சாதித்த கேப்டன் அவர்கள்...!

வைதேகி காத்திருந்தாள் வெள்ளச்சாமி கதாபாத்திரத்தை யாராலும் மறக்கவே முடியாது.
விஜயகாந்த் சார் நடித்த படங்களில் சின்ன கவுண்டர், ரமணா, வைதேகி காத்திருந்தாள், ஊமை விழிகள், புலன் விசாரணை, எங்கள் அண்ணா, பெரியண்ணா, அம்மன் கோவில் கிழக்காலே போன்ற திரைப்படங்கள் மிக சிறப்பானவை. ரமணா படம்தான் எனக்கு மிக பிடித்த படம். ரமணா படத்தின் இறுதி காட்சியில் கேப்டன் அவர்கள் பேசிய கிளைமேக்ஸ் வசனம். பல்லாயிரம் கணக்கான மக்கள் முன்னால் சமூகத்தை பற்றியும் எதிர்கால இந்தியாவைப் பற்றியும் அவர் ஆற்றிய உரை என்றைக்கும் மறக்க முடியாது. இந்த இடத்தில் இருந்துதான் கேப்டன் அவர்களின் அரசியலை நாம் புரிந்து கொள்ள முடியும். ஊமை விழிகள் தொடங்கி புலன் விசாரணை, நரசிம்மா போன்ற சமூக படங்களில் போலீஸ் வேடங்களில் அவர் நடித்த பங்களிப்பு அவர் உண்மையாகவே சமூக அக்கறைகொண்ட மனிதனாக மாற உதவியது.

கேப்டன் அவர்கள் அரசியல் கட்சி தொடங்கி என்ன சேவை செய்ய வேண்டும் என நினைத்தார்?
அவர் லட்சியம் என்ன? அவர் வாழ்க்கை மூலம் நாம் என்ன புரிந்து கொள்ள முடியும் என்று யோசிக்க வேண்டும். திரைப்படங்களில் எந்த காட்சியில் வசனம் பேசினாலும் மிக சரியாக புள்ளி விவரங்களோடு பேசும் விதம் படித்த மாணவர்களை சிந்திக்க வைத்தது.
மிக எளிமையாக யதார்த்தமாக திரைப்படங்களில் அவர் நடித்திருப்பார். காமெடியில் அவர் நடித்த விதம் இன்னும் ரசிக்கும் படி இருக்கும்.   இந்தியா பாகிஸ்தான் பிரச்சனை மத ஒற்றுமை, இந்திய இறையாண்மை, காஸ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அவர் அனைத்து இந்தியர்களும் சமம் என்ற சமத்துவத்தை தொடர்ந்து திரைப்படங்களில் வசனமாக பேசினார். தமிழ்நாட்டின் எதிர்கட்சியாக செயல்படும் அளவுக்கு தன்னை வளர்த்து மிகப் பெரும் ஆளுமையாக திகழ்ந்தார்.
தனிமனிதன் அரசியல் தெரிந்துகொள்ள வேண்டும்! சமூக அக்கறை கொண்ட சுயசிந்தனை கொண்டவர்களாக மாற வேண்டும் என்பதற்காகவே தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை ஆரம்பித்தார். சமூக ஊழலை பற்றி தொடர்ந்து தனது திரைப்படங்ககளில் எதிர்த்து வந்தார். தனி ஆளுமையாக அரசியலில் ஈடுபட்டார். ஊடகங்கள் அவரை கிண்டல் செய்து அவர் வளர்ச்சியை முடக்கி விட்டது. ஊடகங்கள் தீனிக்கு அவர் அரசியல் விமர்சிக்க பட்டது. மீடியாவும் சமூக ஊடகங்களில் அவரை கிண்டல் செய்து மீம்ஸ் போட்டவர்களும் அவரது வளர்ச்சியை தடுத்தாலும் கேப்டன் 71 வயது தொடர்ந்து போராடினார்.


இளைஞர்கள் அரசியல் கற்றுக் கொள்ள வேண்டும் சமூக சிந்தனையுள்ளவர்களாக மாற வேண்டும் என்பதே கேப்டன் அவர்களின் விருப்பம். அவருடைய அரசியல் எளிமையான கருத்தியலைக் கொண்டு மக்களை ஒன்று சேர்த்தது. கேப்டன் சிந்தனைகளை நாம் தொடர்ந்து செயல் படுத்த வேண்டும். அவர் நடித்த திரைப்படங்கள், அரசியல் செயல்பாடுகள், அவருடைய நல்ல சிந்தனைகளை தொடர்ந்து அனைவரும் பேசி விவாதிக்க வேண்டும். இயற்கைக்கு உடலைத்தான் அழிக்க முடியுமே தவிர கேப்டன் அவர்களின் சமூக அரசியல் சிந்தனையையும் மக்கள் மனதில் அவர் பிடித்த இடத்தையும் ஒரு போதும் அழிக்க முடியாது. தன்னால் முடிந்த வரை தமிழ் மக்களுக்கு நல்ல தலைவராக போராடினார். எனை பொறுத்தவரை அவர் வெற்றி பெற்று விட்டார். அவர் உண்மையிலேயே சிறந்த தலைவராக மனதில் இடம் பிடித்தவிட்டார். கேப்டன் திரு. விஜயகாந்த் அவர்களுக்கு நெஞ்சார்ந்த அஞ்சலிகள். நல்ல சிந்தனையை வழங்கிய கேப்டன் அவர்களுக்கு அன்பும் நன்றியும்!

Comments

Popular posts from this blog

செகண்ட் ஷோ நினைவுகள்

சுருளி நினைவுகள் பகுதி -1

சுருளி நினைவுகள் பகுதி -2 : ( கடவுள் எனும் நண்பன் )