ஜே. கேயின் சிங்க பெண்...!

சில நேரங்களில் சில மனிதர்கள் நாவல் பெண்ணின் குரலை பேசுகிறது . ஆனால் அந்த பெண்ணின் குரல் வழியாக ஜெய காந்தன் பேசுகிறார். நாவலை காலேஜ் படிக்கும் போது முதன் முறையாக வாசித்தேன். அதன் பின்னர் 9 வருடங்களுக்கு பிறகு மறுபடியும் வாசிக்கிறேன். ஆச்சர்யம் என்ன வேனில் அதன் மாறாத மொழியும் சிந்தனையும். ஒரு முழு நாவலையும் தனி மனித சிந்தனையோடு இயல்பாக யதார்த்தப் பார்வையோடு சொன்னது சிறப்பம்சம். ஜெ.கே இந்த நாவலை எழுதிய கால கட்டத்தையும் இன்றைய கால கட்டத்தையும் என்னால் ஒப்பிட்டு பார்க்க முடிகிறது. குறிப்பாக அன்றைய பெண்களின் சிந்தனை, வாழ்வியல் மற்றும் சமூக நிலை. இன்றைய பெண்களின் சமூக நிலை என்று வேறுபடுத்தி பார்த்து சிந்திக்க முடிகிறது. இன்றைக்கு அரசியலில் இட ஒதுக்கீடு, சொத்துரிமை, பெண் சுதந்திரம், பெண்களின் பாதுகாப்பு என்று நிறைய பேசுகிறோம். ஆனால் அந்த சிந்தனையின் விளைவாக பெண்கள் வாழ்வில் எதாவது முன்னேற்றம் நடந்துள்ளதா? பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப் பட்டுள்ளதா? ஆண் - பெண் சமத்துவம் நடைமுறைப் படுத்தபட்டுள்ளதா? என்றும் நாம் பல வகையில் சிந்திக்க வேண்டியுள்ளது. இந்த நாவல் நாம் தெரிந்து கொள்ளாத பெண்ணின் கதையைத்தான் சொல்கிறது.


படித்து வேலைக்குப் போய், திருமணம் செய்து கொண்டு குழந்தைகள் பெற்று மறுபடியும் அந்த குழந்தைகளை படிக்க வைத்து என்று பெறுவாரியாக மனிதர்கள் வாழும் வாழ்க்கையை கங்கா என்ற பெண் வாழவில்லை. எல்லோருக்கும் பொதுவான வாழ்வியலை மட்டுமே எழுத்தாளர்கள் எழுத வேண்டுமா என்றால் ஜே. கே அதை மறுத்து ஒரு நாவலை எழுத முயற்சி செய்துள்ளார். அது பெண்கள் மீது அவருக்குள்ள சமூக அக்கறையை காட்டுகிறது. 

அன்றாடம் நாம் கடந்து போகும் பெண்களுக்கு எதிரான வன்முறை செய்திகளில் ஒரு பெண்ணின் கதையைதான் ஜே. கே எழுதியுள்ளார். இதுவரை நமக்கு தெரிந்த அம்மா, அக்கா, தங்கை, தோழி, காதலி ஆகியோர்களின் கதை அல்லாமல் அதற்கு மாறான முற்றிலும் இது வரை நாம் அறியாத பெண்ணின் வாழ்வு தான் சில நேரங்களில் சில மனிதர்கள் நாவல் . அந்த வகையில் இந்த நாவல் ஒரு புதிய முயற்சி. அதே சமயம் சமூக அக்கறையுள்ள எழுத்தாளனின் பொறுப்பான செயல். எப்படி லியோ டால்ஸ்டோய் அன்னா கரீனினா நாவலை எழுதினரோ அதே போன்ற முக்கியத்துவம் வாய்ந்த செயல்தான் இதுவும்.

" unnecessary a risk எடுக்குற " என்று நிறைய பேர் சொல்லி கேள்வி பட்டிருக்கிறோம்.

வாழறதுக்காக சாகுற வரை risk எடுக்க தயார் என்றும் சிட்டிசன் திரைப்படத்தில் வரும் ஹீரோயின் கதாபாத்திரம் வசனம் பேசுவதை கேள்வி பட்டிருப்போம்.  ரிஸ்க் எடுக்கிறதலாம் எனக்கு ரஸ்க் சாப்பிடற மாதிரி என்றும் பல வசனங்கள். ஜே. கே நாவலில் வரும் கதாபாத்திரங்கள் ரிஸ்க் எடுப்பவர்கள். இந்த சமூகம் அவர்களது உணர்வுகளை புரிந்து கொள்ள மறுக்கும் போது இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும் என்றும் அதிகார போக்கொடு நடத்தும் போது அந்த சமூகத்தோடு முரண்பட்டு போராடி தனியே வாழ்கிறவர்கள். அதன் உதாரணம் தான் கங்கா.


குடும்பமோ உறவினர்களோ பல நேரங்களில் நாம் மீது குற்றம் சாட்டி ஓரங்கட்டும் போது அந்த மனிதர்கள் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளகிறார்கள். நியாயத்திற்காக அனைத்து உறவுகளையும் துறந்து தனியே வாழ வேண்டிய சூழல்தான். ஆண் - பெண் திருமண முறிவு சம்பவத்தின் ஏற்படுகிற மூலகாரணம் ஒரு பெண்ணோ அல்லது ஆணோ தனக்கு அநீதி இழைக்கப்பட்டதாக உருவாக்கிக் கொள்ளும் கருத்தாக்கம் பற்றி இதோடு தொடர்பு படுத்தி பார்க்க வேண்டி உள்ளது. இதில் ஜெய காந்தன் பேசியிருப்பது சுய சிந்தனை உள்ள சுதந்திரமான மனிதர்களின் உணர்ச்சிகளை.

வாழ்வின் மிக நெருக்கடியான காலகட்டாத்தின் போது நாமும் இது போன்ற சுதந்திர சுய சிந்தனை கொண்ட மனிதர்களாக நடந்து கொள்ள வேண்டியதின் அவசியத்தை பற்றி உணர்த்துகிறார். ஆனால் அதே சமயம் எதோ ஒரு காரணத்திற்காக அப்படி பண்பாட்டு நம்பிக்கைகளை, மரபார்ந்த வாழ்வை முற்றிலும் மறுத்து நவீன சிந்தனை கொண்ட மனிதர்கள் எடுக்கும் முடிவுகளும் அதனால் ஏற்படும் விளைவுகள் என்னென்ன? என்றும் ஜே. கே விளக்குகிறார். அந்த வகையில் இந்த நாவல் அனைவரும் வாசிக்க வேண்டியதின் அவசியத்தை உணர்த்துகிறது.
இரண்டு முறை மறுவாசிப்பு செய்தும் நாவல் வாசிக்க எளிமையாக இயல்பாக இருப்பதுதான் முக்கியமான ஒன்று.

ஆண் பெண் சமத்துவம் பற்றியும் பெண்கள் ஆண்களோடும் ஆண்கள் பெண்களோடும் சரிசமமாக சகஜமாக பழகுவது என்பது தேவையான ஒன்றுதான். பள்ளி கல்லூரியில் இருந்தே அது அனுமதிக்கப் பட்டால் பின்னர் வாழ்வில் அவர்களுக்கு இன்னும் கூடுதல் புரிதல் கிடைக்கும் என்பது மஞ்சு கதாபாத்திரம் வழியாக சொல்லப் படுகிறது. குறிப்பாக பொது இடங்களில் ஒரு ஆணோ அல்லது பெண்ணோ இன்னொரு பெண் அல்லது ஆணோடு பழக வேண்டிய நிர்பந்தம் ஏற்படலாம். அப்போது உடல் சார்ந்த பால் உணர்ச்சிகள், உளவியல், கருத்து வேறுபாடு போன்ற புரிதல் கற்றுக்கொள்ளப் பட்டால் இன்னும் அந்த உறவு ஆரோக்கியமாக இருக்க உதவும் .

நாவலில் அறிவார்ந்த மாற்றும் நவீன சிந்தனை கொண்ட பெண்ணாக வரும் மஞ்சு. மஞ்சுவிற்கும் கங்காவிற்கும் நடக்கும் உரையாடல்கள் மற்றும் பிரபு மற்றும் கங்கா இடையே ஆன உரையாடல்கள். புதிய மாறுபட்ட அதே சமயம் நவீன முரண்பாடு கொண்ட அதாவது மரபை விதிமுறைகளை கட்டுப்பாடுகளை மறுத்து தர்க்கம் பேசும் பெண்கள் என்று வாழ்க்கையின் மற்றும் சமூகத்தின் போக்கை பற்றி தீர்க்கமாக உரையாடுகிறார்கள். ஆனால் வெறும் உறவுகள் எதிர்கால வாழ்வு, ஆண் - பெண் உறவு பற்றி நாவல் முழுவதும் பேச படுகிறது.


முன்னர் சொன்னது போலவே ஜே. கே போலவே அவரது கதாபாத்திரங்களும்
நவீன சிந்தனை கொண்ட தர்க்காவாதிகள். மேலும் கட்டுப்பாடுகளை தைரியமாக உடைத்து வாழும் மனிதர்கள்.

பெண்கள் மீது ஏற்படுத்துகிற பாலியல் கொடுமைகள் போது பெண்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? அப்படி பாதிக்கப்பட்ட பெண்ணின் வாழ்வு எப்படியான ஊசாலட்டத்திற்கு உள்ளாகிறது? இந்தக் குற்றம் நடக்கும் போது பெண்கள் மீது உள்ள தவறு என்ன? அந்த குற்றம் செய்த ஆணை ஏன் இன்னும் இந்த சமூகம் தண்டிப்பதில்லை? ஏன் எல்லா இடரின் போது பெண்கள் வாழ்வே அதிகம் பாதிப்புக்குள்ளாகிறது? என்று சிந்திக்கிறோம். இன்னொரு விஷயம் வெளிப்படையாக காமத்தை அனுமதிக்கும் ஆண்களை விட கங்காவின் மாமாவைப் போல கட்டுப்பாடுகளை திணிக்கும் ஆண்களால் பெண்கள் அடையும் வேதனைகள் தான் ஏராளம். எந்த சமூகப் பிரச்சனையின் போது பெண்கள் தான் பாதிக்கவும் படுகிறார்கள்? தண்டிக்கவும் படுகிறார்கள்? தவறு செய்த ஆண்கள் ஆண் என்ற காரணத்தினாலேயே தப்பித்துக் கொள்கிறார்கள்.
நாவலை விடவும் வாழ்க்கை விசித்திரமானது. தன்னை இந்த சமூகம் புரிந்து கொள்ள ஏற்றுக் கொள்ள தயாராக இல்லாத போது தான் மட்டும் ஏன் இந்த சமூகத்தோடு ஒத்து வாழ வேண்டும். ஒரு பெண்ணையோ ஆணையோ அடிமையாக சமத்துவமாக நடத்தாத சமூகத்தை துறந்து தனது சுய வழியில் வாழ உரிமை உண்டுதான். ஆனால் பெண் என்ற காரணத்தினாலயே அவளை அடிமைப் படுத்துவதும் ஆணாதிக்க சூழலோடு இன்றும் தொடர்வதும் இந்த நாவல் நவீன பிரச்சனைகளைப் பற்றி பேசிய நாவல் என்பதை மீண்டும் நிரூபிக்கிறது.  

Comments

Popular posts from this blog

செகண்ட் ஷோ நினைவுகள்

சுருளி நினைவுகள் பகுதி -1

சுருளி நினைவுகள் பகுதி -2 : ( கடவுள் எனும் நண்பன் )