பூ - மாரியின் காதல்....!
வெயிலில் நடந்து போய் காதலித்த கதைதான் இது. காதல் என்றால் வெறும் உடல் இன்பமோ, உல்லாசமாகசுற்றியலைவதோ இல்லை. காதல் என்பது நினைத்துக் கொண்டே இருப்பது. அதுவொரு புரிதல் காதலித்த மனிதர்கள் உடன் இருந்தால் புரிந்து சென்றாலும் மனதில் நினைவுகள் மட்டுமே மிஞ்சியிருக்கிறது. ஒரு பெண்ணின் காதல் இத்தனை ஆழமானதா?? இன்னொன்று பெண்கள் நூற்றாண்டுகளாக அந்த பந்தம் எதாவது ஒரு வகையில் தொடர வேண்டும் என அவர்கள் ஏன் நினைக்கிறார்கள்?
இந்த கதையில் வரும் மாரியம்மாள் அவள் மச்சான் தங்க ராசுவை காதலிக்கிறாள். தங்கராசு மாரியம்மாள் அம்மாவின் உடன் பிறந்த தம்பியின் மகன். கிராமப் புறங்களில் திருமணம் செய்து கொள்ள பொருத்தம் இருக்கும் உறவுகள் தாய் வழி வந்த சகோதரன் மகன் அல்லது மகள் அல்லது அப்பாவுடன் பிறந்த சகோதரியின் மகள் அல்லது மகன் போன்றவை. சிறுவயதிலேயே இந்த முறை உள்ளவர்கள் விருப்பத்துடன் உரிமையோடு பழகுவார்கள். ஆனால் வாழ்க்கை அப்படி இருப்பதில்லை. புத்தர் சொன்னது போல் மாறிக்கொண்டே இருப்பதுதான் வாழ்க்கை . வாழ்வின் போக்கில் தங்கராசு மாறிப் போகிறான். சிறுவயதில் மாரியம்மாள்ளோடு விளையாடி மகிழும் தங்கராசுவாக இல்லை. குடும்ம்ப நெருக்கடி, அந்தஸ்து, படிப்பு என மாரியம்மாள் தங்கராசு பிரிந்து வேறு வேறு திருமணம் செய்து திசை மாறி போகிறார்கள். பல ஆண்டுகள் கழித்து ஊருக்கு வந்திருக்கும் தங்கராசுவை பார்க்க மாரியம்மாள் வருகிறாள். வெயிலோடு பால்ய கால நினைவுகளை சுமந்து கொண்டு மனதளவில் இன்னும் தங்கராசுவின் மீது அதே பாசத்தோடு இருக்கிறாள். ஆனால் தங்கராசுவின் மனைவி அவனோடு சண்டையிடுகிறாள். எரிந்து விழுகிறாள். அவர்களிடையே சுமகமான உறவு இல்லை. என்று கேட்டு மாரியம்மாள் வருந்துகிறாள். வீட்டிற்கு வந்து கண்ணீர் வடிக்கிறாள். ஒரு வேளை தன்னை கல்யாணம் செய்து கொண்டிருந்தால் தங்கராசு மச்சான் ராஜா மாதிரி இருந்திருப்பான் ஆனால் வாழ்க்கை இப்படியா மாறிப் போக வேண்டும்? என்று அங்கலாய்ப் போடு கதை முடிகிறது. எழுத்தாளர் தமிழ்ச் செல்வன் எழுதிய இந்த சிறுகதையை மையமாக வைத்து பூ என்கிற திரைப்படம் வெளியானத. சசி இயக்கிய அந்த படம் அனைவரும் பார்க்க வேண்டிய நல்ல படைப்பு.

ஆசையே துன்பத்திற்கு காரணம் என்கிறார் புத்தர். மாரியம்மாள் தங்கராசு வின் மீது ஆசைப்படுவதுதான் அவள் வலிக்கு காரணம் என்று புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் அந்த ஏமாற்றத்தை தாங்கிக் கொள்ளவே முடியாது. வேறெந்த தோல்வியை விடவும் விரும்பிய அதிகம் பாசம் வைத்துள்ள சிலரை பிரிந்து சென்றால் அடைகிற வேதனை வார்த்தையால் விவரிக்க முடியாதவொன்று சங்க இலக்கியம் முதல் இன்று வரை மனிதர்களின் முக்கியமான துயரமாக பிரிவுதான் இருந்திருக்கிறது. பிறந்த ஊரை, காதலித்த பெண்ணை, நண்பர்களை, குடும்பத்தை பிரிந்து செல்லும் மனிதர்களின் கதை துயரத்தின் உச்சம் என்றுதான் சொல்ல வேண்டும். அதிலும் அளவுக்கு அதிகமாக பாசம் வைத்துவிட்டு மறக்க முடியாமல் அல்லாடும் மாரியம்மாள் இந்த கதையில் வாழ்க்கை நிலையானதில்லை எந்த நிமிடம் வேண்டுமானாலும் நாம் நேசிப்பவர்கள்
பிரிந்து சென்று விடுவார்கள் என்ற வாழ்வின் நிலையாமையின் குறியீடாக இருக்கிறாள். ஆழமான காதல், உண்மையான அன்பு மட்டுமே முக்கியம் என்று வாழும் மனிதர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை. ஆனால் சமூகமும் இயற்கை அதற்கு தடையாக இருப்பது வேதனையான விஷயம். ஆனாலும் நினைவுகள் வழியாக வாழ்நாள் முழுவதும் தனது அன்பை நிரூபித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்பது வியப்பாக உள்ளது.! எல்லாவற்றையும் தாண்டி நினைவுகள் மட்டுமே நல்ல உறவுகளை காப்பாற்றி வைத்திருக்கிறது. பௌத்தம் உரைப்பது போலவே நல்ல விருப்பங்களை நினைவுகளை எடுத்துக் கொண்டு பிரிந்து சென்றவர்களை நினைவு கூருவது நல்ல உறவின் அடையாளம். அதுவே இயற்கை தரும் பரிசு..
Comments
Post a Comment