பசியெனும் கடவுள்....!

ஆடு ஜீவிதம் திரைப்படம் யாராலும் எளிதாக கடந்து போக முடியாத ஒன்று. வாழ்வின் இன்னொரு பக்கத்தை யாருக்கும் யாராலும் யாருக்காகவும் நடந்து விடக் கூடாது என்று நாம் பதைபதைப்போலவே படம் பார்க்கும் போது உணர முடிந்தது. ப்ரித்வி ராஜ் நடித்த விதம் மிக நுட்பமாக உணர்ச்சி பூர்வமாக இருந்தது. 

குடும்பத்தை பிரிந்து வேலைக்காக வெளியூருக்கோ வெளி நாடுகளுக்கோ செல்லும் மனிதர்கள் அடையும் நெருக்கடியும் வேதனையையும் படம் மிக ஆழமாக நுட்பமாக காட்சிபடுத்தியுள்ளது. 
கிராமத்தில் சிறு வயதில் துபாய் போய் ஒட்டகம் மேய்க்க போறியா என்று கேலியும் கிண்டலுமாக பேசிய வார்த்தைகளின் அர்த்தம் இன்று நாம் யாரும் சற்றும் நினைத்து பார்க்க முடியாத ரணத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 

புலம் பெயர் மனிதர்கள் அடையும் நெருக்கடிகளும் மொழி தெரியாமல் அவர்கள் அடையும் சங்கடமும் நாம் முக்கியமாக பேச வேண்டிய விஷயம். சொந்த நாட்டில் வாழ வழி இல்லாமல் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக ஏன் இவர்கள் வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டும்? வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஏன் இந்திய அரசின் எந்த பாதுகாப்பு குரலும் இல்லை என்பது ஏமாற்றத்தையே தருகிறது. படத்தின் இறுதி காட்சியில் இவ்வளவு தூரம் தப்பித்து வந்தும் அந்த ஸ்பான்ஸர் அந்த பணியாளரை அடையாளம் கண்டு மறுபடியும் அதே அடிமைப் பணிக்கு அழைத்து செல்லும் காட்சி அனைவரது மனசாட்சியின் மீது ஒரு சோதனையை ஏற்படுத்தும். ரஹீம் கதாபாத்திரம் அடையாளம் காண முடியாமல் தப்பித்தாலும் அவனுக்கு முன்னால் ஒரு மனிதனை ஸ்பான்ஸர் அடிமையாக இழுத்து செல்லும் காட்சி நாம் மறக்க கூடாத காட்சி. 


தொழிற்சாலையில் வேலை வாங்கி தருவதாக கூறி வெளிநாட்டில் தனித்து விட்டு விடும் மோசடிகளை சொந்த நாட்டில் இருப்பவர்களே ஏன் செய்கிறார்கள் அவர்களை இந்த எந்த அரசும் ஏன் கண்டுகொள்ளவே இல்லை என்ற கேள்வி எழுகிறது. 
மனித உரிமை மீறல்கள், தீண்டாமை, அடிமைத்தனம் பற்றிய திரைப்படங்களில் ஆடு ஜீவதம் மிக யதார்த்தமாக உருவாக்கப் பட்டிருக்கிறது. 

குடும்பதிற்க்காகவே வாழும் மனிதர்கள் மட்டும் ஏன் குடும்பத்தை விட்டு பிரிந்து ஏன் இப்படி எதோ பாலைவனத்தின் சுடுமணல் வெளியில் கிடந்து சாக வேண்டும் அப்படி என்ன ரஹீம் தவறு செய்து விட்டான்? குடும்பத்தை காப்பாற்ற பணம் சம்பாதிக்க நினைப்பது ஒரு தவறா என்று நாம் யாரிடமும் போய் கேள்வி கேட்க போகிறோம். கடவுளிடமா? அரசிடமா? இல்லை இந்த மனித சமூகத்திடமா என்று தெரியவில்லை.....

பசியாலும் தாகத்தாலும் பாலைவனத்தின் கொடும் வெயிலில் மரணித்த ஹக்கீம் எனும் இளைஞனை மறக்கவே முடியாது. படம் பார்த்து இரண்டு வாரங்கள் கழித்தும் பசியால் பாலை வனத்தின் மணலை அள்ளி தின்று இரத்த வாந்தி எடுத்த ஹக்கீம் மனதில் மிதந்தபடி உள்ளான். இன்னும் கூட பாலை வனத்தின் மணல் மேடுகளில் மணலின் ஆழத்தின் இரவு வானத்து நட்சத்திரங்களிடையே அவன் துயில் கொண்டிருப்பான். மனித வதைகளில் மிக கொடூரமானது மொழியற்ற தேசத்தில் பசிக்காக அவமானப் படுத்தப் படுவதுதான். 

தப்பிச் சென்று விடுவதாக முடிவெடுத்த பின்னர் ரஹீம் அந்த ஆடுகளுக்காக கண்ணீர் வடிக்கிறான். எத்தனை கொடும் சிறையில் அடைப்பட்டு கிடந்த போதிலும் எப்போது இங்கிருந்து செல்வோம் என்று காத்துக் கொண்டிருந்தாலும் அந்த துயரத்தின் போது உடன் இருந்தவர்களை பிரியும் தருணத்தில் மனிதன் கண்ணீர் வடிக்கிறான். எந்த வகை முகாமை விடவும் பிரிவு மனிதனை உருகுலைத்து விடுகிறது . 



வாழ்நாளில் இனிமேல் தண்ணீரரை வீணடிக்க கண்டிப்பாக மனம் வராது. தப்பிச் செல்லும் காட்சிகளில் ரஹீம் ஹக்கீம் போன்றோர் கானல் நீரை பார்த்து ஏமாந்து போகிறார்கள். அவர்களை வழிகாட்டி அழைத்துச் செல்லும் கருப்பின நண்பன் கடவுளைப் போலவே அவர்களை காப்பாற்றுகிறான். 
நம்பிக்கை ஒரு மனிதனை உயிர்பிக்கும் என்று நமக்கு நம்பிக்கை ஏற்படும். ஆனால் ஹக்கீம் பசியால் தாகத்தால் சாகும் போது ஏன் கடவுளும் இயற்கை அவனை காப்பாற்ற வில்லை என்பது யாராலும் புரிந்து கொள்ள முடியாத புதிர். உண்மையில் அற்புதங்களை கடவுள் நிகழ்த்தில்லை. நம்புவது ஒன்று மட்டுமே முக்கியம். நம்பிக்கையோடு அடுத்த அடி எடுத்து வைப்பதுதான் முக்கியம். 

வேலை செய்து சம்பாதித்து வீடு திரும்ப நினைத்த ரஹீம் அவன் உயிரைத் தவிர எதையும் சொந்த நாட்டிற்கு எடுத்த செல்ல வில்லை என்று சொல்கிறான். வாழ்ந்து முடித்து மனிதன் எதையும் அவனோடு எடுத்துச் செல்லவதில்லை. அழகான நினைவுகளை மட்டுமே இந்த பூமியில் விட்டுச் செல்கிறான். 
பாலை வனத்தில் ரஹீமுக்கு தண்ணீர் கிடைக்கும் இடத்தில் அனைவர்க்கும் இயற்கையின் கருணையின் மீது நம்பிக்கை ஏற்படும். ஆனால் அதே சமயம் நல்ல துணைவனாக அந்த கருப்பின நண்பன் இல்லையென்றால் ரஹீம் தப்பித்து சென்றிருக்க முடியாது. எதோவொரு நம்பிக்கை நம்மை துயரத்திலிருந்து மீட்டெடுக்கும். ஆனால் நாம் நம்பவும் மீளவும் தயாராக இருக்க வேண்டும். 
ஹக்கீம் இனி உனக்கு துயரங்கள் இல்லை. பாலை வனத்தின் மென்மையான வெயில் சூட்டில் நீ நிம்மதியாக உறங்கு. 
இரவில் பாலை வனத்தின் மணலில் படுத்தபடி நட்சத்திரங்ககளை எண்ணிக் கொண்டிரு. கருப்பின நண்பனையும் ரஹீம் நினைவுகளையும் நினைத்து நீ ஆறுதல் அடைவாயாக. உனக்கு அன்பும் நேசமும். இந்த திரைப்படம் எடுத்த அனைவருக்கும் நன்றியையும் அன்பையும் தெரிவிப்போம். 

Comments

Popular posts from this blog

செகண்ட் ஷோ நினைவுகள்

சுருளி நினைவுகள் பகுதி -1

சுருளி நினைவுகள் பகுதி -2 : ( கடவுள் எனும் நண்பன் )