மரி என்கிற ஆட்டுக்குட்டி - பிரபஞ்சன்
பள்ளி வயதில் நாம் கடந்து வந்த பெண்களை இந்த சிறுகதை வழியாக திரும்பி பார்க்கிறோம். வகுப்பில் எல்லாரும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. சிலர் புரிந்து கொள்ள முடியாமல் வித்தியாசமாக நடந்து கொள்கிறார்கள். அவர்கள் நடத்தயை புரிந்து கொள்வதை விட்டு விமர்சனம் செய்வதும் பரிகசிக்க படுவதும் தான் அதிகம் நடக்கிறது. அதுவும் கூட அனைத்திற்கும் முன் மாதிரியாக விளங்கும் பள்ளி ஆசிரியர்களே மாணவர்களை புரிந்து கொள்ளாமல் நல் வழி படுத்தாமல் அசிங்கமாக நடத்துவதும் வாயிக்கு வந்த படி திட்டுவதும் பொறுப்பற்ற செயல்.
நல்ல ஆசிரியர் மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பது, ஒழுக்கத்தை போதிப்பதை விடவும் அடிப்படையில் அக்கறையோடு நடந்து கொள்வதை தான் இந்த கதை வலியுறுத்துகிறது.
தலைமை ஆசிரியர் தமிழாசிரியர் ஒருவரிடம் அவர் வகுப்பில் மரி என்கிற பெண் ஒழுங்காக வகுப்பு வராமல் இருப்பதாக புகார் தெரிவிக்கிறார். மேலும் அவள் வகுப்பில் இல்லாமல் வெளியே மைதானத்தில் சுற்றவதும் அதை கண்டித்த ஆசிரியர்களிடம் திமிர் தனமாக பேசுவதாகவும் சொல்கிறாள். விரும்பிய படி ஆடை அணிந்து கொள்வதும், சுதந்திரமாக செயல் படுவதும் ஏன் ஒழுங்கீனமாக சித்தரிக்கப்படுகிறது. அதுவும் ஒரு பெண் அவள் மனதிற்கு பிடித்ததை செய்தாலோ தைரியமாக பேசினாலோ அவளை விமர்சனம் செய்வதும் தவறாக சித்திரிக்கும் போக்கு இன்றும் உள்ளதை பிரபஞ்சன் அழகாக சிறிய கதையில் விளக்குகிறார்.
ஆசிரியர்கள் மாணவர்களின் குடும்பம் பின்னணி, அவர்கள் உளவியல், குடும்பம் பொருளாதார நிலை, உடல்நலம் அனைத்திலும் கவனம் செலுத்த வேண்டும். அடிப்படையில் முதலில் அக்கறை மற்றும் அன்போடு நடந்து கொள்ள வேண்டும். எனக்கென்ன என்று அலட்சியமாக இருக்கும் போக்கு மாணவர்களினின் எதிர்காலத்தை சீரழிக்கும் விதமாக அமைந்து விடும்.
இந்த கதையில் மரிக்கு தேவைபடுவதெல்லாம் அவளுக்கு யாரும் இல்லை அம்மா அப்பா உறவுகள் யாரும் இல்லாமல் தனியே வாழ்கிறாள். திருமணமாகி பிரிந்து வேறு கல்யாணம் பண்ணிக் கொண்டு வாழும் பெற்றோர்களால் குழந்தைகள் தான் திண்டாடுகிறார்கள் என்று தெரிந்து கொள்கிறோம். கதையில் இறுதிக் கட்டத்தில் என்ன கண்டிக்க யாரும் இல்ல, என்ன அக்கறையா திருத்த யாரும் இல்ல அதனாலதான் சார் இப்படி நடந்துகிக்றேன் என்று மரி சொல்வது மனதை குடைய ஆரம்பிகிறது. மேலும் இனிமேல் தான் அக்கறையாக நடந்து கொள்வதாக ஆசிரியர் சொன்னதும் அவள் விசும்பி அழ ஆரம்பித்தாள் என்று கதை முடியும். அங்கேதான் கதை வாசிப்பவர்களின் மனதில் ஆயிரம் கேள்விகளை எழுப்புகிறார் எழுத்தாளர்.
மரி ஒரு ஆட்டுக் குட்டியை போலவே துள்ளிக் குதிக்கிறாள். வெளியில் பார்ப்பவர்கள் அப்படித்தான் நினைப்பார்கள். ஆனால் அவளுக்கு தேவையானதெல்லாம் அன்பும் அரவணைப்பும் தான்.
சமூகத்தில் தனித்து தைரியமாக வாழும் பெண்கள் மீது வைக்கப்படும் விமர்சனமும் ஆணாதிக்க போக்கும் பள்ளியிலிருந்தே ஆரம்பிக்கிறது என்பது வேதனையான விஷயம். ஆனால் அதையும் தாண்டி சில ஆசிரியர்கள் வகுப்பறையை தாண்டி நம் மீது அக்கறையும் அன்பாகவும் கண்டிப்பாகவும் இருப்பது கொஞ்சம் ஆறுதலான விஷயம்.
Comments
Post a Comment