மௌனியின் கானம்....!
பிரபஞ்ச கானம் - மௌனி
நினைவுகளின் வழியே வாழும் மனிதர்கள்தான் அதிகம். நம்மை கடந்து போன பாதி பேர் நினைவுகளில் வாழுகிறவர்கள்தான். தேவையே இல்லையென்றாலும் முக்கியமே இல்லை என்றாலும் சில பேரின் நினைவுகள் நம் மனதில் உறைந்து போயிருக்கிறது. நம் நினைத்தாலும் அதை கடந்து போக முடியாது. சிறு வயதில் இந்த மாதிரி நினைவுகளில் வாழும் மனிதர்களைப் பார்த்து பயந்து போயிருக்கிறேன். ஏனெனில் என்னால் பிரிவை தாங்கவே முடியாது என்று எண்ணம் அந்த நினைவுகளையும் தாங்கிக் கொள்ள முடியாமல் செய்து விடுகிறது. பிரிவின் வலி ஒருமுறை மட்டுமே உண்டாவதில்லை. ஒவ்வொரு முறையும் நினைத்துப் பார்க்கும் போதும் அதே வலிதான் உண்டாகிறது. ஆனால் அது பழகியும் விடுகிறது.
நினைவில் வாழும் மனிதர்களின் துயரம் நமக்கானதாக மாறிவிடும். இந்தக் கதையில் கூட அவன் அவளின் மரணத்தை கண்டு துக்கமடைகிறான். இசையின் கானமாக அவள் இருந்தும் அந்த இசையால் அவள் மரணிக்க போகிறாள் என்பது எப்படி புரிந்து கொள்வது?
அவளுக்குள் பிரபஞ்சத்தின் கானம் இசைந்து கொண்டிருப்பதாக அவன் நினைக்கிறான். ஆனால் இதயம் பலவீனம் காரணமாக அவள் இனிமேல் பாடக் கூடாது என்று மருத்துவர் கூறுகிறார். அவளை பெண் பார்க்க வரும் மாப்பிளை வீட்டார் அவளை பாட்டு பாட சொல்லிக் கேட்கையில் மருத்துவர் நிபந்தனை விதித்ததும் மறந்து அவள் மெய் மறந்து பாடுகிறாள். இறுதியில் அவள் இந்த உலகை விட்டு மறைந்து விடுகிறாள். அவளோடு பிரபஞ்ச கானமாக ஒலித்த இசையும் மறைந்து போனதாக அவன் நினைக்கிறான். மூன்று ஆண்டுகளுக்கு பின் இந்த சம்பவத்தை நினைவு கூறும் அவன் இன்னும் அந்த துயரத்தின் பிடியில் இருந்து விடுபட முடியவில்லை என்று மௌனி சொல்கிறார். இன்னும் மௌனியின் கதை மனிதர்கள் ஏன் அதிகம் பேசுவதில்லை? பிரபஞ்ச இருப்பின் வழியாகவே அன்பையும் விருப்பத்தையும் வெளிப்படுத்துகிறார்கள். இந்த கதையிலும் கூட அவனும் அவளும் பேசிக் கொள்வதேயில்லை. அவர்கள் இயற்கையோடு பேசுகின்றனர். வாழ்வின் இன்மையோடு பேசுகிறார்கள். சூன்யத்தோடு வாழுகிறார்கள்.
மலைகள் பேசுவதில்லை. ஆனால் அதன் இருப்பு வலிமையானது. மலையின் மொழியை மௌனத்தின் வழியேதான் புரிந்து கொள்ள முடியும். சாதாரண கதைகளில் கூறப்பட்டு வந்த மரபான மனிதர்கள் மாதிரி இல்லாமல் அசாதாரணமான உளவியலில் வாழும் மனிதர்கள். காலம், சூன்யம், மௌன வெளிப்பாடு தான் அவர்கள் வாழ்க்கையின் போக்காக இருந்துள்ளது. ஆர்ப்பரிக்கும் கடல் அலைகளை பார்த்து ரசித்தாலும் கடலின் ஆழம் கண்ணுக்கு தெரிவதில்லை. அதன் ஆழம் இன்றைக்குமே ரகசியமாக எதையோ உணர்த்தியபடியே உள்ளது. மௌனி எழுதிய கதைகள் வாழ்வின் தர்க்கதிற்க்கும் அப்பாற்பட்ட அர்த்தத்தில் சுழன்று கொண்டிருகின்றன. கதையின் வழியே உணர்ச்சி நிலைக்கும் உட்படுகிறோம். ஆழமான தேடல் முடியும் தீர்க்க தரிசனத்தையும் அடைகிறோம். கடலின் ஒரு துளியும் மொத்த கடலும் ஓரே சுவைதான். கடலே நீர்த்துளியாகவும் இருக்கிறது. மௌனியின் கதைகள் ஒரு நினைவு குறித்து எழுதப்பட்டாலும் மொத்த வாழ்க்கையின் முழு பரிமாணத்தையும் காட்டுவதாக உள்ளது.
Comments
Post a Comment