வெறுப்பு ஒரு தீர்வல்ல

காசி - பாதசாரி - சிறுகதை 

இலக்கியம் வாசித்த புதிதில் யாரை பார்த்தஉடன் சட்டையில் பேனா வைத்திருந்தால் எழுத்தாளர் என்றோ வாசகர் என்றோ நினைத்துக் கொள்ளுமளவு இலக்கியம் பிடித்து போயிருந்தது. புத்தகம் வாசித்தால் வாழ்வில் நாம் சாதித்து விடுவோம் நல்ல வாழ்க்கை வாழப் போகிறோம். என்று தோன்றும். சில இலக்கிய விழாக்களில் பேசும் போது நாமும் பேசும் போது மூத்த வாசகர்கள், எழுத்தாளர்கள் பாராட்டும் போது சுய கவுரவம் வந்து போகும். ஆனால் தீவிர இலக்கியம் வாசித்த போது அந்த பிம்பம் உடைந்து போகும். 




உலகின் மேன்மையான இலக்கியங்கள் புத்தகங்கள் வாசிக்க வாசிக்க வாழ்வின் இருண்ட பக்கங்களையும் துயரத்தையும் சுய தேடலையும் சிந்தனைவாதத்தையும் லட்சியவாதத்தையும் உருவாக்கி நம்மை திசை திருப்பிவிடும். ஆனால் நிஜ வாழ்க்கை அப்படியெல்லாம் இல்லை. புத்தகம் வாசித்தாலும் வாசிக்க வில்லை என்றாலும் வாழ்க்கை யாருக்கு என்ன தரும் எப்படியெல்லாம் மாறும் என்று யாருக்கும் தெரியாது போல? காசி என்ற கதையில் வருகிற மனிதனும் பல முறை தற்கொலைக்கு முயன்று தோற்றுப் போயிருக்கிறான். வீரத்திற்காக வீர மரணம் அடைந்தவர்களும் வாழ முடியாமல் தற்கொலை செய்து கொள்பவர்களும் ஒன்றல்ல. ஓரளவுக்கு வாழ்க்கை எதோ இருக்க இடமும் வேலையும் கிடைத்தாலே போதும் தான் அப்புறம் என்னதான் காசி வாழ்க்கையில் தேடினான்? ஓரே வேலை வீடு, திருமணம், குழந்தைகள், கடமைகள் இவைகளுக்கு மத்தியில் எதுவும் மில்லாமல் மனதுக்கு பிடித்த மாதிரி குடிப்பது சிகரெட் பிடிப்பதும் வேலைக்கு செல்லாமல் மனம் போன போக்கில் சுற்றுவதுமாக இருக்கிறான் காசி. ஏன் காசி இப்படி வாழ்கிறான்? என்ற கேள்வி எழும்?. புத்தகம் வாசிக்கும் பழக்கம் கொண்ட காசி வாழ்வில் முடிவெடுக்க முடியாமல் மனதை சதா அலைந்து கொண்டிருக்கும் வாழ்க்கையை வாழ்கிறான் . வேலை இல்லாமல் தந்தையிடம் பணம் வாங்கிக்கொண்டு உல்லாசமாக சுற்றுகிறான். இதில் எது ஒழுக்கம்? ஒழுக்கமின்மை என்ற ஒரு கருத்தியல் பற்றி நாம் யோசிக்கிறோம். ஒழுக்கம், நிம்மதியான வாழ்க்கை போன்றவை வெறும் புத்தகம் வாசிப்பதால் மட்டும் கிடைத்துவிடுமா? என்ற முக்கியமான கேள்வி எழுகிறது.


வாழ்வின் நிலையாமை பற்றி பாதசாரி கேள்வி எழுப்பிக் கொண்டே போகிறார். அனைவரும் மனதிலும் காசி போன்ற வாழ்வை வெறுக்கிற மனம் நலம் பாதிக்கப்பட்ட மனிதன் இருக்கிறான். எதிலும் நிலையில்லாமல் பொறுமைஇல்லாமல் எதிலும் முழுமையான நிறைவு இல்லாமல் சதா அலைந்து கொண்டிருக்கும் காசி வாழ்வில் என்னதான் எதிர்பார்த்தான்? சொல்லப் போனால் வாழத் தெரியவில்லை அல்லது பொறுமைஇல்லாமல் முடிவெடுக்க தெரியாமல் அலைந்து கொண்டிருந்தான் காசி . எந்த வேலையும் நிரந்தரம் இல்லாமல் வேலையை விடுவதும் மீண்டும் குடும்ப நெருக்கடி காரணமாக எதோ வேலைக்கு போவதுமாக அலைகிறான். திருமண உறவும் முறிந்து தனிமையில் வாழ்கிறான். காசியை போல வாழ்க்கை யாருக்கும் கிடைக்கக் கூடாது என்றுதான் நினைக்கத் தோன்றும். நண்பன் குணாவோடு மதுக்கடையில் அவன் பேசிக் கொண்டிருக்கும் போது அவன் வாசித்த புத்தகங்களின் பெயர்களைக் கூறி சிலாகித்து பேசும் பகுதி அவனுக்குள்ளிருக்கும் ரசிப்புத்தன்மை கொண்ட மனிதனை காட்டுகிறது. ஆனால் அதே சமயம் குடிப்பது சிகரெட் பிடிப்பதும் சுய இன்பம் செய்வதுமாக அலையும் அவன் வாசிக்க முரண்பாடுகள் கொண்டவனாகவும் இருக்கிறான். தஸ்தயேவஸ்கி சொன்னது போலவே எந்தவொரு மனிதனுக்கும் கீழான குணம் என்பது இருக்கும். அதையும் சேர்த்துதான் நாம் புரிந்து கொள்ள வேண்டும். காசி என்ற இக்கதை வாழ்வின் நிரந்தமற்ற தன்மையை, மர்மத்தை, வாழ்க்கைப் பற்றி அடிப்படை கேள்விகளை முன் வைக்கிறது. மனிதனின் தேவை என்ன? எது நல்லது கேட்டது என்பவற்றை தீர்மானிக்கிறது? எதற்காக சிலருக்கு இந்த வாழ்க்கை பிடிக்காமல் தற்கொலை செய்ய முயல்கிறார்கள்? மனிதன் என்னதான் தேடி அலைகிறான் என்றெல்லாம் நாம் சிந்திக்க நேரிடும். பொறுமையும் வாழ்வின் நுட்பத்தையும் அன்பின் அர்த்தத்தையும் நாம் புரிந்து கொள்ளாததால் வாழ்வே அலைக்கழிப்பாக இருக்கிறது. உடல் என்பது வெறும் ரத்தமும் சதையும் எலும்புகளும் நிறைந்த கூடுதான். எதற்காக இத்தனை வெறி, அகங்காரம், ஆசைகள் என்று தம்மபதத்தில் புத்தர் கேள்வி எழுப்புகிறார். மனதின் பல வடிவங்களின் தொகுப்புதான் காசியின் வாழ்க்கை. அவன் வழியாக நாம் மனதைக் கடந்து அமைதியான அர்த்தத்தை நோக்கி போகிறோம் என்றுதான் நினைக்கத் தோன்றும். ஆனால் போராடித்தான் அமைதி அடைய வேண்டியிருக்கிறது. 
இந்த கதை நம்மை நாமே சுய மதிப்பீடு செய்ய தூண்டும் நல்ல படைப்பு. பாதசாரிக்கும் அன்பும் நன்றியும்!.

Comments

Popular posts from this blog

செகண்ட் ஷோ நினைவுகள்

சுருளி நினைவுகள் பகுதி -1

சுருளி நினைவுகள் பகுதி -2 : ( கடவுள் எனும் நண்பன் )