நட்சத்திரவாசிகளின் உலகம்....!

நட்சத்திரவாசிகள்

நகரத்தில் தொழில்நுட்ப பெருநிறுவனங்களில் இரவு வேலை பார்க்கும் ஐ டி ஊழியர்கள் கதையை கார்த்திக் பாலசுப்பிரமணியன் திறம்பட எழுதியுள்ளார். இந்த நாவலை இரவு வேலை முடித்து விட்டு வார யிறுதியில் இரவில் உறக்கம் வராத நடு இரவில் வாசிக்க ஆரம்பித்தேன். இரவு வேலை பார்த்ததால் வாரஇறுதி நாட்களில் கூட உறக்கம் வராத நிலைதான் பலருக்கும்.

Y2k பிரச்சனையால் ஐ டி நிறுவனங்கள் சந்தித்த பெரும் பொருளாதார வீழ்ச்சியால் நிறைய ஊழியர்கள் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் சார்ந்து இயங்கும் மனிதர்களின் வாழ்வாதாரங்கள் எப்படியான இழிவை சந்தித்தன? அவற்றை எப்படி கையாண்டு மேலேழுந்து வந்தன என்ற தகவல் அதிர்ச்சி தரும் தகவல்.
கார்த்திக் சுப்ரமணியத்தின் நட்சத்திர வாசிகள் எனும் நாவல் இந்திய பொருளாதார மற்றும் வணிக பின்புல செயல்பாடுகளின் நேரடி சாட்சியம் போலவே எழுதப் பட்டிருக்கிறது. தமிழில் பின் நவீனத்துவ நாவல்கள் கலை மற்றும் பண்பாட்டு, செவ்வியல் மொழி நாவல்கள் நிறைய வாசித்திருந்தாலும் இந்த நாவல் நவீன இலக்கியத்தின் முற்றிலும் புதிய உலகத்தை அறிமுகம் செய்கிறது.
இந்த நாவலை வாசிக்கும் போது அசோகமித்திரன் எழுதிய இன்று நாவல் நினைவுக்கு வந்தது. ஒரு நாளில் நடக்கும் பல்வேறு நிகழ்வுகளின் தொகுப்பாக இருக்கும். நட்சத்திரவாசிகள் ஒரு நிறுவனத்தில் நடக்கும் பல்வேறு மனிதர்களையும் அவர்களது மனதையும் விவரிக்கிறது.

நாவலின் கதைக் களம் சென்னையும் அதன் பிரதான சாலைகளும். குறிப்பாக சோழிங்கநல்லூர் தரமணி சாலையில் உள்ள ஐ டிக் கம்பெனி ஒன்றின் கதைதான் இது. வெளிச்சம் இருள் எது என்பதை காட்டிவிடுவதைப் போல இந்த நாவல் ஐ டி ஊழியர்களின் இருண்ட பக்கத்தை சொல்லிச் செல்கிறது. பொறியியல் படித்துவிட்டு ஐ டி துறையில் வேலைக்கு சேரும் இளைஞர்கள் சந்திக்கும் பிரச்சனைகளும் நெருக்கடியும் வேலை வாய்ப்பை தக்க வைப்பதின் அழுத்தத்தை உணர்த்துகின்றன. 

வேலை பார்க்கும் நிறுவனத்தின் ஊழியர்கள் திறன் மேம்பாடு, அவர்களின் உழைப்பை சுரண்டுவது, வேலையை விட்டு நீக்குவது, போதிய சம்பளம் தராமல் ஏமாற்றுவது போன்ற பிரச்சனைகள் அவற்றால் பாதிக்கப்பட்டு வேலை இழக்கும் வேணு போன்ற மனிதர்கள் வணிக தந்திரங்களுக்களால் பாதிக்கப் பட்ட மனிதர்களின் குரலை ஒலிக்கிறார்கள். அலெக்சா எனும் கருவிக்கும் ஷாஜிக்கும் இடையே ஆன விவாதம் மிக முக்கியமானது. நவீன தொழில் நுட்பத்தின் சூழலில் மாட்டிக்கொண்டு மனிதர்கள் எப்படி அவதிப் படுகிறார்கள்? ஒரு இயந்திரத்தின் முன் மனிதன் எப்படி அறிவிலியாக இருக்கிறான் என்பது சிறந்த புனைவு.

புதுப் புது தொழில் நுட்பங்கள் எப்படி மனித உழைப்பை அதிகரித்து எந்நேரமும் அவர்களை பயத்தில் வைத்திக்கிறது? திறமைக்கும் மனித உழைப்பிற்கும் எந்த மதிப்பும் தரப்படாமல் தூக்கி எறியப் படும் மனிதர்கள், அதி நவீன தொழில் நுட்ப வளர்ச்சியால் திறனை வளர்த்துக் கொள்ள முடியாமல் எப்படி மனிதர்கள் திணறுகிறார்கள் என்பதை ஷாஜி எனும் ஊழியரின் மூலம் கார்த்திக் சொல்கிறார். மிக முக்கியமான யதார்த்த பதிவு. 

இன்னொரு புறம் நித்தில் - மீரா திருமண உறவின் கெடுபிடிகள், பணியால் ஏற்படும் அழுத்தம் பரஸ்பரம் ஒருவரை யொருவர் புரிந்து கொள்ளாமல் விலகி செல்லும் பொய்த்து போன மண வாழ்வின் அவலம் வெளிப்படுகிறது. மீரா நித்திலுக்கு எழுதும் மின்னஞ்சலில் ஒரு குறிப்பு வருகிறது. அதில் அவர் கல்லூரி முதல் திருமண வாழ்வு வரையிலான பத்து ஆண்டுகளில் செல்போன் பயன்படுத்துவதாகவும் தனது சொந்த வீட்டில் சுதந்திரமாக இருந்ததாகவும், திருமணமாகி வந்த வீட்டில் தான் தனது செல்போனுக்கு பாஸ்வேர்ட் வைத்துக் கொண்டுள்ளதாகவும் புலம்பும் ஒரு வரியில் ஒட்டுமொத்த பெண்ணின் பாதுகாப்பின்மையை உணர முடிகிறது.

துப்புரவு பணி செய்யும் ஐ டி கம்பெனி ஊழியர்கள் அங்கு பணி செய்யும் எம்பிளாய்ஸ் பயன் படுத்தும் கழிவறையை பயன்படுத்த தடை என்பதும் அவர்கள் மரியாதைக் குறைவாக நடத்தப்படுவதும் ஒரு வகையில் எதேச்ச அதிகாரத்தின் மனப் போக்கும்தான் காரணம். எழுத்தாளராக கார்த்திக் அவர்களின் இருண்ட பக்கத்தின் அவலத்தை பொறுப்பான முறையில் பதிவு செய்துள்ளார்.

இரவு நேரப் பணி, கண்ணாடியால் சூழப்பட்ட தளம், வேறு கணிப் பொறி மற்றும் லேப்டாப் கருவிகளின் ஆதிக்கம். பணி குறித்த எதிர்காலம் குழப்பங்கள், திறன் மேம்பாடு, பணி அழுத்ததால் குடும்ப உறவுகளின் சிதைவு என்று நாவல் மிக முக்கியமான சமகால பிரச்னை பற்றி பேசியிருப்பது பொறுப்பான பணி. வேலை வாய்ப்பு தேடி அலையும் புது மாணவர்கள் அலுவலகம் மற்றும் நிறுவனத்தின் தங்களை எப்படி நிர்வாகித்துக் கொள்ள வேண்டும் எப்படி திறனை மேம்படுத்த வேண்டும் என்று பல்வேறு காரணிகளை முதன்மை படுத்துகிறது புத்தகம்.

1. வேலை குறித்த நிச்சயமின்மை

2.திறன் மேம்பாடு

3.அதி நவீன தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் அதை கற்றுக்கொள்ளுதல்

4. வெளி நாட்டு நிறுவனங்கள் இந்திய இளைஞர்கள் மற்றும் ஊழியர்களின் திறமையை பயன்படுத்தும் போது சொந்த நாட்டின் வணிக வளர்ச்சிக்கு நமது திறமையை பயன் படுத்தி நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடுதல்.

5. இந்திய வணிக நிறுவங்கள் மூலம் ஊழியர்களின் உழைப்பு மற்றும் ஊதியம் சுரண்டப்படும் அவலம். திறமையாக உழைத்தும் அடிமைகளாக வாழும் நிலை.

6. நவீன கலாச்சார நுகர்வு மற்றும் பண்பாட்டு மாற்றம் காரணமாக குடும்பம் உறவுகளுக்குள் ஏற்படும் பிரச்சனை. குறிப்பாக ஆண் - பெண் உறவு குறித்த கருத்து வேறுபாடு சுதந்திர மனப் போக்கு.

மேற்கண்ட காரணிகள் குறித்து சிந்திக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது . வேலை அழுத்தம், நெருக்கடிகள் காரணமாக மன நிலை பாதிக்கப்பட்டு ஆபீஸ் விட்டு நீங்கிப் போகும் பார்கவி படித்த மாணவர்களின் குரலை பதிவு செய்கிறார். இந்த புத்தகம் மனித வாழ்வில் உழைப்பு எவ்வளவு முக்கியம் என்பதை பேசுவதோடு அதை தக்க வைத்துக்கொள்ள போராடும் மனிதர்களின் அவலத்தை பதிவு செய்துள்ளது. மேலும் உலக அளவில் இந்திய வணிக நிறுவனங்கள் ஊழியர்களை எவ்விதம் சுரண்டுகிறது அடிமைத்தனத்தில் வேலை வாங்குகிறது என்பதும் புலப்படும். நாவலில் ஐ டி கம்பெனியில் இருந்து விலகி டெலிவரி பாய் வேலை செய்யும் இளைஞனைப் பற்றி நித்தில் பெருமிதம் கொள்ளும் குறிப்பு வருகிறது. எந்த வேலை செய்தாலும் மன நிறைவும் அர்ப்பணிப்பும் அறமும் இருந்தால் போதும் என்ற சிந்தனைதான் அது. இந்த புத்தகம் சொல்ல வருவதும் அதுதான். உள் நாட்டு பொருளாதாரத்தை வளர்ச்சி அடைய நாம் பணி செய்து முன்னேற வேண்டும்.

எளிமையும் சரளமான மொழிநடை. இரண்டு நாட்களில் வாசித்து முடித்து விடும்படியான எழுத்து. புதிய வாழ்வியல் அனுபவங்கள் நிறைய கதாபாத்திரங்கள், என சிறந்த வாசிப்பனுபவத்தை தந்த எழுத்தாளர் கார்த்திக் பாலசுப்பிரமணியன் அவர்களுக்கு நன்றியையும் அன்பையும் தெரிவித்துக் கொள்கிறேன். யுவபுரஸ்கார் விருது கிடைத்தமைக்கு மனதார வாழ்த்துகிறேன்

புத்தகம் வாங்க :
நட்சத்திரவாசிகள்

Comments

Popular posts from this blog

செகண்ட் ஷோ நினைவுகள்

சுருளி நினைவுகள் பகுதி -1

சுருளி நினைவுகள் பகுதி -2 : ( கடவுள் எனும் நண்பன் )