருக்கிறது. மோகமுள் நாவல் சிறந்த ரசனையான நாவல். அழகான மொழி நடை. இனிமையான கதை சொல்லல் முறை. வாசிக்க மனம் மென்மையடைவதை உணர முடியும். ஆண் பெண் உணர்வுகளின் வெளிப்பாடு மற்றும் இசை மீது நாட்டம் கொண்ட மனிதனின் உளவியல் மற்றும் பெண்கள் மீதான அவனது பார்வை எப்படிப்பட்டது என்று புரிந்து கொள்ள முடிகிறது.
இன்றைக்கு ஏன் இந்த நாவல் வாசிக்க வேண்டும் என்ற கேள்விக்கு பெண்களை புரிந்து கொள்ள முடியாமல் தவிக்கும் இளம் வயது ஆண்களின் குழப்பத்தை புரிந்து கொள்ள உதவிசெய்கிறது. அதிலும் குறிப்பாக உடல் ஆசை குறித்து நம் கொண்டுள்ள கருத்தியலை பற்றி சிந்திக்க வைக்கவும் செய்கிறது.
குறிப்பாக உடல் ஆசை பாலியல் தேவைகளுக்கு வயது காரணமா? வயது அதிகமுள்ள பெண்கள் மீது அவர்களை விட வயது குறைந்த ஆண்கள் கொண்டுள்ள ஈர்ப்பின் காரணத்தை பற்றி நம்மை சிந்திக்க வைக்கிறது .
முக்கியமாக திருமணம் ஆகாமல் உடல் தேவைகள் பூர்த்தி அடையாத பெண்களின் மனநிலை அவர்களது அவல நிலை பற்றி பேசபட்டுள்ளது. இதற்கு நேர் மாறாக திருமணம் ஆகியும் ஆணாதிக்க சூழலால் பாதிக்க படுகிற தங்கம்மாள் என்ற பெண்ணின் உளவியலையும் பேசுகிறது. இதற்கு என்ன காரணம் சமூக கட்டுப்பாடுகள் எப்படி பெண்களுக்கு எதிராக ஆணுக்கு சாதகமாக இருந்தன என்பது பற்றி புரிந்து கொள்ள முடிகிறது. உடல் தேவையை பூர்த்தி செய்து கொள்வது ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமான உரிமை. ஆனால் நமது சமூகத்தில் ஆண்களுக்கு சுதந்திரம் இருப்பது போல் பெண்களுக்கு இருப்பதில்லை .
ஆனால் காதல் ஒரு வாழ்க்கைக்கு ஒழுக்கத்தையும் மரபார்ந்த அர்த்தத்தை கொண்டுள்ளது என்ற சிந்தனை தோன்றியது . காதல், உடல் மற்றும் பாலியல் சார்ந்த மனிதர்களின் உளவியல் போராட்டங்களை விளக்கும் நாவல் இன்றைய கால கட்டத்தில் தேவை. பழங்கால பெண்களை போலவே இன்றைய கால கட்ட பெண்களும் வறுமையான சூழலில் ஆண்களும் குடும்ப சூழ்நிலையால் திருமணம் நடக்காமல் உடல் தேவை மற்றும் நல்ல பெண் துணை இல்லாமல் உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக் கொண்டு வாழும் மனிதர்கள் சந்திக்கும் பிரச்சனை ஏராளம். இது உளவியல் பிரச்சனையாக மாறுகிறது. தி. ஜா வின் இந்த நாவல் புரிதல் கொண்ட மனதினை பற்றி பேச முயற்சி செய்துள்ளது.
கனலி இலக்கிய இணைய தளத்தில் இயக்குனர் ஞ்சன சேகரன் நேர்காணல் வாசித்தேன்.
1995 ஆம் ஆண்டு மோக முள் திரைப்படம் ஞ்சான சேகரன் இயக்கி வெளியிடபட்டது. இளையராஜா இசையில் உருவாக்கி வெளிவந்த திரைப்படத்தில் யேசுதாஸ் பின்னணி குரலில் வெளியான பாடல் இருக்கிறது . இதில் "கமலம் பாத கமலம் உயர் மறையெல்லாம் புகழும் பாதக் கமலம் " ஒரு தெய்வீகமான இசை. இனிமையான அதிகாலை குளிரையும் கடவுள் மீதுள்ள பக்தியும் சங்கீதத்தின் கருணையும் புரிந்து கொள்ள முடியும். பல முறை கேட்டிருக்கிறேன். திரைப்படத்தில் இளையராஜாவின் இசை மேதைமை அபார ஞ்சானம் பொருந்தியது. Tremendous knowledge என்ற ஆங்கிலத்தில் ஒரு வார்த்தை உள்ளது. ஜே. கே கிருஷ்ண மூர்த்தியின் உரையின் போது அந்த வார்த்தையை புதிதாக கேட்டேன். பிரமாண்டமான மிக பிரமிப்பு மிக்க இருப்பை பற்றி குறிப்பிட்டிருப்பார். அந்த இருத்தலை நாவலில் ரங்கண்ணாவும் வெளிப்படுத்தகிறார் . வார்த்தைகளின் வழியே கதைகளின் மூலம் இசையையும் நாதத்தையும் தி. ஜா வெளிப்படுத்துவது அற்புதமான அனுபவம். உரைநடையில் இசையை கேட்பதை போல ஒரு அனுபவம் அது.
ரங்கண்ணா நாவலில் சங்கீத பயிற்சியின் போது இப்படி சொல்கிறார் :
குரலில் மாயமெல்லாம் செய்து காட்டணும் உடலும் மனமும் சங்கீதமாகவே மாறனும் என்று. தி. ஜா வின் நாவலை வாசிக்கையில் இசையின் மீதும் சங்கீதம் மீதும் மிகுந்த ஈடுபாடு ஏற்பட்டு விட்டது. இசையை புரிந்து கொள்ள கலைகளின் மீது அறிவும் பற்றும் வேண்டும். தஸ்தயேவ்ஸ்கி சொன்னதை போல கலைகள் தான் மனித துயரங்களுக்கு ஒரே மீட்சி. அந்த வகையில் சங்கீதம் பற்றி தெரிந்து கொள்ள இதுவே சிறந்த நாவல்.
ரங்கண்ணா நடையில் இருந்த ஒட்டுத் திண்ணையில் உட்கார்ந்திருந்தார். கண் மூடிஇருந்தது. வலது கை இடது கைக்கு மேல் அசைந்து கொண்டிருந்தது மேலும் கீழும் முன் கையை உயர்த்தி தாழ்த்திக் கொண்டிருந்தார். சப்தம் ஏதும் வாயிலிருந்து எழவில்லை. சித்த சுவாதீனம் இல்லாத நிலையின்று ஐயம் எழுப்பும் சேட்டை இது. தன்னை மறந்த அந்த லயிப்பில் உடல் உள்ளம் உயிர் எல்லாவற்றையும் இழந்து விட்டிருந்தது போலிருந்தது. என்று தி. ஜா ரங்கண்ணாவைப் பற்றி எழுதியிருந்தார். ஜே. கே குறிப்பிட்ட அதே பிரமாண்ட அபிரிமிதமான இருந்தல் அது. இசைக்கும் சங்கீதத்திற்கும் அந்த வல்லமை உண்டு. என்று இயக்குனர் குறிப்பிடுகிறார்.
நல்ல சங்கீதம் இசையை தேர்ந்தெடுத்து ரசிப்பது அவசியம். வயர்லெஸ் ஹெட் போன், இணையத்தில் மிக எளிதாக கிடைக்கும் இசைத் தொகுப்புகள், பாடல்கள் நல்ல புதிய உருவாக்கத்தோடு கிடைக்கிற சூழலில் நல்ல இசையை நாம் எளிதாக பெற முடியும். அன்றாட வாழ்வின் நெருக்கடி வேலையினால் ஏற்படும் மன அழுத்தத்தில் இருந்து விடுபட இசை சிறந்த தீர்வாக இருக்கலாம் என்று நினைக்கிறேன். இசை, சங்கீதம் மனித வாழ்வை எப்படி நெறிபடுத்தி ஒழுங்கை ஏற்படுத்துகிறது என்பதற்கு தி. ஜானகி ராமன் எழுதிய மோகமுள் நாவல் சிறந்த உதாரணம். நாவல் எடுத்துரைக்கும் முக்கியமான விஷயங்கள் ஆண் - பெண் உறவு, பாலியல் உணர்ச்சிகள், சங்கீதம் இசையின் மேன்மை போன்ற வாழ்வின் ஆதரமான விஷயங்களை பற்றி பேச முயற்சி செய்துள்ளது . அதே சமயத்தில் நல்ல மொழி நடையில் வாசிக்க இனிமையான பொழுது போக்கு நாவலாகவும் இருக்கிறது. அழகான சுகமான வாசிப்பனுபவத்தை தந்த எழுத்தாளர் தி. ஜாவிற்கு அன்பும் நன்றியும் என்றென்றும்.
9:44,: 27-7-23
Comments
Post a Comment