அத்தை சொன்ன கதை....!



காட்டிற்கு இறை தேடி செல்லும் மான் கூட்டத்திலிருந்து ஒரு இளம் மான் வழி தப்பி சென்றுவிடுகிறது . அந்த மான் இரவில் காட்டில் தனியே சுற்றித் திரிகிறது. தனிமை பயத்தில் கத்தி அழுகிறது. தனியே மிருகங்களுக்கிடையே மாட்டிக் கொண்ட மான் படும் அவஸ்த்தையை அத்தை கதையாக சொல்கிறாள். இரவு பௌணர்மி வெளியில் நிலா வெளிச்சத்தில் காட்டின் வசீகிர அழகை மான் பார்த்து ரசிக்கிறது. இரவில் காட்டினுள் பாய்ந்து செல்லும் நதி, அருவி அனைத்தையும் பார்த்து பிரமப்பில் நிற்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக காட்டின் அழகை பார்த்து வியக்கும் போது குட்டி மானுக்கு பயம் விலகுகிறது. தனியே காட்டில் மான் தைரியமாக வாழ முயற்சி செய்கிறது. என்று அத்தை அந்த கதை சொல்கிறாள்.

அம்பையின் இந்த சிறுகதை இரண்டு கதைகளை உள்ளடக்கியது. ஒன்று தங்கம் அத்தையையும் அவள் வாழ்க்கையும் உளவியலையும் பேசக்கூடியது. இன்னொன்று அத்தை குழந்தைகளுக்கு சொன்ன குட்டி மானின் கதை. சிறுவயதில் பள்ளி நாட்களில் ஒவ்வொரு வீட்டிலும் இது போன்று அத்தை கதைகள் சொல்லக்கூடியவராக இருப்பார். நானும் சிறுவயதில் பக்கத்து வீட்டுக்கு பாட்டி, தாத்தா சொன்ன கதைகளை கேட்டிருக்கிறேன். இரவுகளில் அனைவரும் வீட்டின் முன்பு ஒன்று கூடி நிலா வெளிச்சத்தில் கதை பேசிய நாட்கள் நினைவுக்கு வருகிறது. உண்மையிலேயே அத்தையைப் பற்றிய கதையும் அத்தை சொன்ன கதையும் ஒன்றுதான். அதில் காட்டில் தனியே விடபடுகிற மானைப் போல தான் அத்தை வாழ்வில் தனிமையாகவே இருக்கிறாள். காட்டில் இத்தனை உயிர்கள் இருந்தாலும் மான் தனிமையாகவே அலைவதைப் போலவே அத்தையும் துயரத்தில் வாழுகிறாள். ஆனால் அதை தனக்குள் வைத்துக் கொண்டு வெளியே குழந்தைகளுக்கு கதை சொல்லி உற்சாகபடுத்துகிறாள். தங்கமத்தை பூப்பெய்தவில்லை என்பதும் அவளால் குழந்தை பெற முடியாது என்ற ஓரே காரணம் தான். யாருக்கும் உபயோகப் படவில்லை என்றால் அனைவரும் நம்மை வெறுத்து ஒதுக்கி விடுகிறார்கள். குழந்தைகள் மட்டுமே அனைவருடனும் அன்பாகயிருக்கிறார்கள். அதனாலேயே தங்கமத்தைக்கு குழந்தைகளை மட்டுமே பிடிக்கிறது. தன்னை வெறுத்து ஒதுக்கிய சமூகத்தைப் பற்றி கவலை இருந்தாலும் தன்னைச் சுற்றியுள்ள குழந்தைகளிடம் தன்னை கரைத்துக் கொள்கிறாள். 

கதைக்குள் கதையாக செல்கிறது சிறுகதை. நோயால் பாதிக்கப் பட்ட சகோதரியை பத்திரமாக பராமரிக்கிறாள் தங்கமத்தை. அந்த அக்கா தங்கமத்தைக்கு குழந்தை பிறக்க வில்லையே என்று வருத்தப்படும் வரிகளில் அத்தை சிரித்து கொண்டே உன்னோட குழந்தைகளும் எனக்கு பிள்ளைங்கதானே என்று சொல்வதும். வெள்ளி நிறத்தில் அவள் தலை முடி வெளுத்து போனதும் அவள் வாழ்வில் எந்த சுகமும் கிடைக்காமல் போனாலும் அன்புக்காகவே வாழ்ந்திருக்கிறாள் என்பது வியப்புப்பாக இருக்கிறது.
எந்த சந்தோஷமும் கிடைக்காமல் குடும்பத்திற்காகவும் குழந்தைகளுக்காகவும் மட்டுமே எத்தனை பெண்கள் வாழ்ந்து மறைந்துள்ளார்கள். குறிப்பாக உடல் ரீதியாக குறைவு உள்ள பெண்களை ஏன் இந்த சமூகம் கண்டுகொள்வதே இல்லை.? குழந்தை பெற்றுக்கொள்ளும் இயந்திரமாகவும் வீட்டு வேலை செய்யவும் உடற் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளவும் மட்டுமே சமூகம் வைத்திருக்கும் அவல நிலையில் தங்கம் அத்தை போன்ற பெண்கள் பக்கத்து வீட்டு குழந்தைகள் இன்னொருவருடைய குழந்தைகளை தான் பிள்ளையாக நினைத்து வளர்ப்பதும் அன்பு காட்டுவதையும் தவிர வேறேன்னதான் செய்வார்கள்?அவர்களுக்கு வேறென்ன நிம்மதிஇருக்கிறது? உடற் குறை என்பது இயற்கையானது அல்லது அதற்கான மருத்துவம் உள்ளது அதை விட்டுவிட்டு குடும்பத்தை விட்டு ஒதுக்கி வைப்பது மூடத்தனமான செயல். ஆனால் அதைஎல்லாமல் பொருட்படுத்தாமல் பிறர் அன்பு காட்டுவதே போதும் என்று வாழும் தங்கம் அத்தை போன்ற பெண்கள் கதை படிக்கிற நமக்கு நம்பிக்கையோடு வாழும் தைரியத்தை சொல்லித்தருகிறார்கள். 
 யாராலும் கண்டுகொள்ளப் படாத உறவுகளை இலக்கியத்தில் எழுதிய அம்பை மிக முக்கியமான எழுத்தாளர். அவருக்கு அன்பும் நன்றியும்.

Comments

Popular posts from this blog

செகண்ட் ஷோ நினைவுகள்

சுருளி நினைவுகள் பகுதி -1

சுருளி நினைவுகள் பகுதி -2 : ( கடவுள் எனும் நண்பன் )