கடவுளின் பறவை

கடவுளின் பறவை
கடவுளின் பறவை என்கிற சிறுகதை படித்துவிட்டு வீட்டு முன்பாக அடு க்குமாடி குடியிருப்பிற்கு வந்து போகும் புறாக்களை தினமும் பார்க்கப் போய் நின்று விடுகிறேன். அன்றாடம் மதியம் சாப்பிட்டு முடித்ததும் போய் நிற்பேன். புறாக்கள் முனுங்குவதையும் சிறக்கடித்து பறந்து செல்கையில் கேட்கிற படபடக்கிற இசையும் மனதில் இலையைக் கொண்டு தடவி விடு வதையும் போல் உணர முடிந்தது.

பொது ஊரடங்கு நாட்களில் மனதின் கொந்தளிப்பும் வெறுப்பும் பெருகும் நேரங்களில் புறாக்களின் சிறக்கடிப்பு இனிய தப்ளா இசைக் கேட்பதை போலவே நிசப்தமாக இருக்கிறது. திரைப்படங்களிலும் கச்சேரியிலும் பக்கவாத்தியமாக இசைக்கப்படும் தப்ளா இசையை தனித்து கேட்பது அலாதியானது. கடவுளின் பறவை என்கிற புத்தகம் வாசிப்பதும் இதை போலத்தான். குறிப்பாக கடவுளின் பறவை சிறுகதை மிக சிறப்பாக எழுதப் பட்டிருக்கிறது.
மியா கொளட்டோ எழுதிய இந்தக் கதை பறவைகள் மீது நடத்தப்படும் வன்முறையைப் பற்றி பேசுகிறது. இயற்கை மற்றும் கால நிலை சூழ்நிலைகள் மற்றும் பறவையினங்கள் பற்றிய விழிப்புணர்வு கதைகளாக உள்ளன என்று சொல்லலாம். பஞ்சம் வறுமை இருக்கிற கிராமத்தில் மீன் பிடிக்கச் செல்லும் எர்னேஸ்டோ டிம்பா ஒரு பறவையை கொண்டு வந்து வளர்க்கிறான். வறுமையிலும் பசிகொடுமையிலும் தனது மனைவி குழந்தைகள் அதை சமைத்து சாப்பிட விரும்பி அவனுடன் சண்டையி டுகின்றனர். அவன் அதைக் கொல்ல மனதில்லாமல் அன்பு காட்டி வளர்த்து பராமரிக்கிறான். வறுமை பசி பட்டினி பஞ்சத்தின் போதும் உணவிற்காக கிடைத்த பறவையை அவன் கடவுளின் அதிர்ஷ்டத்தை போலவே கருதுகிறேன். எவரேனும் அதை கொன்றால் தண்டிப்பதாக சொல்கிறான். கடவுள் தனக்கு பரிசாக கொடுத்த பறவை என நினைக்கிறேன். மேலும் மனிதர்கள் கருணை நிறைந்தவர்கள் என்று கடவுளின் விருப்பத்தை தான் நிரூபிக்க முயல்வதாக சொல்கிறான்.
பிற உயிரினங்கள் மீது அன்பும் இரக்கமும் காட்டினால் மழை பொழியும் பஞ்சமும் பட்டினியும் விலகும் என அவன் நம்புவது முக்கியமானது.இதனால் ஊர் மக்கள் உட்பட அவனை பைத்தியம் என்று எண்ணி அவனை கேலி செய்கிறார்கள். அவன் மனைவி, குழந்தைகள் அவனை விட்டு பிரிகிறார்கள். இறுதியில் ஒருநாள் படகில் குடிலுக்கு வரும் எர்ணஸ்டோ தான் அன்பாக பாதுகாத்து வந்த பறவைகள் தீயிட்டு கொழுத்தப்பட்டு பொசுங்கிக் கிடப்பதை பார்க்கிறான். கடவுள் கொடுத்த பறவையை மனிதர்கள் கொன்று விட்டார்களே என்று எண்ணி அவனும் தற்கொலை செய்து கொண்டு இறந்து போகிறான்.

மேலும் பறவையை கொன்ற மனிதர்களுக்காக தான் மன்னிப்பு கேட்பதாகவும் தண்டனையாக உயிரை மாய்த்துக் கொள்ளவும் முடிவு செய்கிறான். கடைசியில் மழை பெய்கிறது. ஆனால் ஊர் மக்கள் அதை நம்பவில்லை என்று மியா கதைக்கு முடிவாக கொண்டு விடுகிறார்.
மீனவர்கள்களின் வாழ்க்கை கடலைப் போலவே கொந்தளிப்பும் தத்தளிப்பும் கொண்டது. அன்றாடம் மீன் பிடிக்க செல்லும் எர்ணாஸ்டோ எதுவும் கிடைக்காமல் வேதனையோடு திரும்புகையில் ஏமாற்றமடைகிறான். வாழ்வு மீதான வெறுப்பு வருகிறது.
“
அங்கே வேட்டைக் காரனைப் பார், அவன் என்ன செய்கிறான்? மானைப் பார்த்த நொடி, தனது வேல்கம்பில் குறிபார்க்கத் தயாராகிறான். ஆனால் மீனவனால் நதியினுள் இருக்கும் மீனை பார்க்க முடியாது.மீனவன் தன்னால் காண முடியாத ஒன்றை நம்பி களத்தில் இறங்குகிறான் “ என்று தனது தந்தை சொன்ன வார்த்தை ஒன்றை நினைவு கூறுகிறான். மீனவர்கள் வாழ்க்கை அது போலத்தான். ஒருநாள் மீன் பிடிக்க சென்று வந்தால் அவர்கள் அத்தியாவசிய தேவைகளுக்கான பணம் கிடைக்குமா என்பது புதிர்த்தான். அதுவும் பஞ்சம் ஏற்பட்ட பேரிடர் காலங்களில் பசி மனிதனை வாட்டுகிறது. தினமும் படகிலிருந்து வீட்டிற்கு திரும்பிப் போகையில்
தனது மனைவி குழந்தைகள் வெறி நாய்கள் உணவை வெறித்தப் பார்ப்பதைப் போல உற்று நோக்குவதாக சொல்கிறான்.
யதார்த்தமாக இன்றைய கொரோனா நோய் தொற்று ஏற்பட்டு முடங்கியுள்ள இந்த கால கட்டத்தில் மனிதர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு மனிதர்கள் பசியாலும் வேலை இல்லாமல் திண்டாடுகிறார்கள். எத்தனையோ மனிதர்கள் எர்ணாஸ்டோ டிம்பாவின் கதையைப் போல ஆகிவிட்டோம் என்பதை உணர முடிகிறது.

 மியா கெளட்டோவின் இந்த கதை எத்தனை துயரத்தின் போதும் மனிதர்கள் அறத்தொடு வாழ்ந்தர்கள் என்பதை நுட்பமாக சொல்கிறது. எர்ணாஸ்டோ பறவைகள் கொல்லப் பட்டதை எண்ணி மரணித்து விடுகிறான். உண்மையில் சில நேரங்களில் மனிதர்களால் அறம் அழிந்து போவதை, அநீதி இழைக்கப்படுவதை பார்த்து வாழ முடியாமல் மரணித்து போகிறார்கள். அத்தகைய மனிதர்களால் இந்த அறமற்ற மோசடி நிறைந்த வாழ்க்கையை வாழ விருப்பமற்று வாழ முடியவில்லை.
எர்னேஸ்டோ தனக்கு படகில் கிடைத்த பறவைகள் கடவுள் கொடுத்த பரிசு அதிர்ஷ்டம் என்று நினைத்தாலும் அவனை சுற்றி உள்ள மனிதர்கள் அதை கொன்று தனக்கு பயன்படுத்தும் அவலம் அவனை துயர் கொள்ள வைக்கிறது.
நிஜ வாழ்விலும் கொரோனா போன்ற பேரிடர் காலத்திலும் மனிதர்கள் அறத்தை கைவிடாதவர்களாக செயல் படுவதை செய்தியிலும் பார்க்க முடிகிறது. என்னுடன் ஆபீசில் வேலை பார்க்கிற நண்பர் கூட உடல் நிலை சரியில்லாத போதும் கூட அன்றாடம் உணவு இலவசமாக வழங்கி வருவதாக சொன்னார். சாலையிலும் பெரும்பாலான ஆளே இல்லாத ரயில் நிலையங்கள் கோவில் முன்னால் எத்தனையோ மனிதர்கள் உணவின்றி அலைந்து கொண்டிருக்கிறார்கள். எந்த பேரிடர் காலமும் வீடுள்ள மனிதனுக்குத்தான். எந்த துணையுமற்ற வீடில்லாத மனிதர்களின் வாழ்வு பெரும் கவலைக் கிடமாகவே உள்ளது. ஒரு முறை ரயில் நிலைய படிகட்டில் ஒருவர் இட்லியை தரையில் பிய்த்துப் போட்டு சாம்பரை ஊற்றி மண் கலந்து அசுத்தமான உணவை சாப்பிடுவதைப் பார்த்தேன். கண்ணீர் வந்து விட்டது. ஆனால் வாழவே இயலாத அத்தகைய மனிதர்கள்தான் சக மனிதனுக்காக உதவி செய்கிறார்கள் எர்ணாஸ்டோ டிம்பாவும் வறுமையில் ஒடுங்கிய மீனவன்தான். ஆனால் தன்னைத் தேடி வந்த பறவையை கடவுளின் பரிசாக எண்ணி வளர்ப்பதும் அது கொல்லப்பட்டதும் தானும் இறந்து போவதும் என்ன மாதிரியான அன்பும் அறமும். மேலும் பசியால் வாடிய தான் குடும்பத்தின் நிலைமையின் போதும் அவன் பறவையின் பசியைப் போக்கவே போராடினான். இந்த கொள்ளை நோய் காலத்திலும் தொடர்ந்து உணவும் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய உதவிய மனிதர்களும் எர்ணாஸ்டோ டிம்பாவை போலத்தான். மியா கெளட்டோ வின் இந்த சிறுகதை கடவுள் மீதும் சக உயிரினத்தின் மீதும் அன்பும் நம்பிக்கையும் கொண்ட இருத்தலியத்தின் அடையாளமாக இருந்த மனிதனை முதன்மை படுத்துகிறது.

கடவுளால் தேர்ந்தெடுக்கப் பட்ட மனிதன் தனி வழியே சஞ்சரிப்பவனாக இருப்பான் என்று மியா கெளட்டோ குறிப்பிடுகிறார்.
கடவுளை நம்புகிற மனிதன் எதோ ஒரு அறத்தை கொண்டவனாக உலகிற்கு அன்பை தருவதின் பொருட்டு எதையும் தியாகம் செய்கிறான். ஆனாலும் சில மனிதர்கள் புரிதலற்ற முட்டாள்தனத்தின் காரணமாக உயிர்கள் மீதான வன்முறையில் ஈடுபடுகிறார்கள். கடவுள் என்கிற சித்தாந்தமோ தத்துவமோ எவராலும் சரிவர புரிந்து கொள்ளப்படாதவரை மனித வாழ்வு சிதைவுக்குட்பட்டதாகும் என்பது மியா கெளட்டோ நுட்பமாக சொல்லும் ரகசியம்.

தீவிர உளவியலின் கூறுகளை முன்வைக்காத படைப்புதான் என்றாலும் கடவுள் மறுப்பு அல்லது மறுப்பு வாதத்தின் சார்பான மனிதர்கள் சிதைவை ஏற்படுத்துகிறார்கள் என்றும் இயற்கை உயிர்களை துன்புறுத்துகிறார்கள் என்று மியா சொல்கிறார். கடவுள் ஏற்பு – மறுப்பு எது எப்படி யாகினும் அடிப்படையில் சக மனிதன், பிற உயிரினங்களின் மீதான வெளிப்படுத்தும் அன்பும் புரிதலும் அவசியம் தான். அதை கடவுள் நம்பிக்கை தூண்டுகிறது எனில் அது ஆரோக்கியமானது. ஆனால் அதே சமயம் சில மூடர்கள் அதை தவறாக புரிந்து கொண்டு வன்முறை கருத்தியலை பரப்பவும் செயல்படவும் வாய்ப்புள்ளது.
Vஒருமுறை எங்கள் வீட்டில் பூனை வெளியில் இருந்து வந்து போய்க் கொண்டிருந்தது. அதனை காம்பவுண்டில் உள்ள அனைவரும் துரத்தினர். நானும் வீட்டில் உள்ளவர்களும் கூட அதனை துரத்தி விட்டோம். அந்த பூனை கர்ப்பமாக இருந்ததை தெரிந்ததும் சிலர் அதற்கு உணவு கொடுத்து வீட்டில் வர அனுமதித்தார்கள். அது நான்கு குட்டிகள் போட்டதும் அதன் அழகை ரசித்து செல்பி எடுத்துக்கொண்டனர். கொஞ்சினார்கள். ஆனால் குட்டிகள் வளர்ந்த பிறகு நிறைய ஆண் பூனைகள் பெண் பூனைகள் என கூட்டமாக வர ஆரம்பித்தன. இதனால் ஓட்டு மொத்த பூனைகளையும் விரட்டி அடிக்க வேண்டியதானது. ஆனால் மறுமுறையும் அந்த பூனை கர்ப்பமாகி வந்திருந்தது. குட்டிகள் போட்டதும் ஹவுஸ் ஓனர் அதனை வீட்டு மொட்டை மாடியில் தூக்கிப் போட்டு போய்விட்டார். பிறந்த இளம் குட்டிகளை காக்கைகள் கொத்தி கொன்று விட்டன. கொஞ்ச நாளில் அந்த பூனை காணாமல் போய்விட்டது. அதன் பின்னர் அது வரவே யில்லை. ஒரு வாரத்திற்கு இறந்து போய் துடித்து மரணித்த பூனைக் குட்டிகளையே நினைத்துக் கொண்டிருந்தேன். அதனை தூக்கி வீசிய ஹவுஸ் ஓனர் ஒரு வருத்தமும் படவில்லை.

நாம் வாழும் வீட்டில் எத்தனையோ காலியான இடம் இருந்தும் ஒரு பூனையோ நாயோ தங்கிக் கொள்ள நாம் ஏன் அனுமதிப்பதில்லை. ஆனால் நாம்தான் குட்டிகளை சுமக்கும் பூனையை சில நேரங்களில் ஆதரவும் கொடுக்கிறோம். மனித மனம் விசித்திரங்கள் நிறைந்த ஒன்று. நாம் வகுத்துக் கொண்ட எல்லைகளில் இருந்துதான் உலகைப் புரிந்து கொள்கிறோம். எர்னேஸ்டோ டிம்பா அதற்கெல்லாம் விதி விலக்கானவன். அவனைப் புரிந்து கொள்கையில் உயிரினங்கள் மீதான அக்கறையையும் புரிந்து கொள்ளவும் செய்கிறோம். அதற்கு மியா கெளட்டோ போன்ற எழுத்தாளர்கள் சொல்லும் காரணங்கள் இந்த சிறுகதையை மீண்டும் மீண்டும் வாசிக்கதூண்டுகிறது.
ஆனால் டிம்போ ஏன் தான் குடும்பத்தை புரிந்து கொள்ள வில்லை. கடவுளின் விருப்பமாக நினைத்து பறவையை வளர்த்து வருபவன் ஏன் தன்னுடைய மனைவி பிள்ளைகளின் பசியை போக்கவும் குடும்பத்தின் வறுமையையும் புரிந்து கொள்ளாமல் தன்னுடைய கடவுளின் விருப்பம் என கருத்தியலில் இயங்குகிறான் என்பது யோசிக்க வேண்டிய விஷயம்.
தற்கொலை செய்து கொண்டு மரணிப்பவர்களுக்கு ஏதோவொரு காரணம் இந்த வாழ்க்கையை தூண்டிக்கும் விதமாக அமைகிறது. எர்ணாஸ்டோ பறவையை கொன்றவர்களுக்காக கடவுளிடம் மன்னிப்பு கேட்கிறான். அவர்கள் செய்த குற்றத்திற்க்கு தான் உயிரை விடுகிறான். மரணம் வாழ்க்கையின் முடிவுதான். தற்கொலை அழிவை ஏற்படுத்துவது. முடிவை ஏற்றுக் கொண்டு வாழ முடியும். அழிவை ஏற்படுத்தி வாழ எப்படி நாம் முடிவேடுக்கிறோம் என்பது துயரமான சிந்தனை.

Comments

Popular posts from this blog

செகண்ட் ஷோ நினைவுகள்

சுருளி நினைவுகள் பகுதி -1

சுருளி நினைவுகள் பகுதி -2 : ( கடவுள் எனும் நண்பன் )