ஆறுதல் கடிதங்கள்....!
வாழ்க்கை யாவருக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை. அதிலும் யாரும் யாருடனும் கடைசி வரை இருக்கப்போவதில்லை. இளமை முடிந்து முதிய வயதில் தனிமையில் மனிதர்கள் அனுபவிக்கும் துயரம் மிக கொடுமையானது. இளம் வயதில் மனம் போன போக்கில் சுற்றி அலைந்த கால்கள் இறுதியில் செயல் பட முடியாமல் போன துயரம் யாருக்கும் நடக்கக் கூடாது என்று நாமும் நினைக்கிறோம். கடவுளை வேண்டிக்கொள்கிறோம்.
வாழ்வின் மிகப்பெரும் துயரங்களில் தனித்து விடப்படுதலும், பிரிவும் தான். அதுவும் பிரிவை விட மனிதனை நிலை குலையச் செய்வது எதுவும் இல்லை. உயிருக்கு உயிரான காதலை, குடும்பத்தை, நண்பர்களை, முகம் தெரியாத எத்தனையோ நல்ல அன்பான உறவுகளை நாம் பிரிந்து விட்டிருக்கிறோம். அதுவும் சிறு வயதில் உடன் வாழ்ந்த நண்பர்கள், சொந்த ஊரை பிரிவது மறக்க முடியாத நினைவாக மாறி விடும்.
அனைத்து ஆட்டங்களும் அடங்கிய பின்னர் முதிய வயதில் படுத்த படுக்கையாகி விட்ட பின்னர் நினைவு களைத் தவிர வேறெதுவும் மிஞ்ச போவதில்லை.
தீலிப் குமார் எழுதிய கடிதங்கள் சிறுகதை முதிய வயதில் அடையும் மன நெருக்கடிகள் பற்றி எழுதப் பட்டுள்ளது. பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் குடும்பத்தில் மனிதர்கள் எவ்வாறு நடத்தப்படுகின்றனர்? அதுவும் படுத்த படுக்கையாகி நடக்க முடியாமல் போன முதியவர்களை பராமரிக்க வீட்டில் முழு மனதாக யாரும் தயாராக இருக்க வில்லை என்பதை பெரும்பாலான வீடுகளில் பார்க்கிறோம். அரசு அதிகாரிகள், பெரும் முதலாளி கள், புகழ் பெற்ற அத்தனை மனிதர்களும் படுத்த படுக்கையாகி விட்ட பின்னர் அதே மரியாதையோடு நடத்த படுகிறார்களா? என்ற கேள்வி எழும். அதிலும் குறிப்பாக முப்பது அல்லது நாற்பது வருடம் உழைத்து குடும்பத்தை உருவாக்கி குழந்தை களை படிக்க வைத்து உருவாக்கிய பின்னர் வயதான பின்னர் படுத்த படுக்கையாகி சரியான கவனிப்பில்லாமல் போகிற துயரமும் வாழ்க்கையில் நடந்து கொண்டிருக்கிறது.
நோயுற்று செயலற்று போன பின்னர் சொந்த பிள்ளைகள் கூட அவர்களை பராமரிக்காமல் ஒரங்கட்டுவது மிக மோசமான மனித தன்மையற்ற செயல். மேலும் வார்த்தைகளால் அவர்களை நோகடிப்பதைவிட பெரிய தண்டனை எதுவும் இல்லை.
சொந்த மகனோ மகளோ அல்லது மருமகளோ கூட படுத்த படுக்கையாகி
போன தான் அப்பாவை அம்மாவை தாத்தா பாட்டிகளை, " இதெல்லாம் உயிரோட இருந்து நம்ம உயிரை வாங்குது சீக்கிரம் போய் தொலைய வேண்டியதன என்று அவர்கள் காது படவே சொல்லி காயப்படுத்து வதை நாம் காண்கிறோம்.
" ஊரில் யார் யாருக்கெல்லாம் சாவு வருது ஆனா இது படுத்த படுக்கையாக இருந்து நம்ம உயிரை வாங்குது என்று வயதான தாத்தா பாட்டிகளை பற்றி புகார் சொல்லுவதை நிறைய இடங்களில் நாம் கேட்டிருக்கிறோம். ஆனால் மனிதர்கள் ஒன்றை மறந்து விடுகிறார்கள். எல்லோரும் ஒரு நாள் தாத்தா பாட்டிகளின் வயதை அடையத் தான் போகிறோம். நாளைக்கு நமது பிள்ளைகளும் நம்மை அப்படித்தானே நடத்தும் என்று எப்படி உணராமல் போனார்கள். இத்தனை வருடம் குழந்தைகளை பெற்று வளர்த்து, கடைசி தனக்கு ஒரு வேளை சோறு போட ஆள் இல்லையே என்று பல தாத்தா பாட்டிகள் மனம் நொந்து போயிருக்கிறார்கள்.
இந்த சிறுகதையில் அப்படி முதிய வயதில் விரும்பியதை எதையும் செய்ய முடியாமல் போன தாத்தா தனது நண்பனுக்கு கடிதம் மூலம் தனிமையின் துயரத்தை தணித்து கொள்கிறார். இந்த கதை கவனிக்கபடாமல் போன வயதான தாத்தா பாட்டிகளின் அக தனிமையை, மன நெருக்கடிகளை பேசுகிறது. இதிலும் கூட கடைசி வயது வரை தனது நண்பருக்கு கடிதம் எழுதி வாழ்கிறார் ஒரு தாத்தா. ஆனால் அவரிடம் ஆறுதலாக அக்கறையாக பேச வீட்டில் ஒருவர் கூட இல்லை. இந்த நிலையில் அவருக்கு கடிதம் வாசிக்கவும் எழுதவும் கொண்டு போய் சேர்க்கவும் ஒருவர் உதவி செய்கிறார். அவர்தான் இந்த கதையை சொல்லு வதாக எழுதப் பட்டுள்ளது. மேலும் அந்த கடைசி காலத்தில் அவருக்கு உதவி செய்யும் மனிதர்களும் இருக்கிறார்கள் என்பது எத்தனை பெரிய ஆறுதல்.
அதுவும் தொழில் நுட்பங்கள் பெருகி போன இன்றைய சூழலில் கடிதம் என்ற ஒரு கலையை நாம் முற்றிலும் இழந்து விட்டோம். நாம் மீது அன்பு வைத்துள்ள சிலர் நமக்கு தரும் வார்த்தைகளின் அன்பு தான் கடிதம். அதுவும் நடக்க முடியாமல் யாரையும் நேரில் போய் பார்க்க முடியாமல் படுக்கையில் கிடக்கும் வயதானவர்கள் கடிதங்கள்
மூலம் தான் உயிர் வாழ்கிறார்கள். கடிதம் எழுதுவது அன்பின் வெளிப்பாடு. அக்கறையின் முழு வடிவம். நினைவுகளை காப்பாற்றி வைத்து கொள்ளும் இயந்திரமாக கடிதங்கள் உள்ளன.
Comments
Post a Comment