புயலிலே ஒரு கதை....!

சில நாட்களுக்கு முன் ஒரு நாள் காலையில் மாரியம்மன் கோவிலில் சாமி கும்பிட்டுவிட்டு வேலைக்கு போகும் 60 வயதுக்கு மேல் உள்ள அம்மாவை பார்த்தேன். இந்த வயதிலும் பெண்கள் வேலைக்கு போய்த்தான் வாழ வேண்டிய சூழல் உள்ளது. இது பரவாயில்லை 70 வயதுக்கு மேல் பல் செட் மாட்டிக் கொண்டு கால் நடக்க முடியாத நிலையில் கூட ஹோட்டலில் காய் நறுக்கி பாத்திரம் கழுவும் வேலைக்கு ஒரு பாட்டி தினமும் வேலைக்கு போய் வருவதை தினமும் பார்ப்பேன். சிறு வயதில் கஷ்டபட்டால் முதிய வயதில் நல்லா இருக்கலாம் என்பது எத்தனை பெரிய பொய். ஏன் சிலர் வாழ்நாள் முழுவதும் கஷ்டம் மட்டும் பட்டுக்கொண்டே இருக்கின்றனர். பெரும்பாலான வீடு களில் பெண்கள் குடும்பத்தை பொறுப்பாக கவனித்து க் கொள்ள வேண்டும் என்ற ஒரு காரணமே அவர்கள் தள்ளாத வயதில் கூட அவதி பட காரணம். வயதான பெத்த அம்மாவை வேலைக்கு அனுப்பிவிட்டு குடித்து விட்டு ஊர் சுற்றும் பொறுக்கிகள் இருக்கும் வரை பெண் விடுதலை என்பது வெறும் பேச்சளவில்
மட்டுமே இருக்கும்.

 தென் மாவட்ட கிராமங்களில் மது, குடி பெரிய நோயாக பரவி வருகிறது. இதனால் அதிகம் குடும்ப பெண்கள் தான் பாதிக்க படுகின்றனர் . திருமணமாகி குடிக்கு ஆளாகி வேலைக்கு போகாமல் மனைவியை துன்பறுத்தி வேலைக்கு அனுப்பி குடித்தே சீரழியும் ஆண்கள் கூட்டம் கிராமப்புறத்தில் அதிகரித்து வருகிறது. கோபி கிருஷ்ணன் எழுதிய புயல் சிறுகதை வாசித்து விட்டு வேலைக்கு போகும் பெண்களை பற்றியே சிந்தனையாக இருந்தது. 

முதல் நாள் வேலைக்கு செல்லும் பெண் எதிர் கொள்ளும் பிரச்சனை பற்றி கதை பேசுகிறது. அவள் வெளி உலகம் பற்றிய அவதானிப்புகளை அவள் கணவன் சொல்லி அவளை சமாதானம் செய்கிறான். ஆனாலும் வேலைக்கு போகும் அந்த பெண்ணிற்கு வெளி உலகம் அச்சமூட்டுவதாக இருக்கிறது. ஜெயகாந்தன், அசோகமித்ரன் உட்பட அனைவரும் வேலைக்கு செல்லும் பெண்கள் அடையும் சங்கடங்களை உண்மையாக பதிவு செய்துள்ளனர். அதில் சில நேரங்களில் சில மனிதர்கள் நாவலில் வரும் கங்காவை மறக்கவே முடியாது. 
புயல் சிறுகதை பெண்களின் பார்வையில் ஆண்களும், வெளி உலகமும் எவ்வாறு பெண்களை நடத்துகிறது என்பதை காத்திரமாக பதிவு செய்கிறது. 
 குடும்ப உறவில் உளவியல் பிரச்சனை நாம் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம். இந்த கதையில் ஆண்கள் சிகரெட் பிடிப்பது குடிப்பதின் வழியாக எப்படியாவது மன அழுத்தத்திலிருந்து விடுபட்டு விடுவார்கள் ஆனால் பெண்கள் என்னதான் செய்வது என்று ஒரு வசனம் வருகிறது. இது நமது சமூகத்தின் மிக முக்கியமாக நாம் கவனிக்க மறந்த ஒன்று. ரத்த அழுத்தம், மார்பக புற்றுநோய் போன்ற பெண்கள் பாதிக்கபடும் நோய்களுக்கு மன அழுத்தம் ஒரு காரணம். குடும்ப வேலையில் அவர்களுக்கு ஓய்வே இல்லை எனும் காரணம். உடலை கரைத்துக் கொண்டு குடும்ப நலனுக்காக பெண்கள் ஒடுங்கி போவதுதான் பெண்கள் விடுதலையா என்று யோசிக்க தோன்றுகிறது?

மனித சமூகம் உருவான காலத்தில் இருந்தே பெண் தான் குடும்பத்தை நிர்வாகம் செய்பவளாகவும், ஆண்கள் பொருட் தேடி சம்பாதித்து வருவதாகவும் இருந்து வந்துள்ளது. அதற்க்கு பிறகான மதம் மனித வாழ்க்கை வழிமுறைகளை வகுக்கும் போது பெண்களை ஆண்களின் கட்டுப்பாட்டில் வைத்து விட்டது. இது ஆதிக்க கொடுமையின் ஆரம்பமாக்கும். அன்றிலிருந்து பல மாற்றங்கள் அடைந்து மனித வாழ்க்கை தொழில் நுட்ப ரீதியில் அளப்பரிய வளர்ச்சி அடைந்து விட்டது. ஆனால் பெண்கள் இன்னும் ஆண்கள் கட்டுப்பாட்டில் எதேச்சதிகார போக்கோடு இருக்கிறார்கள். 

எளிய வசதி இல்லாத பொருளாதார ரீதியில் பின் தங்கியுள்ள உடல் உழைப்பு கடினமாக உள்ள குடும்பங்களில் மொத்த சுமையும் பெண்கள் மீது விழுவதால் குடும்பம் வளர்ச்சி சிதைகிறது. ஆண்களின் குடி பழக்கம் வேலைக்கு போகாமல் இருப்பது பெண்களை ஒடுக்கவது போன்றவைதான் இன்றைக்கு சமூக யதார்த்தம். நடுத்தர குடும்ப மற்றும் அதற்க்கும் பின் தங்கிய குடும்பங்களில் இந்த போக்கு அதிகரித்துள்ளது. 

புயல் சிறுகதை குடும்பங்களில் சுழலும் புயலைப் பற்றியது. புயலடித்தால் சேதாரம் அதிகம். குறிப்பாக விவசாயிகள் அதிகம் பாதிக்கப் படுகிறார்கள். அதைப் போல பெண்களும் அடக்குமுறை எனும் புயலில் சிக்கியுள்ளனர். புயலை சமாளிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவைபடுவதை போலவே பெண்களும் கல்வி மற்றும் சுய சார்பு வாழ்க்கை மூலம் ஆணாதிக்கத்தையும் அடிமைத்தனத்தையும் ஒழிக்க வேண்டும். 

Comments

Popular posts from this blog

செகண்ட் ஷோ நினைவுகள்

சுருளி நினைவுகள் பகுதி -1

சுருளி நினைவுகள் பகுதி -2 : ( கடவுள் எனும் நண்பன் )