மருதுவின் காதல்...!

மறுபடியும் சொல்கிறேன் இந்த வாழ்க்கையை சந்தோசமாக வாழ கொஞ்சம் முட்டாளாகவும் இருக்க வேண்டியிருக்கிறது. .அதிக அறிவு தேவையில்லை. பிரிய போகிறோம் என்று தெரிந்தும் சேர்ந்து வாழ முயற்சி செய்வது முட்டாள்தனம் இல்லை. அது ஆழமான அன்பு.மருதுவின் காதல் ஆழமானது. துளி கூட சுயநலமில்லாத யாரை விரும்புகிறானோ அவர்களின் விருப்பதையும் மனதையும் புரிந்துகொண்டவனாக இருக்கிறான். நான்சி கடவுள் எடுக்கிற முடிவை நம்புகிறாள். ஆனால் மருது நான்சிவின் முடிவுதான் தனக்கு முக்கியம் என்று சொல்கிறான் . அதே சமயம் என்றோ காதலித்து திரும்பி வருவதாக சொன்ன கேப்டன் அவளுக்காக திரும்ப வருகிறான். இத்தனை ஆண்டுகள் காத்திருந்தும் காதல் அவனை வரவைக்கிறது. கேப்டன் வர மாட்டான் என்று நம்பி மருதுவோடு வாழ விரும்பிய அடுத்த நிமிடம் நான்சி முன்பு கேப்டன் வந்து நிற்கிறான். இருவரும் மறுபடியும் ஒன்று சேர்ந்து கொள்கிறார்கள். ஆனால் மருது பிரிந்து போகிறான். நான்சியின் காதல் அவனுக்கு கிடைக்கவில்லை. பிரிவின் வலியோடு பழைய நினைவுளோடு கப்பலில் புறப்பட்டு போகிறான். கேப்டன் காதலும் உண்மையானது . நான்சியும் எந்த தவறும் செய்யவில்லை. நான்சியின் கதை தெரிந்தும் அவளை காதலித்து அவளோடு வாழ ஆசைபடும் மருதுவின் காதலும் உண்மையானது. ஆனால் மருது மட்டும் ஏன் சோகத்தோடு பிரிந்து செல்லவேண்டும். உண்மையில் இது யார் செய்த தவறு? கடவுளா? விதியா? யதார்த்தமாக நடந்த நிகழ்வா எதையும் புரிந்து கொள்ள முடியாது. ஆனால் யாரையும் எந்த தொந்தரவும் செய்யாமல் வலியோடு மனதில் நினைவுகளோடு பிரிந்து செல்லும் மருதுவை மறக்கவே முடியாது. காலம் யாரை யாரோடு இணைத்து வைக்கிறது யாரை பிரித்துவிடுகிறது என்று யாருக்கும் தெரியாது. ஆனால் அதே காலமும் வாழ்வும் ஒன்றை உணர்த்துகிறது. மனிதர்களின் அன்பும் காதலும் அழியாதது. கதை முடிந்தாலும் அன்பும் நினைவுகளும் என்றும் நிலைத்து நின்றுவிடுகிறது. 


ரஷ்ய எழுத்தாளர் பியோதர் தஸ்தாயேவ்ஸ்கி எழுதிய வெண்ணிற இரவுகள் புத்தகம் திரும்பி வராத கடந்த காலம் என்கிற பெயரிலும் வெளியிடப்பட்டிருக்கிறது. முதன்முறையாக இந்தப் புத்தகத்தை சென்னை கன்னிமாரா நு◌ாலகத்தில் வைத்து வாசித்தேன்.

ஒவ்வொரு பக்கமாக வாசிக்க வாசிக்க நாமும் ரஷ்யாவின் வெண்ணிற மேகங்களும் , பனியின் நிறத்தையும் பீட்டர்ஸ்பர்க் நகரத்தின் காட்சிகளால் வசீகரிக்கப்படுகிறோம். கனவுலகவாசியின் குறிப்புகளிலிருந்து அந்த நகரத்தின் அழகையும் அங்கு உள்ள மனிதர்களையும் நாமும் உணர முடிகிறது. தமிழில் எத்தனையோ காதல் கதைகளையும், திரைப்படங்களையும் பார்த்திருக்கிறேன். பொதுவாக காதலைச் சொல்லாமலேயே இறுதிவரை பிரிவைச் சந்திக்கும் நிலையைக் கூறுவதைப்போலியிருக்கும். அல்லது இரண்டு ஆண்கள் ஒரு பெண்ணையும் அல்லது இரண்டு பெண்கள் ஒரு ஆணையும் காதலிக்கும் தடுமாறும் சூழ்நிலைகளை கொண்ட முக்கோண காதல் கதையைக் கொண்டதாகயிருக்கும்.
 கல்லு◌ாரி படிக்கிற நாட்களில் நா. பார்த்தசாரதி எழுதிய குறிஞ்சிமலர் என்கிற நாவலை வாசித்திருக்கிறேன். சமூக சீர்திருத்த கருத்துக்களை கொண்ட முற்போக்கு சிந்தனைகள் கொண்ட கதாபாத்திரங்களால் கட்டமைக்கப்பட்ட உருவாக்கம் அது. அதிலும் அரவிந்தன் சமூக சேவையின் பொருட்டு ஊர் ஊராகச் சென்று விடுகிறான். தமிழ் பேராசிரியரின் மகளாக இருக்கும் பூரணி அவளது அப்பாவின் மரணத்திற்குப் பிறகு வறுமை நிலைக்கு தள்ளப்படுகிறாள். அவளுக்கும் அரவிந்தனக்கும் இடையேயிருக்கும் காதல் லட்சியப் போக்கு கொண்டதாக சித்தரிக்கப்பட்டிருக்கும். காலாரா நோய்த் தொற்று ஏற்பட்டு பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சேவை செய்ய போகும் அரவிந்தனுக்கு நோய் ஏற்பட்டு உயிரிழக்கிறான். பூரணி அரவிந்தன் மீது கொண்ட காதல் காரணமாக வாழ்நாள் முழுவதும் திருமணம் செய்து கொள்ளாமல் குடும்பத்திற்க்காகவும் தமிழ் தொண்டாற்றியும் சமூகத்திற்க்காகவும் வாழ்கையை அர்பணிக்கிறாள். நற்றினை , புறநானு◌ாறு போன்ற சங்க கால இலக்கியம் முதல் நவீன இலக்கியம் வரை பிரிவைத்தான் முக்கியமாக குறிப்பிடுகின்றன. பிரிவுதான் மனிதர்கள் அடைகிற துயரத்தில் சகித்துக் கொள்ள முடியாத பெருவலியாகயிருக்கிறது. கிராமங்களில் மகனோ, மகளோ வேலைக்காகவோ , இராணுவத்தில் சேரவோ நகரங்களை நோக்கியும் வெளிநாடுகளுக்கும் பயணிக்கும் போது கண்ணீரும் கவலையுமாகத்தான் வலியனுப்பி வைப்பார்கள். வேலைக்காகவும், குடும்ப பொருளாதாரத்தின் காரணமாகவும் குடும்பத்தை பிரிந்து வாழும் மனிதர்கள் நினைவுகளில்தான் சொந்த ஊரை நினைத்துப் பார்த்து ஆறுதல் கொள்கின்றனர். நோயின் வலியோ, கடன் பிரச்சனையோ, வேலையில்லாத் திண்டாட்டமோ அனைத்தையும் விட சொந்த ஊரை, குடும்பத்தை, நாட்டை பிரிந்து வாழும் பிரிவின் வலி ஆறாத வடுவாக மனிதர்களின் ஊறிப்போயிருக்கிறது. அதில் காதலின் பிரிவும் வலியும் வாழ்நாளின் இறுதி வரை மறக்கவே முடியாத துயரங்களில் ஒன்று.


வெண்ணிற இரவுகளில் வரும் கனவுலகவாசியும் தனிமையில் வாழும் மனிதனாகயிருக்கிறான். நண்பர்கள், உறவினர்கள் யாருமற்று வாழும் அவன் தான் வாழும் நகரத்தை ஆழமாக நேசிக்கிறான். அன்றாடம் வேலை முடிந்து திரும்பி வருகையில் மிகுந்த அன்போடு நகர வீதிகளிலும், தெருக்களிலும் சுற்றியலைகிறான். நகரத்தில் அனைத்து இடங்களிலும் தனது வெளிச்சத்தைத் தந்து உதிக்கும் சூரியன் புகாத இருண்ட வறுமையினால் தோய்ந்த வீடுகள் கொண்ட சுற்றுப் புறத்தில் வசிக்கிறான். ஏதோ காரணங்களுக்காக நகரத்தை விட்டு சொந்த கிராமங்களுக்குச் செல்லும் மனிதர்களை பார்த்து அவன் மனது துயரமடைகிறது. நகரத்திலிருந்து எவராவது ஒருவர் வெளியேறிச் செல்வது கூட அவனுக்கு ஆழமான வலியை உண்டாக்குகிறது. அடர்ந்த தனிமையும், பகலிலும் கூட சூரியன் உதிக்காமல் இரவைப்போலவே இருக்கும் அவனுடைய வெறுமையான பகல் பொழுதுகளின் நாட்களையும் அதில் கடந்து போகும் காததையும் குறிக்கிறது இந்த கதை. பெரும்பாலான காதல் கதைகளில் இரண்டு ஆண்களோடு நட்புறவோடு இருக்கும் பெண் முடிவில் யார் நல்லவனோ அவனையே ஏற்றுக் கொள்வாள். மற்றவன் கெட்டவனாக படைக்கப்பட்டிருப்பான். இந்த மூவருக்குள் நடக்கும் சந்தோஷங்களையும், பிரிவையும், உறவையும் விளக்கக்கூடியதாக கதை அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் வெண்ணிற இரவுகள் கதையில் அனைவரும் எந்த குற்றமும் இழைக்காதவர்கள். பொருளாதார சூழ்நிலையாலும், வறுமையினாலும் தான் நேசிப்பவர்களை பிரிந்து வாழ்கிறவர்கள். ஐந்து கதாபாத்திரங்கள் மட்டுமே இடம்பெற்றிருக்கும் இந்தக் கதையில் கனவுலகவாசி-நஸ்தென்கா-அவளுடைய காதலர் மூவருக்குள் நடக்கும் காதல். நஸ்தென்காவின் வீட்டில் குடியிருக்கும் ஒருவர் மீது அவள் காதல் வயப்படுகிறாள். பாட்டியின் பாரமரிப்பில் வாழும் அவள் கட்டுபாடுகளோடு வாழுகிறாள். பாட்யின் கெடுபிடிகள் நிறைந்த பிடியிலிருந்து அவளை சுதந்திரமாக இருக்கும் போருட்டு அந்த ஆள் உதவுகிறார். பாட்டியையும் அவளையும் அடிக்கடி வந்து பார்த்து அன்பாக பழகுகிறார். அவர்கள் மூவரும் சேர்ந்து நாடகங்கள் பார்க்க போகிறார்கள். அவர் படித்த புத்தகங்களை அவர்களுக்கு அனுப்பி வைக்கிறார். வேலையில்லாமல் அலையும் அவர் அந்த அப்பாவியான நஸ்தென்கா மீது அக்கறையோடு பழகுகிறார். ஒருநாள் வேலைக்காக வெளிநாட்டிற்கு புறப்படுவதாக அவர் தெரிவித்ததும் நஸ்தென்காவால் அந்தப் பிரிவைத் தாங்ககிகொள்ள முடியவில்லை. அவளும் அவரோடு வருவதாக கண்ணீருடன் கூறுகிறாள். ஆனால் அவள் மீது பாசத்தோடு அவர் அதை மறுத்து ஆறதல் கூறுகிறார். அவளுடைய துயரத்தை புரிந்து கொண்ட அவர் வேலை கிடைத்து தன்னுடைய நிலைமை மேம்பட்டதும் அவளை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்து பிரிந்து போய்விடுகிறார். அவருக்காக காத்திருக்கும் நஸ்தென்காவைத்தான் படகுத்துறையில் சந்திக்கும் கனவுலக வாசி அவளுக்காக துயரப்படுகிறான். இதுநாள் வரை பெண்களோடு பேசி பழகாத கனவுலக வாசி அவளைப்பார்த்தும் விரும்புகிறான். அவளோடு பேசவும் காதலிக்கவும் ஆசைப்படுகிறான். ஆனால் நஸ்தென்காவின் துயரமான கதையைக் கேட்டு அவளோடு நட்பாக உதவ விரும்புகிறான். ஆனாலும்அவன் மனதில் அவள் மீதான காதல் வலியைத் தருகிறது. நஸ்தென்காவும் யாருமற்று தனிமையில் வாழும் கனவுலக வாசியின் உண்மையான மனதை புரிந்து கொள்கிறாள். அவருக்காக வருந்துகிறாள். நல்ல தோழியாக இருப்பதாக கூறிகிறாள். கனவுலக வாசியும் நஸ்தென்காவும் அன்றாடம் படகுத்துறையின் பாலத்தில் சந்தித்து நட்புறவோடு பழகுகிறார்கள். ஒருவரோடு மனம் விட்டு பேசுகிறார்கள். ஒருவர் துயரத்தை மற்றவர் புரிந்து கொள்கிறார்கள். இருவருக்குள்ளும் உண்மையான அன்பு உறவாகயிருக்கிறது. கனவுலகவாசிக்கு தான் காதலிக்கும் நஸ்தென்கா இன்னொருவரை காதலிக்கிறாள் என்று தெரிந்தும் அவளோடு நட்பாகயிருப்பதே போதும் என்று ஆறுதல் அடைகிறான். அவளுடைய காதலுக்க உதவி செய்கிறான். தன்னடைய காதலனுக்கு கடிதம் எழுதி நஸ்தென்கா கனவுலகவாசியிடம் கொடுத்தனுப்புகிறாள். மழை காரணமாக அவளுக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை. தன்னுடைய காதலை அவர் நிராகரித்துவிட்டதாக அன்றாடம் கனவுலகவாசியிடம் வேதனைப்படுகிறாள். நாளடைவில் அது வெறுப்பாக மாறி கனவுலகவாசியின் மீதான காதலாக மாறுகிறது. நாம் நேசிக்கும் ஒருவர் தன் அன்பை புரிந்து கொள்ளாத போது ஏமாற்றும் போது வருகிற வெறுப்பு வார்த்தையால் சொல்லமுடியாத துயரம். காத்திருந்து ஏமாற்றப்படுதலும் வஞ்சிக்கப்படுதலும் மனதில் ஆறாத ரணத்தை உண்டுபண்ணிவிடுகிறது. ஆனால் இந்த துயரத்தின்போதும் கனவுலகவாசி தன்னுடன் ஆறுதலாக உண்மையான அன்பை வெளிப்படுத்தும் நண்பராக இருப்பது அவளக்கு பற்று ஏற்பட காரணமாகிறது. தான் காதல் ஏமாற்றப்பட்டதை நினைத்து வருந்தும் நஸ்தென்காவிடம் கனவுலகவாசி தன்னுடைய காதலைச் சொல்கிறான். அதோடு அவர்கள் பழகுவது நியாயமல்ல என்று பிரிந்து போவதாக சொல்கிறான். அவனுடைய உண்மையான அன்பையும் யாருமற்ற தனிமையையும் புரிந்து கொண்ட நஸ்தென்கா அவனைக் காதலிப்பதாகவும் அவளுடைய வீட்டிற்கு குடிவந்து அனைவரும் ஒற்றுமையோடு வாழலாம் என்று சொல்கிறாள். இருவரும் காதலிக்க முடிவெடுக்கிறார்கள். குழந்தையைப்போல அலைந்து திரிந்து சந்தோஷமாகயிருக்கிறார்கள். இருவரும் இணைந்த புதிய தருணத்தில் நஸ்தென்கா தன்னுடைய பழைய காதலனை சாலையில் சந்தித்துவிடுகிறாள். கனவுலகவாசியோடு கைகோர்த்து சென்றபடி அவரைப்போர்த்து பதட்டப்படுகிறாள். தன்னை மறைத்துக் கொள்ள விரும்புகிறாள். இரண்டு பேரையும்விட்டுக் கொடுக்கமுடியாமல் ஒரு பெண் அடைகிற அவஸ்தையை தஸ்தாயேவ்கி நுட்பமாக எழுதுயிருக்கிறார். இறுதியில் தன்னடைய பழைய காதலனோடு சென்று விடுகிறாள். பட்டாம்பூச்சி ஒரு கைதியின் அறைக்குள் வந்து நிமிடத்தில் பறந்து போவதைப்போல கனவுலகவாசி தன்னைப் பிரிந்து செல்லும் நஸ்தென்காவையே பார்த்துக் கொண்டிருக்கிறான். அவளுடைய பிரிவின் வேதனையோடு பீட்டர்ஸ்பெர்க் தெருக்களிலும் சந்துகளிலும் சுற்றித்திரிகிறான். பலநாட்கள் கழித்து கனவுலகவாசிக்கு கடிதம் எழுதும் நஸ்தென்கா மன்னிப்பு கோருகிறாள். துயரமான நாட்களில் ஆறதலாகவும் உண்மையான அன்போடு பழகிய கனவுலகவாசியை காதலிப்பதாக சொல்லி ஏமாற்றியதாக வேதனைப்படுகிறாள். அவள் காதலிக்க மனிதரும் கனவுலகவாசியும் ஒன்றாகயிருக்க கூடாதா என்று ஏங்குகிறாள். அவளால் இருவரையும் விட்டுக் கொடுக்க முடியவில்லை. உண்மையான அன்பு யாரையும் ஒருபோதும் பிரிந்து செல்வதில்லை. நாம் விரும்பியபடி அமையாவிட்டாலும் எதாவது உறவின் மூலம் இறுதிவரை நம்முடன் தொடர்ந்து வந்து கொண்டுதானிருக்கும். நஸ்தென்காவின் மீதான உண்மையான காதலும் அன்பும் கனவுலகவாசிக்கு நினைவுகளாக இருப்பதாகவும் அவள் சந்தோஷமாக வாழ்வதே போதும் என்று ஆறுதல் கொள்கிறான். நிஜத்தில் நாம் யாரை ஆழமாக நேசிக்கிறோமோ அவர் பிரிந்து செல்கையில் அவர்களுடைய நலனுக்காக பிரார்த்திப்பவராகவும், அவர்களை நினைத்துக் கொண்டு வாழவே விருப்பமுடையவர்களாக மாறிவிடுகிறோம். உண்மையான காதல் அன்பைத்தான் வெளிப்படுத்துமே தவிர வெறுப்பை தராது. நஸ்தென்காவின் மீதான அன்பால் அவள் கனவுலகவாசியை நிராகரித்துவிட்டு போனாலும் அவளை வெறுக்க முடியவில்லை. அவளோடு பழகிற நாட்களின் நினைவுகள் போதுமானது என்று ஆறுதல் கொள்கிறான் கனவுலகவாசி. காதல் கதையாக எழுதப்பட்டிருந்தாலும், வெண்ணிற இரவுகள் மனித மனங்களின் ஆழத்தை புரிந்துகொள்ள உதவுகின்றன. ஆண்-பெண் உறவுகளுக்கு இடையேயான நெருக்கத்தை உணர்ச்சிகளின் கொந்தளிப்பை உளவியல் ஆராய்ச்சி செய்கின்றன. ஒருவகையில் யோசித்துப் பார்த்தால் காதல், நட்பு, பாசம், அனைத்திற்கக்குள்ளமும் நேர்மையான அன்பு குடிகொண்டிருக்கிறது. மனிதர்கள் ஒருவரின் துயரத்தை மற்றவர்கள் புரிந்து கொள்கையில் அவர்களும் அறிவு கூர்மையடைவதாக தஸ்தாயேவ்ஸிகி சொல்கிறார். இன்றைய காலகட்டத்தில் காதலின் பெயரால் நடக்கும் மோசடிகளும், கேவலமான செயல்களும் நம்மை கோபமுறச்செய்கின்றன. உண்மையான அன்பை புரிந்து கொள்ளாமல் சினிமாக மோகத்தால் பல போலித்தனங்களும் அரங்கேறுகின்றன. எல்லாமே மொபைல் போன் என்று உலகமே சுருங்கிப் போய்விட்டது. இன்றைக்கு காதலிப்பவர்கள் ஒருவரையோருவர் சந்திப்பதும் பேசுவதும் வீடியோ கால் மூலமாக மாறிவிட்டது. எழுத்தாளர் வண்ணதாசனின் பெய்தலும் ஓய்தலும் என்கிற புத்தகத்தில் ஒரு வரி இடம் பெற்றிருக்கும் . எந்த மனிதனும் இன்னொரு மனிதனை கண்கொண்டு பார்க்கவோ பழகவோ விரும்புவதில்லை. எதோ ஒரு வகையில் தனிமையிலும் சுயநலமாகவே வாழ விரும்புகிறோம். காதலினால் பாதிக்கப்ப்டட ஆணோ-பெண்ணோ அதன் வலியை பொருட்படுத்த முடியாமல் குற்றச்செயல்களில் ஈடுபடுகிறவர்களாகிவிடுகின்றனர். புரிதலும் உண்மையான அன்பினை உணராமல் இருப்பதின் அவலமும் அனைத்து உறவுகளும் முறிந்து போவதற்குமான அடிப்படை காரணமாகவும் இருக்கிறது. காதல் விருப்பங்களும், ஆசைகளும், கனவுகளும் உள்ளடக்கியது என்று தவறான கருதுகோல்கள் இருக்கும் வரையில் பிரிவின் போதும் ஒருவர் மீது வெறுப்பையும் கசப்பையும் உண்டுபண்ணத்தான் செய்யும். எந்த மனிதனும் சக மனிதனை, நண்பனை, குடும்ப உறுப்பினர்களை, காதலிக்கும் நபரை சந்தோஷப்படுத்தவும், அவர்களோடு நெருக்கமாக இருக்கவும் விரும்புகிறார்களே தவிர புரிந்து கொள்ள மறுக்கிறார்கள். புரிதல்தான் நல்ல உறவின் அடிப்படை. மனித மனதை புரிந்து கொள்ளமுடியாது விசித்திரமானது என்று சொல்கையில் எவ்வாறு புரிதல் சாத்தியம் என்று கேள்வி எழும். உண்மைதான் யாரையும் முழுமையாக புரிந்து கொள்ள முடியாதுதான் ஆனால் அதற்க்காக முயற்சியாவது செய்யலாம். மனிதனால் முயன்றால் சாதிக்க முடியாதது என்ன இருக்கிறது. மனிதாபிமானமும், அன்பும் காட்டப்படாதவரை இந்த உலகில் குற்றவாளிகள் பெருகியபடிதானிருப்பார்கள் என்று தஸ்தாயேவ்ஸ்கி சொல்கிறார். குற்றுச்செயல்கள் அதிகரிப்பதும் உலகத்தில் வன்முறையும் கலவரமும் பெருகுவதும் மனிதகுலம் அன்பையும், பரிவையும் ஆழமாக புரிந்து கொள்ளாததே என்று நிச்சயமாக நம்மால் புரிந்து கொள்ளமுடிகிறது. அந்த வகையில் தஸ்தாயேவ்ஸ்கியின் வெண்ணிற இரவுகள், காதலின் பிரிவை மட்டும் நமக்குச் சொல்லவில்லை. மாறாக மனித மனங்களின் உணர்ச்சிகளை, மனசாட்சியின் உண்மையான முகத்தை காட்டுவதாகும். மோசடிகளும், போலித்தனங்களும், சுயநலமும் பெருகிய இந்த வாழ்வில் கனவுலகவாசியைப் போல ஆழமான அன்பை வெளிப்படுத்தவும், புரிந்து கொள்ளவும் ஒரு மனிதன்தேவை. ஆழமான புரிதல் மனதின் எத்தகையை துயரத்தையும், கசப்பையும் நீக்கி நம்மை ஆறுதல் படுத்தும். தஸ்தாயேவ்ஸ்கி போன்ற எழுத்தாளர்கள் இந்த உலகிற்கு அளித்த நல்ல பரிசுகள், புத்தகங்களின் வழியே அன்பையும், ஒற்றுமையும் ஏற்படுத்தியதுதான்.


 எஸ் . பி. ஜனநாதன் இயக்கி 2007ஆம் ஆண்டு வெளியாகிய இயற்கை திரைப்படம் தஸ்தாயேவ்ஸ்கியின் வெண்ணிற இரவுகள் திரைப்படத்தின் பாதிப்பில் உருவானதுதான். திரைப்படத் தயாரிக்கும் கதை விவாதக்குழுவில் ரஷ்யாவில் எழுதப்பட்ட இந்தக் கதையும் குறித்து விவாதம் செய்துதான் திரைக்கதை உருவாக்கியிருக்கிறார்கள். யுடுயிப்பில் அவருடைய நேர்காணல்களில் குறிப்பிட்டிருக்கிறார். இந்தத் திரைப்படத்திற்கு தேசியவிருது காட்சியமைப்பிற்கு வழங்கப்பட்டது. உலகசினிமாவில் உருவாக்கப்படுகிற பல காதல் திரைப்படங்களிலும் தஸ்தாயேவ்ஸ்கியின் தாக்கம் இருப்பதை உணரலாம். நுற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னரே தஸ்தாயேவ்ஸ்கி இந்த கதை எழுதினாலும் இன்றும் அதன் வீரியம் இளைஞர்களுக்கு மத்தியில் குறையவேயில்லை. அவருடைய பிற புத்தகங்களான குற்றமே தண்டைனை, கரமாசவ் சகோதரர்கள் அனைத்தும் மிக முக்கயிமானவை. பகலிலும் பனி மூட்டமான இரவைப் போலவே தோற்றமளிக்கக்கூடிய நகரமென்பதால் அது வெண்ணிற இரவுகள் என்று ஒருமுறை எஸ்.ராமகிருஷ்ணன் தனது யுடுயுப் தளத்தில் ஆற்றிய உரையில் குறிப்பிட்டதை கேட்டிருக்கிறேன். அது மட்டுமில்லாமல் இணையத்தில் தஸ்தாயேவ்ஸ்கியின் வாழ்கை வரலாறு பற்றியும் புத்தகங்கள் குறித்து எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் தொடர்ந்து பேசியும் உரையாற்றியும் வருகிறார். பாலம் புத்தகக் கடை சார்பாக அவர் ஆற்றிய தஸ்தாயேவ்ஸ்கி குறித்த இரண்டரை மணிநேர பேருரை மிக குறிப்பிடத்தக்கது. வெண்ணிற இரவுகளின் கதையென்றாலும் அது தருகிற வெளிச்சம் அன்பின் நிறமாகும். தஸ்தாயேவ்ஸ்கியின் தீர்க்கமான இந்த உளவியல் சார்ந்த புத்தகம் காதலைப்பற்றிய புரிதலை மிகநுட்பமாக விவரிக்கிறது. காதலை எழுதிய இந்தப் புத்தகத்தை என்றென்றைக்கும் காதலித்துக் கொண்டிருப்பேன்.

Comments

Popular posts from this blog

செகண்ட் ஷோ நினைவுகள்

சுருளி நினைவுகள் பகுதி -1

சுருளி நினைவுகள் பகுதி -2 : ( கடவுள் எனும் நண்பன் )