எவற்றில் நடமாடும் நிழல்கள் நாம்?

நினைவுகள் அழியாத சுடரைப் போல எரிந்து கொண்டே இருக்கிறது. கடந்து போன விருப்பங்கள் யாவும் ஏமாற்றங்களாகி வெறுமை மனதில் உருவாகிறது. அப்படியான தருணங்களில் நினைவுகளே நமக்கு நல்ல துணையாக இருக்கிறது. நல்ல நினைவுகளை சேகரித்து வைத்துக் கொள்பவனை போலவே சிறந்த மனிதன் யாராக இருக்க முடியும். அழியா சுடர் சிறுகதை ஒரு மனிதன் தன் மனதில் அழியாத சுடரைப் போலவே காதல் நினைவுகள் ஒளிர்வதாக நினைவு கூர்வதாக எழுதப் பட்டிருக்கிறது. வார்த்தைகளை வெளிப்படுத்தாமல் உணர்வுகளை வெளிப்படுத்தாமல் எப்படி இருவருக்குள்ளும் காதல் உருவாகிறது. வாழ்வின் பல தருணங்களில் அன்பை வெளிப்படுத்த மொழி அவசியமற்று போகிறது.

அந்த நினைவுகளில் கோவிலில் வைத்து ஒரு பெண்ணை சந்தித்து காதலிப்பதாகவும் அவர்கள் கண்களால் காதலிப்பதை அந்த கோவில் சிற்பங்கள் உயிர் பெற்று ரசிப்பதாக ஒரு காட்சி இடம்பெற்றிருக்கும். ஆனால் அழகான மொழியற்ற மௌன காதல் நிறைவேறாது. பல ஆண்டுகள் கழித்து அதே பெண்ணை கோவிலில் அவன் சந்திக்கிறான். இருவரும் ஒருவரையோருவர் பார்த்து கண்ணீர் சிந்துகின்றனர். அப்பொழுதும் அவர்கள் ஒரு வார்த்தை பேச வில்லை. ஆனால் இத்தனை ஆண்டுகள் நினைவுகளில் அந்த காதல் வாழ்ந்திருகிறது. வார்த்தைகள் தீர்ந்து போகும் நேரங்களில் உன்னதமான அன்பின் நினைவுகளின் இன்ப நிலைக்கு மனிதன் சென்று விடுகிறான்.  ஒரு பெண்ணை ரசிப்பதும் காதலிப்பதும் பற்றிய அனுபவத்தை சிறுகதையாக எழுதுவது ஒரு சவால்தான். மௌனி அந்த சவாலை சரியாக எதிர் கொண்டு தத்துவார்த்த தளத்தில் கதையை எழுதியுள்ளார். அக தனிமையை பற்றிய கதை என்பதால் தத்துவார்த்த அனுபவம் கிடைக்கிறது.

கதையில் அவன் ஒரு மரத்தை காட்டுகிறான். அதன் அசைவும் ஜீவ அணுவும் பிரபஞ்சத்தில் கலப்பது போல எதோ ரகசியம் பேசுவது போல கற்பனை செய்கிறான். மேலும் காலமே மாபெரும் பிரபஞ்ச விருட்சம் மாதிரிதான் அதில் எவற்றில் நடமாடும் நிழல்கள் நாம்? என்று கேள்வி எழுப்புகிறான். ஆனால் அவனால் ஒரு பெண்ணின் மனதை புரிந்து கொள்ள முடியவில்லை .  கோவிலில் என்றோ சந்தித்து காதலித்த பெண்ணை மறுபடியும் பார்த்த கணம் அவள் பார்வை என்ன உணர்த்தியது? அவள் ஏன் கண்ணீர் வடித்தாள்? என்று குழம்புகிறான். மாபெரும் பிரபஞ்ச ரகசியம் போல பெண்ணின் மனமும் ரகசியம் தான் போல. உண்மையில் இந்த கதையில் வரும் அவன் என்ற ஒரு கதாபாத்திரம் உண்மைதானா அவனுக்கு எல்லாம் தெரியும் என்பது உண்மையா அல்லது அவனே கற்பனை தானா? என்ற தேடல் கொண்ட கேள்விகளோடே கதை முடிகிறது.  காலம் என்பதே ஒரு கற்பனைதான். அதில் இந்த நினைவுகளும் நிஜமும் கூட அப்படித்தான். சில நேரங்களில் நாமே உருவாக்கிக் கொள்கிற அர்த்தம் கூட கற்பனைதான். பெண் மீது ஆண் கொள்ளும் காதலை தத்துவார்த்த கேள்வியோடு கண் முன்னே நிறுத்துகிறார். பெண்ணின் ரகசியம் போலவே காதலும் புரிந்து கொள்ள முடியாத புதிராகவே இருக்கிறது. அதான் அவர் எவற்றில் நடமாடும் நிழல்கள் நாம்? என்று சொல்கிறார். உண்மையில் எவற்றில் நடமாடும் நிழல்கள் நாம்?


எழுத்தாளர் மௌனியின் இந்த கதை ஓரே முறை வாசித்ததும் புரியவில்லை. யூடுபில் மௌனியைப் பற்றி எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் ஆற்றிய இலக்கிய உரை வாசிப்பு நுணுக்கங்களை சொல்லித் தந்தது. அப்படி பார்க்கையில் கதையை அல்ல கதை நடக்கும் போது நம் மனம் எப்படி இயங்குகிறது அதன் அடிப்படையில் எப்படி கருத்தாக உருவாகிறது என்பதை உணர்ச்சியை பகுப்பாய்வு செய்து சிறுகதையாக எழுதியிருக்கிறார். அழியா சுடர் கதையிலும் காற்றில் சிலிர்க்கும் மரம் அசைகையில் அது பிரபஞ்சத்தோடு என்ன உரையாடுகிறது என்று தத்துவார்த்த கேள்வி எழுகிறது. மார்க்கசிய பார்வையில் புலன்கள் வழியாக நாம் கண்டடையும் உண்மைகளை போலவே இருக்கிறது. தமிழில் இது போன்ற மெய்யியல் அனுபவங்களை கொண்டு எழுதப்பட்ட சிறப்பான சிறுகதை இது. காதலைப் பற்றி அல்ல நம்மை கதைக்குள் காதலிக்க வைக்கிறார்.
மௌனியின் இந்த ஒரு சிறுகதையின் வழியாக பல தத்துவார்த்த விவாதங்களை உருவாக்க முடியும் என்பது வியப்பாக இருக்கிறது. மௌனியின் கதைகள் வியப்பாகவும் ஆச்சர்யமாகவும் உள்ளது. 

Comments

Popular posts from this blog

செகண்ட் ஷோ நினைவுகள்

சுருளி நினைவுகள் பகுதி -1

சுருளி நினைவுகள் பகுதி -2 : ( கடவுள் எனும் நண்பன் )