கண்ணீர் வடித்த தண்ணீர்!

ரீதி - பூமணி 

உணவுக்காக பறவைகள் விலங்குகள் அலைந்து திரிவதை போலவே மனிதனும் அலைந்து அல்லல் பட்டிருக்கிறான். தமிழ் இலக்கியம் உணவு பஞ்சம், தண்ணீர் பஞ்சம் வறுமையால் உணவுக்காக மனிதன் துயர மடையும் கதையை பல ஆண்டுகளாக தொடர்ந்து சொல்லிக்கொண்ட வந்தருக்கிறது . ஆனாலும் அந்த துயரக் கதை அனைரின் மனதிலும் எத்தனை தடவை சொன்னாலும் ஆறாத வடுதான்.
 பூமணி எழுதிய ரீதி என்கிற கதையும் ஆடு மேய்க்கும் இரண்டு மனிதர்கள் காட்டிற்கு பசியோடு உணவும் தண்ணீரும் தேடும் கதையைப் பற்றி காட்சிபடுத்துகிறது. கரிசல் மண்ணின் வெக்கையை கோவில்பட்டி மற்றும் கயத்தார் பகுதியின் நிலப்பரப்பை அப்படியே காட்சி படுத்துகிறது. தண்ணீர் பற்றாக்குறை காரணமாக சைக்கிளில் பல கிலோ மீட்டர் சென்று ஊருக்கு எல்லையில் உள்ள அடிபம்பில் தண்ணீர் எடுத்து வந்த அனுபவம் நன்றாக நினைவில் உள்ளது. பள்ளி நாட்களில் கூட பஞ்சாயத்து போர்டில் இருந்து பத்து நாட்களுக்கு ஒரு முறை தான் குடி தண்ணீர் திறந்து விடப்படும் மற்ற படி தெருவிற்கு ஒரு பஞ்சாயத்து குழாயில் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை குளிக்க இதர பயன்பாட்டிற்கான தண்ணீரை பிடித்துக்கொள்ளவேண்டும். தண்ணீருக்காக இந்த அடி குழாயில் நடக்கும் சண்டையும் பெண்கள் பேசிக் கொள்ளும் வசைச் சொற்களும் இன்றும் மறக்க முடியாத ஒன்று. சமீபத்தில் வெளியான கூழாங்கல் திரைப்படத்தில் இறுதி காட்சியில் ஊற்றுத் தண்ணீருக்காக பெண்கள் காத்துக் கிடக்கும் காட்சி இடம் பெற்றிருக்கும். பக்கத்து ஊருக்கு மினி பஸ் பிடித்து சென்று நான்கு குடத்தில் தண்ணீர் பிடித்து செல்வதும் பஸ் போகிற குலுங்களில் அதன் விளிம்பில் நீர் திவலைகள் துள்ளுவதையும் பார்த்திருக்கிறேன். 


ரீதி சிறுகதையில் வீட்டில் கஞ்சி இல்லை இல்லை என்று ஆடு மேய்க்கும் இரண்டு பேர் உரையாடும் காட்சி வருகிறது. அவர்களின் ஒருநாள் எப்படி கழிகிறது என்று பூமணி சிறப்பாக எழுதியிருப்பார். பசியில் பனை மரத்தில் ஏறி அணிலை பிடித்து தீயில் சுட்டு தின்கிறார்கள். ஆடுகளை மேயவிட்டுவிட்டு கிணற்றுக்குள் இறங்கி தண்ணீர் குடித்து விட்டு வருகிறார்கள். அந்த கிணற்றில் சிலர் துணி துவைத்து விட்டு போன கலங்கல் தண்ணீர் தான் கிடக்கிறது இருந்தாலும் அதை குடிக்கிறார்கள். தாகத்தில் சோப்பு கலந்த தண்ணீரை குடிப்பது வேதனையான விஷயம். நடுகாட்டில் இவர்கள் ஆடுகளை விட்டுவிட்டு தண்ணீருக்காக அலையும் கதைதான். அவர்கள் இல்லாத நேரத்தில் ஆடுகள் கட்டுப்பாடின்றி மிளகாய் விளை நிலத்தில் நுழைந்து நாசம் செய்து விடுவதை வயல் நிலத்துக் காரன் பார்த்து இவர்களை அசிங்கமாக வசைச் சொற்களை கொண்டு திட்டி விரட்டுகிறான். ஆடு மேய்க்கும் அவர்களின் சாதியை சொல்லி திட்டும் அவலமும் சொல்லப்படுகிறது. இந்தியாவில்
தமிழ் சமூகத்தில் இலக்கியத்திலும் சினிமாவிலும் ஏன் சில தன்னார்வ சமூக விழிப்புணர்வு இயக்கங்களும் மிக குறைந்த அளவே தண்ணீர் பற்றாக்குறையைப் பற்றி பேசியிருக்கின்றன . 



இன்றைக்கு முப்பது ரூபாய் கொடுத்தால் வடி கட்டிய தண்ணீர் கிடைக்கிறது. பல தொழில்நுட்பங்கள் தண்ணீரை வடி கட்டி நல்ல தண்ணீர் தயாரிக்கப் பட்டு பயன்பாட்டுக்கு வருகிறது. ஆனாலும் இன்றும் சில கிராமப் புரங்களில் அடிப்படை வசதிகள் இல்லாமல் இருப்பதும் குடி நீர் பிரச்சனை இருப்பதும் நிஜம். மேலும் சில தொழில் நகரங்களில் கழிவுகளை நதியில் கொட்டி இயற்கையை நிலத்தை மாசுப்படுத்துகிறார்கள். ஒருமுறை ஒரு கிராமத்தில் பொது குழாயில் வரும் குடி தண்ணீர் சிவப்பு சாயம் கலந்து வருவதாக புகார் எழுந்தது. நகரங்களில் கூட தண்ணீர் மாசுபாடு அதிகரித்தபடி உள்ளது. இன்னும் சிலர் தண்ணீரை தேவையே இல்லாமல் வீணடிக்கிறார்கள். 

தண்ணீரும் உணவும் எல்லா கால கட்டத்திலும்மனித வாழ்வில் முக்கியம். விவசாயத்தையும் தண்ணீரை வழங்கும் நதி குளம், கண்மாய் போன்றவற்றை மராமத்து பணிகள் செய்து வளப்படுத்தவதும் என்றைக்கும் இன்றியமையாத பணி. நமக்கு முன்னர் வாழ்ந்த மனிதர்கள் 
பஞ்சத்தால் தண்ணீர் இல்லாமல் அலைந்து திரிந்ததை எடுத்து சொல்வதன் வழியாக தண்ணீர் குறித்த அவசியத்தை பூமணி சிறப்பாக காட்சிபடுத்தியுள்ளார். மிக எளிய கதையில் பல நூற்றாண்டுகள் மனிதன் அடைந்த தண்ணீர் பஞ்ச துயரத்தை காட்சிபடுத்திய கதை இது. 


Comments

Popular posts from this blog

செகண்ட் ஷோ நினைவுகள்

சுருளி நினைவுகள் பகுதி -1

சுருளி நினைவுகள் பகுதி -2 : ( கடவுள் எனும் நண்பன் )