நகுலன் தந்த வாக்குமூலம்
வாழ்க்கை என்பது என்ன? என்ற கேள்வி அனைவருக்கும் இயல்பாக தோன்றக் கூடியதுதான். வாழ்வைப் பற்றி பல விவாதங்கள், கருத்துக்கள், சரி தவறுகள், நியாய அநியாயங்கள் என்று நாம் பேசாத நாளேயில்லை. ஆனால் நமக்கான வாழ்வில் நமக்கென்று ஒரு உலகம் இருக்கிறது என்று நாம் புரிந்து வைத்திருக்கிறோமோ என்று யோசிக்க வேண்டும்.
காலை எழுவது, சாப்பிடுவது, எதையாவது செய்து இரவு வரை வாழ்வது மீண்டும் நமது பழக்கப்பட்ட சொந்த வாழ்க்கைக்கு திரும்புவது உறங்குவது. உறக்கத்தில் நாம் மனதில் உள்ள ஆசைகள், நினைவுகள், ஏக்கங்கள், பயம் அனைத்து வெளிப்படுவது. இதுதான் மாறி மாறி நடக்கிறது. இதைத்தாண்டி உடல் மனம் அறிவு கடந்து நாம் சிந்தித்து இருக்கிறோமா என்றால் இல்லை என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. செல்போன், வாட்ஸாப்ப், இன்ஸ்டாகிராம், முக நூல், யூடுப்பில் வீடியோஸ் பார்ப்பது இன்னும் என்றாவது ஒரு நாள் சினிமா தியேட்டர் போய் பெரிய திரையில் நண்பர்களோடு திரைப்படம் பார்ப்பது இந்த கொண்டாட்டங்கள் தாண்டி வேறென்ன சந்தோசங்கள் வாழ்வில் இருக்கிறது? எதாவது ஒரு நாளில் நம்மைப் பற்றி சிந்திக்கும் போதோ அல்லது நினைத்துப் பார்க்கும் போதோ நாம் கடந்த கால நினைவுகள், வலி வேதனை, அவமானம், கசப்பு, ஏமாற்றம் அல்லது ஒன்றிரண்டான சந்தோசமான நினைவுகளைத் தவிர நாம் எதை ப் பற்றி சிந்திக்கிறோம் என்று நாம் நேர்மையாக ஒப்புக் கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது. நகுலன் எழுதிய வாக்குமூலம் நாவல் வாசிக்கும் போது நம்மைப் பற்றி நாம் தெரிந்து வைத்திருக்கும் போலி சித்திரம் அழிந்துவிடும். தெளிவாக சொல்லவேண்டுமென்றால் கண்ணாடி முன்பு நின்று நமது நிர்வாண உடலைப் பார்ப்பது போலத்தான். புத்தகம் வழியாக நகுலன் வாழ்வின் மர்மத்தையும் நிலையில்லா வாழ்வைப் பற்றி சொல்லுகிறார். அன்றாட வாழ்விற்குள்ளும் சுழன்று கொண்டிருக்கும் நமக்கு இன்னொரு கற்பனை இருப்பை, சிந்தனையை சொல்லுகிறார்.
பணம் பிரச்சனையால் எத்தனையோ பேர் பிடிக்காத வேலையை வாழ்க்கை முழுவதும் செய்கிற சூழல் ஏற்படுகிறது. ஓய்வு பெற்று பென்ஷன் வாங்குகிற வயதில் பெரும்பாலும் மனிதர்கள் பிடித்த வாழ்க்கையை வாழ ஆரம்பிகின்றனர். அதுவும் குடும்ப உறவுகள் இல்லாமல் தனியாக வாழும் மனிதனின் அகஉலகை அதுவும் பொதுவாக அனைவரும் வாழும் குடும்பம் கல்யாணம் குழந்தை பேறு இவற்றில் நம்பிக்கை இல்லாமல் தனிமையில் வாழும் ஒருவரின் கற்பனையான உலகம் தத்துவம் அனுபவங்கள் பற்றியது இந்த புத்தகம்.
இன்னோன்று நம்மை அதிகம் கஷ்டப் படுத்துவது பிரிவும் மரணமும் தான். அன்றாடம் மரணம் பற்றிய எதாவது ஒரு செய்தியை தகவலைக் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறோம்.
உறவினர்கள் நெருங்கிய நண்பர்கள் தெரிந்தவர்கள் என்று யாராவது இறந்து போய்விட்டால் பல நாட்கள் அதே தூக்கத்தில் இருக்கிறோம். ஜப்பானில் தற்கொலை செய்து கொண்டு இறந்து போவது சாதாரணமான செயல். ரஷ்யவில் கூட டூயல் என்றும் துப்பாக்கி சுடும் முறையில் காதலுக்காக கருத்து மோதல்களுக்காக ஒருவரையோருவர் சுட்டுக் கொண்டு செத்து போகும் வழக்கம் உள்ளது. மேலும் இது சட்டத்திற்கு புறம்பானது இல்லை. இந்த நாவலில் கூட 2086ஆம் ஆண்டு அதாவது நாம் வாழும் தற்கால ஆண்டில் இருந்து அறுபது வருடங்கள் கழித்து அரச முன்னேற்ற சட்டம் 286 என்ற ஒரு புனைவை உருவாக்குகிறார். இந்த சட்டத்தின் மூலம். விருப்பத்தின் படி ஒருவர் மரணிக்க சட்டத்தின் படி அரசாங்கத்திடம் மனு கொடுத்து விண்ணபித்து சட்டப்படி உயிரை துறக்கலாம். இன்றைக்கு நடைமுறையில் யோசித்துப் பார்த்தால் வேடிக்கையாக சிரிப்பாக வருகிறது. ஆனால் அப்படி ஒரு சட்டம் இருந்தால் என்னென்ன வழிமுறைகள் இருக்கும் அரசாங்கம் எப்படி செயல்பட்டு சாக விரும்புகிறவர்களின் விருப்பப்படி அவர்களை சாக அனுமதிக்கும் என்று மிக நுட்பமாக எழுத்தாளர் நகுலன் விளக்கியுள்ளார்.
இந்த கதை புனைவுதான். எதிர்காலத்தில் இப்படி ஒரு சட்டம் இருந்தால் அதாவது 65 வயதுக்கு மேற்பட்ட மனிதர்கள் அரசின் தேச முன்னேற்ற சட்டம் 286 ன் படி விருப்பப் படி இறந்து போக விண்ணபிக்கலாம்.
ஆனால் அவ்வளவு எளிதில் சாக முடிவதில்லை. எனெனில் விருப்பப்படி மரணிக்க விரும்பும் மனிதர்கள் கோரிய விண்ணப்பங்கள் நிராகரிக்கப் படுகிறது. குறிப்பாக விருப்ப மரணம் வேண்டி விண்ணபிக்கும் பலருக்கும் விதிமுறைகள் விதிக்கப் படுகிறது. அதில் நோயாளிகள், முதியவர்கள், ஆண்கள், மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் இதை விண்ணபிக்க முடியாது. மேலும் திறன் பரிசோதனை தேர்வுகளில் கேட்கப் படும் கேள்விகள் போல பல கேள்விகள் விண்ணப்பதில் இடம்பெற்றிருக்கும்.
அதாவது வாழ்வு குறித்தும் மனித மனதை ஆராயும் விதமாகவும் கேள்விகள் கேட்கப்படுகின்றன. அந்தக் கேள்விகள் வாழ்க்கையைப் பற்றிய நமது புரிதல்கள் என்ன? மனசாட்சிக்கும் நேர்மையாக நம்மைப் பற்றியே நாம் என்ன தெரிந்து வைத்திருக்கிறோம்? அன்றாட நெருக்கடிகளில் இருந்து விலகி நாம் தனிப்பட்ட வாழ்வின் அனுபவங்கள் பற்றி நம்மை சிந்திக்கத் தூண்டும் கேள்விகள். இவை வெறும் கதையில் விண்ணப்பத்தில் கேட்கப்படுபவை அல்ல நமது மனதிடம் நாமே விவாதித்து தெளிவு பெற கேட்கப்படும் கேள்விகள். பொதுவாக இந்த கதை மனிதனின் சுய புரிதல் பற்றிய உளவியல் வளர்ச்சிக்கும் தேவையான சிறந்த புத்தகம். நல்ல புத்தகத்தை எழுதி சிறந்த வாசிப்பு அனுபவத்தை தந்த எழுத்தாளர் நகுலன் அவர்களுக்கு அன்பும் நன்றியும்
Comments
Post a Comment