கூழாங்கல் - பெண்கள்...!
இந்திய சினிமாவில் சத்யஜித்ரே இயக்கிய பதேர் பாஞ்சாலி திரைப்படத்தைப் போலவே வினோத் இயக்கிய கூழாங்கல் திரைப்படம். ஒரு மணி நேரம் 15 நிமிடங்கள் ஓடக் கூடிய யதார்த்தவாத திரைப்படம். இந்தத் திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாவில் டைகர் விருதினை பெற்றுள்ளது. தமிழ் சினிமா பெரும்பாலும் கமர்சியல், வணிக பிடியில் சிக்கியுள்ள சூழலில் கூழாங்கல் போன்ற யதார்த்தவாத திரைப்படங்கள் புதிய வரவேற்பை பெறக் கூடியது . சினிமாவில் மாற்று முயற்சியாக புதிய தொழில் நுட்பங்களை பயன்படுத்தி நிஜத்தை அப்படியே படம் பிடிப்பது ஒரு முறை என்றாலும் கொஞ்சம் அழகியல் நோக்கோடு கலைத் தன்மையோடு புனைவோடு எடுக்கப்பட்ட படங்களும் முக்கியம்தான். ஆனால் கூழாங்கல் இது வரை தமிழ் சினிமாவின் மொழியை உடைத்து புதிய பாணியில் உருவாக்கப் பட்டிருப்பது அதன் சிறப்பம்சம்.
பெண்களின் வாழ்க்கை கூழாங்கற்களைப் போலவேயிருக்கிறது.
ஒவ்வொரு பெண்ணும் ஒரு வகையில் கூழாங்கல்தான். கொஞ்சம் தண்ணீர் கொண்டு சுத்தப்படுத்தி பார்த்தால் கூழாங்கற்களின் அழகு மிக மினு மினுப்பூட்டக்கூடியது.
ஆனால் அதை வாயில் போட்டு சுவைப்பதால் ஒரு பயனும் இல்லை. அதை உடைத்துப் பார்ப்பதிலும் எந்த பயனும் இல்லை. லியோ டால்ஸ்டோய் பெண்களை கட்டுப்படுத்தவோ அவளின் நடத்தயைப் பற்றி மதிப்பீடு செய்யவோ யாருக்கும் உரிமையில்லை. எந்த பெண்ணின் சரி தவறுகளையும் நீங்கள் முடிவு செய்யதீர்கள் அதை அவர்களிடமே சுதந்திரமாக விட்டு விடுங்கள் என்று அன்னா கரீனினா நாவலில் சொல்லியிருப்பார். உண்மையில் உலகில் எந்த பகுதியில் வாழும் பெண்களுக்கும் இது பொருந்தும். ஆனால் கூழாங்கல் திரைப்படத்தில் காட்டப்படும் பெண்கள் கரடு முரடான எதெச்சதிகாரத்தின் அடிமைத்தனத்தின் குறியீடாகவே காட்சிப்படுத்தப்பட்டுள்ளார்கள்.
தமிழ் குடும்பங்களின் ஆண் பெண் குடும்ப வாழ்க்கை அதிகமாக பொருளாதார சீர்கேட்டினால் சிதைந்து போவதை உண்மையாக நாம் சமூகத்தில் நேரில் பார்க்கிறோம். குறிப்பாக சொந்த வீட்டில்லாத நகை போட்டு கல்யாணம் செய்து கொள்ள வசதி இல்லாத பெண்கள் எவ்வளவு படித்திருந்தாலும் ஆணாதிக்க சூழலில் சிக்கி சிதைந்து போவதை நாம் அறிய முடியும். ஆனால் இந்த இடத்தில் ஒரு கேள்வி எழும் ஆண்களை மட்டும் குற்றம் சுமத்துவது எப்படி நியாயம்? குடும்பத்தை புரிந்து கொள்ளாத பெண்களும் சுய நலவாதிகளும் உள்ளனர். ஆனால் பெண்கள் எதன் பொருட்டோ சுதந்திரம் மறுக்கப் பட்டவர்களாகவே உள்ளனர். அடிப்படையில் இந்த படத்தில் அந்த சிறுவன் வெயில் காட்டில் இருந்து சேகரித்துக் கொண்டு வந்த கூழாங்கல்லை வீட்டிடினுள் குவித்து வைக்கும் காட்சி மிக முக்கியமான இடம். எனில் இந்த ஆணாதிக்க சூழல் நூற்றாண்டுகளாக தொடர்ந்து அன்றாடம் நிகழ்ந்து கொண்டே இருக்கக்கூடியதுதான் அதை எப்படித்தான் மாற்றுவது என்ற கேள்வியும் எழும்?
குடிக்க தண்ணீர் இல்லாத அடுத்தவேளை உணவு கிடைக்காத அந்த கிராமத்தின் ஆண்கள் மட்டுமே குடிப்பது புகைபிடிப்பது சூதாடுவது என்று திரிவது எப்படி சாத்தியமாக்கும்? இன்னொன்று என்னவென்றால் குறிப்பாக கிராமத்தில் மதுப் பழக்கத்திற்க்கு ஆளாகி குடும்பத்தை சீரழித்த ஆண்களின் செயலை ஏன் யாரும் எதிர் குரல் கேட்கமால் இருக்கிறார்கள்? உடல் உழைத்து நல்ல பணம் சம்பாதித்து கடைசியில் மதுவுக்கும் புகைக்குமாக பணத்தை செலவு செய்து குடும்பத்தை பட்டினி போட்ட அவல நிலைக்கு செல்வதை நினைத்து ஆண்களின் புத்தியில் ஏன் உறைக்க வில்லை.அப்படியென்றால் ஆண்களுக்கு பிரச்சனையே இல்லையா அவர்களுக்கு மனக் கஷ்டங்கள் இருக்காதா? மனதளவில் துவண்டு போன மனிதன் குடிக்காமல் எப்படி அவன் அந்த வலியை கடந்து போக முடியும்? உண்மைதான், குடிப்பது சிலருக்கு வேதனையை மறக்கத்தான். ஆனால் வாங்கிய சம்பளத்தை அப்படியே குடித்து விட்டால் உழைத்து வாங்கிய பணத்திற்கு என்ன மரியாதை? பிறகு எப்படி பணம் சேர்க்க முடியும் குடும்பத்தை நடத்த முடியும்?
இந்த படத்தில் வருகிற கணபதி தொடர்ந்து மலிவான விலையில் வாங்கிய மதுவையையும் பீடியையும் குடித்துக் கொண்டே இருக்கிறான். குடி அவனை மிருகமாக்கி வைத்திருக்கிறது. உணவு கிடைக்காமல் கிராமத்து மக்கள் எலியைப் பிடித்து நெருப்பில் இட்டு சுட்டு தின்னும் அவலத்தை காட்சி படுத்தியிருக்கிறார். உண்மையில் பஞ்ச காலத்தில் மக்கள் அனுபவித்த கொடுமைகளை இந்த படம் நியாமாக பதிவு செய்திருக்கிறது. தனி மனிதனுக்கு உணவு இல்லையென்றால் ஜகத்தினை அழித்துவிட வேண்டுமென பாரதி சொல்கிறார். எனில் எத்தனையோ வித வித மான உணவு வகைகள் பிரமாண்ட ரெஸ்டாரெண்ட்டிலும் ஹோட்டல்களிலும் உணவுகள் வீணாவதும் அதே சமயம் இன்னொரு புறம் உணவு கிடைக்காமல் குப்பைத் தொட்டியில் தேடும் மனிதர்களும் எலியை புகைப் போட்டு பிடித்து சாப்பிடும் வறிய மனிதர்களும் இருக்கிறார்கள். அனைத்து மனிதர்களுக்கும் உணவு கிடைக்காமல் போவது யார் தவறு? சாமானிய மனிதன் தவறா? சமூகத்தின் தவறா?இல்லை இயற்கை ஏன் அனைவர்க்கும் உணவை கொடுப்பதில்லை இதுஎன்ன நியாயம் என்று ஏற்றுக் கொள்ள முடியவில்லை?
கிராமத்து மனிதர்களின் வாழ்க்கையை காட்சிகளின் வழியே யதார்த்தமாக அப்படியே பதிவு செய்கிறார். குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதற்கு ஒரு பெண் நடு ரோட்டில் இறங்கி மறைவான இடத்தை நோக்கி போகிறாள். குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க வசதி இல்லாத கிராமங்களின் நிலை சுட்டிக் காட்டப் படுகிறது. நேரத்திற்கு வந்து போகும் ஒரே மினி பஸ். அதில் ஆயிரம் ஓட்டை ஒடிசல்கள். தண்ணீரை பிடித்து வர மினி பஸ் ஏறி போய் பக்கத்து ஊரில் இரண்டு குடம் தண்ணீர் பிடித்து எடுத்து வருவது நான் கேள்வி படாத அவலம். ஏன் ஒரு ஆண் கூட தண்ணீர் பிடிக்க இது நாள் வரை பக்கத்துல ஊர் போய் நடந்து வர வில்லை. குடி தண்ணீர்க்காக பெண்கள் காத்துக் கிடப்பதை வினோத் மிக நியாயமாக பதிவு செய்திருப்பது மிக பெரிய செயல். பஸ் ஓடுகிற அதிர்வில் குடத்தில் அந்த தண்ணீர் துளிகள் அதிர்வது அற்புதமான காட்சி. அது போலவேதான் அந்த மனிதர்களின் வாழ்க்கையும்.
சிறுவன் வீட்டில் சேகரிக்கும் கூழாங்கற்களைப் போல இறுதிக் காட்சியில் பெண்கள் தண்ணீருக்காக காத்துக் கிடப்பதும் இன்னும் நாம் குடும்பங்களில் பெண்கள் சேகரிக்கப் பட்ட கூழாங்கற்களப் போலத்தான் முடக்கப் பட்டும் தண்ணீருக்காக காத்துக் கிடப்பதுமாக இருக்கிறார்கள். அந்த பாட்டி தண்ணீரை அள்ளி குடத்தில் ஊற்றும் சப்தம் மட்டுமே பத்து நிமிடங்களுக்கு மேல் ஓடுகிறது. அந்த சப்தம் தான் மனதை அப்படியே உறைய வைக்கிறது. தமிழில் இது போன்ற நிறைய திரைப்படங்கள் வர வேண்டும். பொது சமூகத்தில் அது குறித்து பேசி விவாதம் செய்து அது நல்ல தாக்கத்தை
ஏற்படுத்த வேண்டும்.
Comments
Post a Comment