நல்ல பேய் ....!
நல்ல பேயைப் பற்றி கேள்விபட்டிருக்கிறீர்களா? புதுமைபித்தன் கதையில் காஞ்சனை என்கிற பேய் எந்த தீங்கும் செய்யாமல் அமைதியாக வந்துவிட்டு போகிறது. ஆனால் திகில் பயம் எல்லாம் அவரே மனதிற்குள் உண்டாக்கிக் கொள்கிறார். படித்த முற்போக்கு சிந்தனை கொண்ட எழுத்தாளர் என்றாலும் பேய் பயம் வந்தால் கடவுள் மேல் நம்பிக்கை தானாக வந்துவிடுகிறது என்று கதை மூலம் தெரிந்து கொள்கிறோம். பயம், துன்பம், நெருக்கடியான பிரச்சனைகளின் போது அல்லது இப்படியான அமானுஸ்யத்தை ஏற்படுத்தும் திகில் அனுபவங்களின் போது நாம் மனதை மூடநம்பிக்கைகளின் மேல் வைக்காமல் மனதை உறுதியாக நம்பிக்கையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பது மிக முக்கியம். மூட நம்பிக்கை என்பது நாம் தெரிந்து கொள்ளாத அறிய முடியாத ஒன்றை கண்முடித்தானமாக நம்புவது. நம்பிக்கை என்பது நாம் முழுமையாக புரிந்து கொண்ட விஷயத்தின் மீது நாம் உருவாக்கிக் கொள்ளும் கற்பனை கருத்தியல்.
பயத்திற்கும் மனதிற்கும் என்ன தொடர்பு? மனிதன் ஏன் திகில் அடைகிறான்? உண்மையில் பேய் பிசாசு இவற்றை பார்த்தவுடன் ஏன் பயப்படுகிறோம்? என்று யோசித்தால் அனைத்தும் நாம் மனதின் வெளி வடிவங்கள் என்ற உண்மை புரியும் தற்செயலாக நடக்கும் மனித அறிதல் மற்றும் புரிதலுக்கு அப்பாற்பட்டு நடக்கும் சில விஷயங்கள் மீது மனிதன் திகைப்போ அச்சமோ அடைகிறான். அந்த தருணத்தில் மனதின் உறுதியையும் நன்மையின் மீதான நம்பிக்கையை நாம் ஏன் இழக்கிறோம் என்று சிந்திக்க வேண்டும். காஞ்சனை சிறுகதையில் கதை எழுதும் எழுத்தாளர் தான் வாசிக்கும் கதையில் வரும் காஞ்சனை என்கிற பெண் நிஜத்தில் பேயாக அவர் வீட்டிற்கு வருவதாக நம்புகிறார். அவள் காஞ்சனை தான் என்று மனதில் ஒரு திகில் பரவுகிறது. மர்மமான விஷயங்கள் மூட நம்பிக்கைகள் போன்றவை அறிஞர்கள், எழுத்தாளர்கள் பகுத்தறிவுவாதிகள் இது போன்ற மூட நம்பிக்கைகளற்று இருப்பார்கள் என்று நாம் நினைத்தது தவறு என்பது புரியும். பிச்சைக்காரியாக அவர் வீட்டிற்கு வரும் காஞ்சனை ஒரு இரவில் குடுகுடுப்புக் காரன் வந்து சாம்பல் கொடுத்து பூசி விடுமாறு சொல்லும் போது அந்த எழுத்தாளர் அப்படியே செய்கிறார். மறுநாள் காலையில் அவர் மனைவி ஆண்களே இப்படித்தான் முற்போக்குக் கருத்துக்களை பேசுவார்கள் ஆனால் இப்படி மூட நம்பிக்கையும் இருக்கும் என்று கேலியாக கோபித்துக் கொள்கிறாள். Illustion எனப்படும் மனப் பிரம்மை அல்லது மனதின் உருவாக்கம்தான் இந்த திகில் மற்றும் பயத்திற்கு காரணம். பயம் என்பது வரவிருக்கும் துக்கத்தின் அறிகுறி என்று சிலர் நம்புகிறார்கள்.
நேர்மறை எண்ணங்களை போலவே எதிர்மறை எண்ணங்களுக்கும் மனதை ஆக்கிரமிப்பு செய்யும் திறன் உள்ளது. நெகடிவ் எனர்ஜி என்று அறிவியல் சொல்கிறது. படித்த அறிஞர்களிடையே கூட பேய் பயம் உள்ளது. பயத்திற்கும் படிப்பிற்கும் சம்பந்தம் உள்ளதா என்று தோன்றுகிறது. இந்த கதையில் கூட அந்த எழுத்தாளர் படிக்கும் கதையில் இருந்து ஒரு கதாபாத்திரம் பேயாக வருவதாக அவர் பொருத்திப் பார்ப்பார். பேய் பயமும் பேய் பற்றிய கட்டுக் கதைகளும் கேட்ட நினைவுகள் வருகின்றன. பேயை விடவும் அந்த கதையும் அந்த சூழலும்தான் நம்மை அச்சமூட்டுவதாக இருக்கிறது. மேலும் பயம் இருந்தாலும் பேய் மீதான ஈர்ப்பும் கடவுள் இருக்கிறரா என்ற தேடலைப் போலவே பேய் பற்றிய ஆராய்ச்சியும் இருக்கிறது. பெரும்பாலும் பேய்கள் பழிவாங்குவதற்காக மறு ஜென்மம் எடுத்து வருவதாக திரைப்படங்களில் பார்த்திருக்கிறேன். மிஸ்கின் இயக்கிய பிசாசு திரைப்படத்தில் நன்மை செய்யும் பேய் வருவது வித்தியாசமாக இருக்கும். உண்மையில் அப்படியொரு பேய் இருந்தால் நல்லதுதான். இந்தக் கதையில் கூட எதற்காக பேய் வருகிறது என்று சொல்லப்பட வில்லை. மேலும் அந்த பேய் எந்த கெட்டதும் செய்யவும் இல்லை. ஒரு திகில் உணர்வு பற்றித்தான் நாம் வாசித்து தெரிந்து கொள்கிறோம். எழுத்தாளர்கள் பேய்கள் பற்றியும் சிந்தித்து விவாதித்துக் கொண்டும் இருப்பார்ளா என்றும் ஆச்சரியமாக இருக்கிறது. இருளா? ஒளியா என்றால், நல்லதா? கேட்டதா என்றால், நம்பிக்கையா? மூட நம்பிக்கையா என்றால் இரண்டும் வாழ்வில் உள்ளது. நாம் எதை தேர்ந்தெடுக்கப் போகிறோம் என்பது தான் முக்கியம்.
Comments
Post a Comment