வருண் - நித்யா நல்ல நண்பர்கள்!

வருண் - நித்யா ஸ்கூல் படிக்கும் போதிலிருந்தே நண்பர்கள். ஒரே காம்பவுண்ட். இருவரும் பார்க்கில் விளையாடுகின்றனர். அவளுக்கு பிடித்த கதை புக் வருணுக்கு தருகிறாள். சின்ன வயதில் விளையாட்டுத்தனமாக சண்டை போட்டு பிரிந்து விடுகின்றனர். அந்த வலியை படம் பார்க்கிற நம்மாலும் தாங்கிக் கொள்ளவே முடியாது. அடுத்து +2 படிக்கும் போது ஒரு டுயூசன்
செண்டரில் சந்தித்துக் கொள்கிறார்கள். மறுபடியும் நெருக்கமாக பழகுகிறார்கள் . பழைய நினைவுகள் மீண்டும் அவர்களை ஒன்று சேர்க்கிறது. தினமும் டுயுசன் சென்டரில் சந்திப்பது மாலையில் பேசிக் கொள்வது என்று நாட்கள் போகின்றது. நித்யா படித்த அதே பள்ளியில் போய் வருண் சேர்கிறான்.  அங்கு அவள் மற்ற வகுப்பு தோழனோடு நித்யா பழக வருண் உடன் நேரம் செலவிட முடியவில்லை. அதனால் வருண் அவள் மேல் கோபப்படுகிறான். அவன் தன்னை சந்தேகபடுவதாக நித்யா மனமுடைந்து போகிறாள். இருவரும் பிரிந்து சென்று விடுகின்றனர். இருவர் மனதில் காதல் மாறாமல் அப்படியே இருக்கிறது.
அடுத்து கல்லூரியில் மீண்டும் சந்திக்கின்றனர்.  ஒருவரையோருவர் காதலை பகிர்ந்து கொள்கிறார்கள். இருவரும் ஒரே காலேஜ். மறுபடியும் ஆழமான காதல் என்று நாட்கள் போகிறது. எதோ விடுமுறையில் ஆஸ்திரேலியா செல்லும் நித்யா வருணை பிரிய முடியாமல் தவிக்கிறாள். வருண் அப்பொழுதுதான் குடும்ப கஷ்டத்தை புரிந்து கொள்கிறான். இதுநாள் வரை குடும்பத்திற்கு எதையுமே செய்யாமல் இருப்பதாக குற்றஉணர்வு அவனை வருத்துகிறது.  IIT கல்லூரியில் நுழைவுத் தேர்வு எழுத கோச்சிங்கில் சேர்கிறான்.  இந்த நேரத்தில் ஊரில் இருந்து திரும்பும் நித்யா அவனை சந்திகிறாள். ஆனால் வருண் மாறிவிட்டிருந்தான். இப்போது அவனால் அவளோடு நெருக்கமாக இருக்க முடியவில்லை. அவள் அவனை மிகவும் மிஸ் செய்வதாக உணர்கிறாள். அந்த வலியை இளையராஜா முதன்முறை பார்த்த என்கிற பாடலில் அழகாக வெளிப்படுத்துகிறார்.  படம் பார்க்கிற நம்மால் நித்யா மனமுடைந்து போவதை பார்க்க முடியவில்லை.
பல ஆண்டுகள் கழித்து நித்யா நித்யா திருச்செந்தூர் அருகில் உள்ள கிராமத்தில் புயல் பாதிக்கப் பட்ட பகுதி மக்களுக்கு சேவை செய்து அங்குள்ள பள்ளி மாணவர்களுக்கு கல்வி பயிற்று விக்கிறாள்.  அவளை சந்தித்து மீண்டும் காதலைச் சொல்லி கல்யாணம் செய்து கொள்வதாக வருண் மன்னிப்பு கேட்கிறான். ஆனால் அவள் வாழ்க்கை மாறிவிட்டது. மறுபடியும் சண்டை பிரிவு என்று கதை முடிவை நோக்கி செல்கிறது. கேம்ப் முடிந்து திரும்ப வரும் நித்யா வருணுக்கு திருமணம் நிச்சயம் செய்வது பற்றி மனம் உடைந்து போகிறாள். அவளால் அதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. தவறு செய்துவிட்டதாக புலம்புகிறாள். கல்யாணம் நடக்கும் முதல் நாள் இரவு இருவரும் சந்தித்து அந்த பழைய இடங்களுக்கு போய் வருகின்றனர். அந்த காட்சி முழுவதும் நித்யாவின் வலியும் திரும்ப வராத அந்த நாட்களை நினைத்து வருணும் வருந்துவதை நம்மால் வலியோடுதான் பார்க்கமுடியும். கடைசியாக அவள் அந்த இரவில் விடுபட்டு போகும் போது வலி வலி வலி மட்டுமே. இறுதியாக வருண் நித்யாதான் முக்கியம் என்று அவளிடமே போகிறான். இருவரும் ஒன்று சேர்கிறார்கள். நமது மனமும் நிம்மதி அடைகிறது.


கதையில் கூட உண்மையான காதலும் அன்பும் பிரியவே கூடாது என்று நினைக்கிறோம். அப்படி பிரிந்து சென்று விட்டால் கண்ணீர் வடிக்கிறோம். அந்த பாதிப்பில் இருந்து மீண்டு வரவே பல நாட்கள் ஆகும். டால்ஸ்டோய் எழுதிய அன்னா கரீனா நாவல் வாசித்து விட்டு இயல்பு நிலைக்கு திரும்ப ஒரு மாதமானது. ஆனால் காதல் பாசம் அன்பு மீது ஆழமான நம்பிக்கையை ஏற்படுத்தியது .
கவுதம் மேனன் படம் முழுக்க காதல் பிரிவு சண்டை சோகம் மீண்டும் காதல் இது அத்தனையும் இளையராஜாவின் இசையில் நாம் மனதில் பல கொந்தளிப்புகளை ஏற்படுத்தும்.
ஆனால் இருவருக்குள் இருக்கும் அந்த பள்ளி வயது நட்பும் அதன் நினைவுமே மீண்டும் ஒன்று சேர்க்கிறது. ஒரு ஆழமான காதலுக்கு ஒரு உண்மையான நட்பு தேவைப்படுகிறது. இந்த படத்தின் முழுவதும் அந்த பால்ய வயது காதலின் நினைவுதான் அவர்களை ஒன்று சேர்த்துக் கொண்டேயிருக்கிறது.  இசை - காதல் - பிரிவு - சோகம் - வலி - பால்யவயது நட்பு என்று படம் முழுக்க நம்மால் ஒன்றி போகாமல் இருக்க முடியாது.
யாருடனோ அதிகம் பாசமாக இருக்கிறோம் ஒரு நாளில் நிமிடத்தில் பிரிந்து போய்விடுகிறோம். மறுபடியும் அவர்களை சந்திக்கும் போது அந்த பழைய நாட்களை நினைத்து மறுபடியும் மாற முடியாமல் தவிக்கிறோம்.


வாழ்க்கை அனைவரையும் ஒன்று சேர்ந்து வாழ அனுமதிப்பதில்லை. யாரை ஒன்று சேர்க்கிறது. யாரை பிரிக்கிறது என்று யாருக்கும் தெரியாது. ஆனால் பிரிந்து போனவர்களை மறந்து விட்டு நம்மால் இருக்க முடியாது.  சில பேருக்கு நினைவுகளே துணையாக இருக்கிறது. சில பேரால் மீண்டும் அந்த நினைவுகளுக்குள் போக முடிவதில்லை. உண்மையில் நாம் யாரையும் பிரிவதே யில்லை. பிரிந்து விட்டோம் என்ற நாமே உருவாக்கிக் கொண்ட கற்பனைதான் நம்மை வாட்டுகிறது. ஆனால் காலம் ஒரு கட்டத்தில் நினைவுகளை ரசிக்கும் பக்குவத்தை நமக்கு தந்து விடுகிறது. யாரை பிரிந்தோமோ அவர்கள் வானத்தில் தூரத்து நட்சத்திரத்தை போல மாறிவிடுகிறார்கள். நட்சத்திரம் நம்மை விட்டு தொலைவில் எங்கோ வானத்தில் இருக்கிறது. ஆனால் நம்மை பிரிவதில்லை. அது போல சிலரின் நினைவுகள் மனதில் எங்கோ கிடக்கிறது. முழுமையாக அழிவதில்லை .

இந்த படத்தில் வருண் நித்யா ஒன்று சேர்ந்துவிடுகிறார்கள். நிஜம் போல கதை இல்லை. வாழ்க்கைதான் உண்மையான காதலை பிரித்து விடுகிறது. ஆனால் கதையாவது காதலை ஒன்று சேர்க்கிறது என்று நாம் மனதை தேற்றிக் கொள்ளவேண்டிதான்.

Comments

Popular posts from this blog

செகண்ட் ஷோ நினைவுகள்

சுருளி நினைவுகள் பகுதி -1

சுருளி நினைவுகள் பகுதி -2 : ( கடவுள் எனும் நண்பன் )