வெள்ளைப் பூக்கள் மலரவே...!

ஈழப் போரின் ஆயுதம் தாங்கிய போராட்ட இயக்கங்களின் கதையையும் நினைவுகளையும் பகிர்ந்து கொள்ளும் நாவல். உலகம் முழுவதும் ஈழத் தமிழர்கள் அலைவுறும் வாழ்வின் அவலத்தை நம் தெரிந்து கொள்வதின் வழியாக வரலாற்றின் ஒரு கருப்பு பக்கத்தை வாசிக்கிறோம் என்று சொல்லலாம். எழுத்தாளர் ஷோபா சக்தியின் சிறந்த படைப்பு. போர், இன வெறியால் அப்பாவி மக்கள் ஏன் சாக வேண்டும் என்கிற கேள்வி உங்களை தொந்தரவு செய்யாமல் விடாது?

ஈழப் போரின் யுத்தத்தின் பல அப்பாவி தமிழர்கள் கொல்லப் பட்டது முதல் இந்த புத்தகத்தை வாசிப்பது வரை நம் மனதில் உண்டாகும் வலிதான் நம்மை போரின் மீதான அவநம்பிக்கையை காட்டுகிறது. இனவெறி, நில ஆக்கிரமிப்பு நடவடிக்கையால் இன்னொரு சிறுபான்மை இனத்தை அழிப்பது என்பது எந்த வகையில் நியாயம்? 
உலகம் முழுவதும் அகதிகளின் வாழ்க்கை நிச்சயமற்றதாக உள்ளது. எறும்புகளை போலவே இருப்பிடம், உணவு, வாழ்வை தேடி அலைகின்றனர்.
அகதிகள் என்ற காரணத்தாலேயே அவர்கள் புறக்கணிப்படுவதும், அவமதிக்க படுவதும் கொல்லப் படுவதும் மனித வர்க்கத்தின் கோர முகத்தைத்தான் காட்டுகிறது. 

போராடும் இரு தரப்புகளுக்கு இடையே எதற்காக போராடுகிறோம் என்ற தத்துவ அறிவோ அல்லது நோக்கமோ எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் ஏன் போரினால் பாதிக்கப் படபோவது மக்கள் என்ற சிந்தனை தோன்ற வில்லை. அனைத்தையும் அழித்து விட்டு யாருக்காக இவர்கள் நாட்டையும் நிலத்தையும் உண்டாக்கப் போகிறார்கள் என்ற அடிப்படை கேள்வி எழுகிறது?

ஆதிக்க மனநிலை என்பதுதான் ஒடுக்குமுறை மற்றும் வன்முறை வெறியாட்டத்தின் மூலகாரணம். அதிகாரம் என்பது என்ன, பெரும்பான்மை இனமாக இருக்கிறோம் என்பது வெறும் பெருமையோ வெறியோ அல்ல அது சிறுபான்மை இனத்தை பாதுகாப்பதும் அவர்கள் பக்கம் நிற்பதும் தான். ஆனால் பேரினவாத போக்கே சிறுபான்மை மக்களை அழிதொழிப்பது
இயற்கைக்கு மாறான செயல். இதனால் மனித வளர்ச்சியே தடை படும். 

போர் எந்த பிரச்சனைக்கும் தீர்வை தராது வன்முறை எந்த வழியிலும் நல்ல செயல் ஆகாது என்று நம் இது வரை புரிந்து கொள்ளாமல் இல்லை. ஆனாலும் இந்த துயரங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது . ஆயுதம் 
தாங்கிய போராளிகளும் கூட தன் பக்கம் இருக்கும் மனிதர்களை பாதுகாக்கத்தான் போராடுகிறார்கள். ஆனால் அங்கேயும் மக்கள் தான் பலியிடப் படுகிறார்கள். 
போராடமல் வாழ முடியுமா என்ற கேள்விக்கு பதில் சொல்வது எப்படி? 
சுதந்திர போராட்டத்தின் போது பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக காந்தி தொடர்ந்து போராடிக் கொண்டே இருந்தார். ஒரே வாசகத்தை மட்டுமே காந்தி வலியுறுத்திக் கொண்டே இருந்தார். அது என்னவென்றால், அநீதியை எதிர்க்க நான் ஒரு போது தயங்கியதில்லை. ஆனால் எந்த வழியில் போராடுகிறேன் என்பது முக்கியமானது என்றுதான் சொன்னார். உண்மைதான் காந்தி அகிம்சை வழியில் போராடினார். வன்முறையும் ஆயுதங்கள் மூலம் போராடுவதை விட எதிரிகளின் மனசாட்சியை தொடுவதும் அவர்களை சிந்திக்க வைத்ததும்தான் காந்தியின் வலிமை. ஆனால் இலங்கைப் போரில் நடந்தது மாபெரும் இன அழிப்பு நடவடிக்கை. அந்த சூழலில் நாம் அமைதி வழி போராட்டம் நடத்தினால் எப்படி சாத்தியாமாகும்.? எதிரிக்கு குரல் கொடுக்கவும் உரிமைகளை மீட்டெடுத்து போராட அனுமதி தராமல் லட்சக் கணக்கான மக்களை அழிப்பதை மட்டுமே செய்யும் அராஜக அரசை அமைதி வழியில் எப்படி எதிர் கொள்ள முடியும்? ஆயுதம் தாங்கிய போராட்டம் ஆயுதங்கள் மேல் உள்ள மோகம் இல்லை. மக்களை பாதுகாக்க ஆயுதத்தை பயன்படுத்திய சூழல் அமைந்து விட்டது. 

ஆனால் இன்றைக்கு ஆயுத போர் அதன் பலத்தை இழக்க ஆரம்பித்திருக்கிறது. உலக நாடுகள் போர் குறித்த ஆலோசனை நடத்துகின்றன . உலக அமைதிக்காக அனைவரும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம். கல்வி, இலக்கியம், அறிவியல், தத்துவம் தொழில்நுட்பம், இயற்கை, பொருளாதார உற்பத்தி மருத்துவம், விண்வெளி ஆராய்ச்சிகள் மனித குலம் 
இதுநாள் வரை வாழ்ந்து வந்த வாழ்க்கையில் பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. நடைமுறைக்கு ஏற்றவாறு கல்வியால் நாம் முன்னேறி ஒற்றுமையோடு வாழ முயற்சி செய்ய வேண்டும். அதே நேரத்தில் சமத்துவம் சுதந்திரம் சகோதரத்துவதை மலரச் செய்ய பாடுபட வேண்டும். விடுதலைக்கான போராட்டம் கல்வி வளர்ச்சி மற்றும் மனித ஒற்றுமையோடு அழிவிலிருந்து மீட்டு எடுப்பதாக அமைய வேண்டும். 

இந்த நாவல் போர், போராட்டம் வாழ்வின் நெருக்கடிகள், போராட்ட வாழ்வின் போது பொது மக்கள் எப்படியெல்லாம் சித்ர வதைக்கு ஆளானர்கள்? அகதிகள் வாழ்க்கை இந்த காலத்தில் போர் குறித்த விவாதங்கள் போன்ற பல விஷயங்களை பற்றி தெரிந்து கொள்ளும் விதமாக எழுத பட்டுள்ளது. உலக அமைதிக்காகஇந்த நாவலை அனைவரும் வாசிக்க வேண்டும். வெள்ளைப் பூக்கள் உலகமெங்கும் மலர வேண்டும்.

Comments

Popular posts from this blog

செகண்ட் ஷோ நினைவுகள்

சுருளி நினைவுகள் பகுதி -1

சுருளி நினைவுகள் பகுதி -2 : ( கடவுள் எனும் நண்பன் )