நகரம் அல்லது நரகம்...!
1. நகரம் - சுஜாதா
எல்லா மனிதர்களும் எளிதாக மருத்துமனையில் சிகிச்சை எடுப்பது எளிதானதில்லை. அதுவும் பண வசதி இல்லாதவர்கள் மகளுக்கோ அம்மாவிற்கோ உடல் சரியில்லை என்றால் மருத்துவமனை சாதாரண மக்களுக்கு எந்த வகையில் செயல்படுகிறது என்பதை மிக யதார்த்தமாக சுஜாதா இந்த கதையில் எழுதியுள்ளார்.
நமது உறவினர்களுக்கோ அல்லது நமக்கோ கூட உடல்நிலை சரியில்லை என்றால் நாம் மருத்துவமனை செல்கிறோம். மருத்துவ பரிசோதனை முடிந்து அட்மிட் ஆவதே பெரிய மலைப்பாக இருக்கிறது . OP சீட், ஸ்கேன், அட்மிசன் note என்று ஒவ்வொரு பிரிவாக அலைய வேண்டும். அப்படி அலையும் போது கவனக் குறைவாக எதையாவது தொலைத்துவிட்டால் மறுபடியும் முதலில் இருந்து அலைய வேண்டும். இந்த கதையில் வரும் வள்ளியம்மாள் உலகம் தெரியாத பேதையாக இருக்கிறாள். மருத்துவமனையில் பயன்படுத்துகிற வார்த்தைகள் அவளுக்கு புரியவில்லை. மகளை எப்படியவது காப்பாற்றிவிட வேண்டும் என அவள் நினைக்கும் மனதையும் பாசத்தையும் சுஜாதா சொல்லாமலேயே புரியவைத்து விடுகிறார். மருத்துவமனை இடங்கள் அவளுக்கு புரியாமல் வழி தவறி பதறி அலைகிறாள். வழி தெரியாமல் நிற்கும் குழந்தையை போல அவள் உடைந்து அழும் பகுதியில் இந்த நகரம் படிப்பறிவு இல்லாத மனிதர்களுக்கு எத்தனை அச்சுறுத்தல் நிறைந்ததாக இருக்கிறது என்று விளக்குகிறார். அதுவும் குறிப்பாக மருத்துவமனையில் பொது மக்கள் அடையும் நெருக்கடிகள் என்னென்ன? என்று நாம் புரிந்து கொள்ள முடியும். மருத்துவமனை விசித்திரமான இடம். அச்சம் பயம் வெறுப்பில் ஆரம்பித்து டிஸ்சார்ஜ் செய்து வரும் பொது அங்குள்ளவர்களை பிரிய மனமில்லாமல் வரும் அன்பின் இடம். பழகிவிட்டால் போதும். ஆனால் இந்த கதையில் வள்ளியம்மாள் மகளை மருத்துவமனையில் சேர்க்காமலேயே மகளின் நோயை குறித்த தெளிவான அறிவு இல்லாததால் தான் சொந்த ஊருக்கே போய் கோவிலில் திருநீறு போட்டால் சரியாகிடும் என்ற நம்பிக்கையில் கிளம்பிவிடுகிறாள். திறமைஇல்லாமல் நகரத்தில் வாழும் மனிதர்களுக்கு நகரம் கருணையே காட்டுவதில்லை என்பது இந்த கதை சொல்லும் நிஜம். பெண்கள் எதுவும் தெரியாமல் சமூகத்தில் அவதி படும் படிப்பறிவின்மையை அழகாக கதை விவரிக்கிறது. அதே சமயம் மருத்துமனை போன்ற பொது இடங்கள் சாமானிய மனிதனுக்கு எப்படியெல்லாம் நெருக்கடி நிறைந்ததாக உள்ளது என்பதும் உணர வேண்டிய விஷயம் தான். அதி நவீன தொழில் நுட்ப மருத்துவ வசதிகள் வந்து விட்ட போதிலும் சாமானிய மனிதன் நெருக்கடியிலேயே வாழ்வது நாம் தீவிரமாக சிந்திக்க வேண்டிய விஷயம்.
கதை வாசிக்க :
https://www.sirukathaigal.com/%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/
Comments
Post a Comment